மாற்றுத்திறனாளிகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்

டிச 05, 2022

ACJU/NGS/2022/389

2022.12.03 (1444.05.08)


மாற்றுத்திறனாளிகள் என்பவர்கள் உடல் உறுப்புகள் அல்லது மன வளர்ச்சி ரீதியாக நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ சவால்களை எதிர்கொள்ளக் கூடியவர்களாவர். இதுவரை உலக நாடுகளால் 22 வகையான விசேட தேவையுடையோர் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.


உலக சனத்தொகையில் சுமார் 15 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். இவர்கள் மனதளவில் தைரியமும் செயல்திறனும் கொண்டவர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர்.


இஸ்லாம் மனிதனை எப்போதும் கண்ணியமான, உயர்ந்த படைப்பாகவே கருதுகிறது. அல்லாஹு தஆலாவிடத்தில் சிறந்தவர்கள் அவனை அஞ்சி வாழக்கூடியவர்களே (இறையச்சம் உடையவர்கள்) என்றும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் சமம் என்றும் அல்குர்ஆன் போதனை செய்கிறது.


மாற்றுத்திறனாளிகளை நாம் எமது குடும்பத்தின் உறுப்பினராக, சமூகத்தின் அங்கமாக மதிப்பதும் அவர்களை ஆதரிப்பதும்; உயர்ந்த நற்கூலியைப் பெற்றுத்தரவல்ல மானுடப் பண்பாகும். அதேபோன்று மனிதர்கள் அனைவரும் ஏதோவொரு வகையில் திறமைகளையும் ஆற்றல்களையும் கொண்டுள்ளனர். அந்தவகையில் அவர்களது திறமைக்கான வாய்ப்புக்களை வழங்கி அவர்களை அங்கீகரிப்பதும் ஊக்குவிப்பதும் சமூகக் கடமையாகும்.


ஒருவரையொருவர் பரிகாசம் செய்ய வேண்டாம் என்றும் குறை கூற வேண்டாம் என்றும் அல் குர்ஆன் மனிதர்களுக்கு கட்டளையிட்டுள்ளது. எனவேதான் மனிதர்களின் உயிர், மானம், செல்வம் ஆகிய மூன்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் உயர்ந்த நோக்கமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.


இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் மதீனத்து மக்களிடையே காணப்பட்ட மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்கின்ற மனப்பான்மையை, வெறுப்புணர்வை அல்குர்ஆன் மாற்றியமைத்தது. அல்லாஹு தஆலா தனது திருமறையில் இதனை பின்வருமாறு குறிப்பிடுகின்றான். 'நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவு உண்பதில் பார்வையற்றோர், நடக்க முடியாதவர்கள், நோயாளிகள் மீது எவ்விதக் குற்றமும் இல்லை.' (ஸுரா அந்நூர் : 61)


மாற்றுத்திறனாளிகளோடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்பாகவும் பண்பாகவும் நடந்து கொண்டார்கள். அவர்களது உரிமைகளை மதித்து நடந்துள்ளார்கள். 'சங்கையான என்னுடைய அடியானிடமிருந்து நாம் ஏதேனும் ஓர் அருட்கொடையை எடுத்துக்கொண்டோம் எனில் அதற்குப் பகரமாக நாம் சுவனத்தைத் தவிர வேறெதையும் கூலியாக வழங்குவதில்லை' (நூல் : ஜாமிஉத் திர்மிதி) என அல்லாஹு தஆலா கூறியதாக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் சுபசோபனம் கூறியுள்ளார்கள்.


அன்றாட வாழ்வில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் அவர்களது அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யும் வகையிலும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.


எனவே மனிதனை சக மனிதனாக மதிக்கும் மானுடம் பேணுவோம். அவர்களுடன் அன்பாகவும் பண்பாகவும் நடந்து கொள்வோம். அல்லாஹு தஆலா வழங்கிய எண்ணற்ற அருட்கொடைகளை பொருந்திக்கொண்டு அவற்றுக்கு என்றும் நன்றியுள்ள அடியார்களாக வாழ்வதற்கு அல்லாஹ் எம்மனைவருக்கும் துணை நிற்பானாக. அத்துடன் உலகெங்கிலுமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அல்லாஹு தஆலா அழகிய பொறுமையையும் நம்பிக்கையையும் அருள வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.

 

முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.