பலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினம்

நவ 29, 2022

ACJU/NGS/2022/388
2022.11.29 (1444.05.04)

பலஸ்தீன் என்பது முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகிய மஸ்ஜிதுல் அக்ஸாவைக் கொண்டிருக்கும் புனித பூமியாகும்.


அதன் பெயர் ஆரம்பகால இஸ்லாமிய வரலாற்று நூல்களில் 'பிலாத் ஷாம்' (ஷாம் பிரதேசம்) என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஹதீஸ்களிலும் இப்பதமே பிரயோகிக்கப்பட்டுள்ளது. ஷாம் பிரதேசமானது இன்றைய சிரியா, லெபனான், ஜோர்தான் மற்றும் பலஸ்தீன் ஆகிய தேசங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பாகும். இப்றாஹீமிய (அலைஹிஸ்ஸலாம்) சமூகத்தைப் (இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம்) பின்பற்றக்கூடிய மக்கள் இங்கே வாழ்ந்து வருகின்றனர்.


அல்குர்ஆன் 'புனித பூமி' என பலஸ்தீனை அழைப்பது போன்று 'பரக்கத் பொருந்திய பூமி' என்றும் குறிப்பிடுகின்றது. ஐந்து இடங்களில்; அல்குர்ஆன் பலஸ்தீன் பற்றிப் பேசும்போது 'பாரக்னா' (நாம் பரக்கத் செய்துள்ளோம்) என்ற பதத்தை அதற்குரிய பண்பாகப் பிரயோகித்துள்ளது.


'தன் அடியாரை (முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச்சென்ற அல்லாஹ் தூய்மையானவன். அந்த மஸ்ஜிதுல் அக்ஸா எத்தகையதென்றால், நாம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை பரக்கத் (அபிவிருத்தி) செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக அவ்வாறு அழைத்துச் சென்றோம்...' என அல்லாஹு தஆலா குறிப்பிடுகின்றான். (அல்குர்ஆன், ஸுறா அல் இஸ்ரா : 01)


இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். '...மூன்று மஸ்ஜித்களுக்கே அன்றி நீங்கள் புண்ணிய பயணம் மேற்கொள்ள வேண்டாம். அவை, மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் எனது இந்த மஸ்ஜிதுந் நபவி என்பனவாகும்.' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


இப்புனிதத் தலங்கள் மூன்றையும் பாதுகாப்பதும் பராமரிப்பதும் முஸ்லிம் உம்மத்தின் நம்பிக்கைக் கோட்பாடு (அகீதா) ரீதியான கடமையாகும். எனினும், 1948 மே 15 இல், பலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் உருவாகிவிட்டதாக பகிரங்கமாக அறிவிப்பு செய்யப்பட்டது. அன்று முதல் அதன் புனிதத்துவமும் தூய்மையும் யூத, சியோனிச படைகளால் களங்கப்பட்டு நிற்கிறது.


'சட்டவிரோதமாகத் தோன்றியுள்ள ஓர் அரசு பலஸ்தீன பூமியில் நிலைத்திருப்பது அத்துமீறிய செயற்பாடாகும். மாறாக, பலஸ்தீனின் பூர்வீகப் பிரஜைகளின் குடியரசு அங்கே உதயமாக வேண்டும். அவர்களுக்கே அங்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும். பலஸ்தீன் பிரச்சினை தீர இதைத்தவிர வேறு எத்தகைய வழியும் இல்லை' என்பதை நீதிக்காக குரல் கொடுக்கும் எந்த சமூகமும் நிச்சயம் ஏற்றுக்கொள்ளும்.


கறுப்பின விடுதலைக்காக குரல் கொடுத்த தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, பலஸ்தீன்; சுதந்திரம் அடையாமல் தென்னாபிரிக்காவின் சுதந்திரம் முழுமையடையாது எனக் கூறியுள்ளார். எனவே தேசியம், இனம், மதம் என்ற எல்லைகளை எல்லாம் தாண்டிய மனிதாபிமான பிரச்சினையாக பலஸ்தீன் விவகாரம் விளங்குகின்றது.


பலஸ்தீனர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உலகளாவிய ஆதரவை பறைசாற்றும் வகையில் பலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினம் நவம்பர் 29 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.


பலஸ்தீனிய பூர்வீகப் பிரஜைகளின் சட்டபூர்வ உரிமைகளை அங்கீகரிப்பதோடு அவர்களது சுதந்திரத்திற்காக ஆதரவு வழங்குவதனூடாக சர்வதேச ஒற்றுமையை வெளிப்படுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மனிதாபிமான அடிப்படையில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது. பலஸ்தீனின் பூர்வீகப் பிரஜைகளின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் பிரார்த்திப்போம்.

 

முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.