ACJU/NGS/2021/138

21.07.2021 / 10.12.1442


அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், ஏனைய உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம். உலகளாவிய ரீதியிலும் நம் நாட்டிலும் கொவிட்-19 தொற்றின் காரணமாக பல வகையிலும் நெருக்கடியான ஒரு சூழலில் தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹாவை நாம் அடைந்திருக்கிறோம்.


இவ்வருடம் குறிப்பிட்ட தொகையினரே ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற அனுமதியளிக்கப்பட்டிருப்பதால் எமது நாட்டில் மட்டுமன்றி ஏனைய நாடுகளிருந்தும் ஹஜ்ஜுக்காக செல்ல நாட்டமிருந்த பலருக்கும் அவ்வாய்ப்பு கிடைக்கவில்லை. நிச்சயமாக அதற்காக நாட்டம் வைத்த அனைவருக்கும் மற்றும் ஏனையோருக்கும் அல்லாஹுதஆலா பூரண நன்மைகளைத் தந்தருள வேண்டுமென இத்தினத்தில் பிராத்தனை செய்கின்றோம்.


நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களினதும், அவர்களது மனைவி மற்றும் குழந்தையினதும் (அலைஹிமுஸ்ஸலாம்) தியாகங்களை நினைவு படுத்தும் முகமாக அல்லாஹ் இத்திருநாளை எமக்கு அருளியுள்ளான். அக்குடும்பத்தினரின் தியாகங்கள் முழு மனித சமூகத்திற்கும் சிறந்த முன்மாதிரியாகும். தனிமனிதர்களின், குடும்பங்களின் மற்றும் சமூகங்களின் தியாகங்கள் மூலமே தேசம் வெற்றிகரமான எதிர்காலத்தை அடைய முடியும். இஸ்லாம் தியாகங்களின் ஊடாகவே வாழ்வில் வெற்றி அடைய முடியுமென்பதை போதிக்கின்றது. இந்நெருக்கடியான காலத்தில் நாட்டினதும் சமூகத்தினதும் நன்மைக்காக தன்னுடைய தனிப்பட்ட ஆசைகளை அர்பணித்து மற்றவர்களுடைய தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.


அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றப் பின்வாங்காத தந்தை மற்றும் மகனின் தியாகத்தை பறைசாற்றும் உழ்ஹிய்யா மற்றும் ஏனைய அமல்களை நாம் இஸ்லாத்தின் போதனைகளுக்கு ஏற்பவும் சுகாதார வழிமுறைகளைப் பேணியும் ஒழுங்காக நிறைவேற்ற முன்வர வேண்டும்.


அதே நேரம் தியாகத் திருநாள் கற்றுத் தரும் தியாக மனப்பாங்கை எம்மில் வளர்த்தல், மார்க்க விடயங்களில் பேணுதலாக இருத்தல், ஏனையோருக்கு உதவிகள் செய்தல், அனைவருடனும் அன்பாக பழகுதல், சகோதர இனங்களோடு ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் நடந்து கொள்ளல் போன்ற நல்ல பண்புகளையும் எம்மில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.


எல்லாம் வல்ல அல்லாஹ் நம் நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் சமாதானமும் ஐக்கியமும் மலர துணைபுரிய வேண்டும் என்றும் கொவிட்-19 பரவலின் தீங்கிலிருந்தும் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.


தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்! ஈத் முபாரக்!

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா