ஊழல் எதிர்ப்பு ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

டிச 09, 2022

ACJU/NGS/2022/393

2022.12.09 (1444.05.14)

 

குறிப்பிட்ட ஒருவர் பதவி வழியில் அல்லது பொது அங்கீகாரத்தின் பேரில் தனக்குக் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட இலாபம் அல்லது நன்மை கருதி சட்டத்துக்கும் சம்பிரதாயத்துக்கும் எதிராகச் செயற்படுதல் ஊழல் என வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது. அதாவது உத்தியோகபூர்வ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மேற்கொள்ளப்படும் குற்றங்களின் தொகுதியாகும்.


இலஞ்சம், மோசடி, பலாத்காரம், தீர்மானம் எடுக்கும் உரிமையை தவறாகப் பிரயோகித்தல், அரச சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் அல்லது அரசியல் நியமனங்களின் போது நண்பர்கள், உறவினர்கள் என்ற அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகள், அநீதியான அறவீடுகள், பொதுச் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தல், சட்டவிரோதமான கொடைகள் ஆகிய அனைத்தும் ஊழல் என்ற பதத்துக்குள் அடங்குகின்றன.


மனிதர்களுக்கு நலன் நாடுவதே இஸ்லாமிய சட்டவியலின் அடிப்படை நோக்கமாகும். அற, ஒழுக்கப் பண்புகளையே அது எப்போதும் போதிக்கிறது.


அல்லாஹு தஆலா அல்குர்ஆனில், 'நீங்கள் ஒருவர் மற்றவரின் பொருளை தவறான முறையில் உண்ணாதீர்கள். மேலும் பிற மனிதர்களுடைய பொருட்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதமான முறையில் உண்பதற்காக (இலஞ்சம் கொடுக்க) அது தவறு என நீங்கள் அறிந்து கொண்டே அதிகாரிகளை அணுகாதீர்கள்' எனக் குறிப்பிடுகின்றான். (ஸுறா அல்பகரா : 188)


மேலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'ஒரு விடயத்தில் தீர்ப்புப் பெறுவதற்காக இலஞ்சம் கொடுப்பவனையும் இலஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக' எனக் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)


ஊழல் என்பது சமூகத்தின் மத்தியில் காணப்படுகின்ற புற்றுநோயாகும். தனிநபர்கள், சமூகம் எனப் பரவி இறுதியில் நாட்டின் அபிவிருத்தியையும் தேசிய வளத்தையும் அது செல்லரித்துவிடும்.


சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் ஏற்படுதல், குற்றச் செயல்கள் அதிகரித்தல், அரச சேவை வழங்கல்கள் சீர்குலைதல், நாடு பொருளாதார ரீதியாக நலிவடைந்து வறுமை நிலைக்கு உள்ளாதல், பொருட்களின் விலை அதிகரித்தல், மனித உரிமைகள் மீறப்படுதல், சமூக அநீதி தோன்றுதல், மக்களின் அடிப்படைத் தேவைகளை வழங்குவதற்குக்கூட அரசுக்கு முடியாது போதல், வெளிநாட்டு முதலீடுகளின் வருகை நிறுத்தப்படல் போன்ற எண்ணற்ற, அபாயகரமான எதிர்விளைவுகளை ஒரு நாடு சந்திப்பதற்கு ஊழலே பிரதான காரணியாகும்.


இலஞ்ச, ஊழல் மோசடிகளின் இவ்வனைத்து விளைவுகளையும் அண்மைக்காலமாக எமது நாடு அனுபவித்து வருவதை எவரும் மறுப்பதற்கில்லை. எனவே இனியும் இலஞ்சம், ஊழல், மோசடிக்கு இடமளிக்காதிருப்போம். அவற்றை நியாயப்படுத்துவோர் மற்றும் தனிப்பட்ட, சுய இலாபங்களுக்காக இக்குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுடன் துணை நிற்காதிருப்போம்.


ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கிலும் ஊழல் எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.


எனவே ஊழலற்ற நீதி, நேர்மை, சமத்துவம், பொதுநலம் ஆகிய அடித்தளங்களின் மீது அமையும் ஓரு ஜனநாயக அரசியலுக்கு ஆதரவளிப்போம்.


ஊழல் செயற்பாடுகளை எதிர்ப்பது நாட்டின் அனைத்துப் பிரஜைகளினதும் உரிமையாகும். எனவே ஊழல் செயற்பாடுகள் பற்றி எமது இளம் தலைமுறைக்கு அறிவூட்டுவதோடு இலஞ்சம், ஊழல், மோசடிகளை எதிர்த்து நிம்மதியும் நீதியும் கோலோச்சுகின்ற வளம் பொருந்திய நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அல்லாஹு தஆலா எம்மனைவருக்கும் நல்லருள் பாலிப்பானாக.

 


முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.