எம்மைப் பற்றி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது தசாப்தங்கள் கடந்து விட்டன. அது ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்றுவரை பன்முகப்படுத்தப்பட்ட சேவைகளைச் செய்து வருகின்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை வாழ் இஸ்லாமிய அறிஞர்களின் தலைமை அமைப்பாகும். இலங்கைத் திருநாடு சுதந்திரமடைவதற்கு 24 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1924 இல் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. அக்காலப்பிரிவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்ந்த நாடுகளில் அவர்களுக்குத் தேவையான சரியான வழிகாட்டல்களை உரிய நேரத்தில் வழங்குவதற்காக இஸ்லாமிய அறிஞர்கள் சபையின் அத்தியவசியத் தேவை உணரப்பட்டது. நமது நாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அதாவது 1919 ஆம் ஆண்டு இந்தியாவில் இதுபோன்றதொரு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதேபோன்று 1923 ஆம் ஆண்டு தென்ஆபிரிக்காவிலும் இதுபோன்றதொரு மார்க்க அறிஞர்கள் சபை உருவாக்கப்பட்டது.

புனித மக்கா நகரை அடிப்படையாகக் கொண்டு இயங்கிவரும் இஸ்லாமிய உலக ஒன்றியம் (Muslim World League) ஆரம்பிக்கப்படுவதற்கு 3 தசாப்தங்களுக்கு முன்னர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆரம்பிக்கப்பட்டது வலியுறுத்திக் குறிப்பிடத்தக்க விடயமாகும். ஏனெனில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கிலும் உருவாக்கப்பட்டதே தவிர சிலர் சுட்டிக்காட்டுவது போன்று வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டதல்ல என்பதை இது உரத்துச் சொல்கின்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவில் அங்கம் வகிப்போரில் 90 மூ த்திற்கும் அதிகமானோர் உள்நாட்டில் கற்றுத் தேர்ந்தோர் என்று தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கைத் திருநாடானது இஸ்லாம் வருவதற்கு முன்னரே அறேபியர்களோடு வியாபாரத் தொடர்புகளையும் நட்புறவுகளையும் பேணிவந்தது. இது அனைத்து இன, மத மக்களுக்கும் புகலிடமாகவும் பாதுகாப்பாகவும் அமைந்த நாடாக காணப்பட்டதை வரலாறு உறுதிப்படுத்துகின்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது 90 வருட பயணத்தில் ஆலிம்கள் பொது மக்கள் துறைசார்ந்தோருக்கு ஆன்மீக ரீதியான வழிகாட்டல்களையும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்கள் அல்லாதோருக்கும் லௌகீக ரீதியான பல பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக முஸ்லிம்களுக்கு மத்தியில் ஐக்கியத்தையும் முஸ்லிம் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தியில் சகவாழ்வையும் கட்டியெழுப்பும் முயற்சியில் ஜம்இய்யா ஈடுபட்டு வருகின்றது.

2000ஆம் ஆண்டு 51ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்ட எமது ஜம்இய்யாவுக்கு நாடளாவிய ரீதியில் மாவட்ட பிரதேசக் கிளைகள் என 145 கிளைகள் உள்ளன. 5500 க்கும் மேற்பட்ட ஆலிம்கள் தற்போது ஜம்இய்யாவில் அங்கம் வகிக்கின்றனர்.

மூன்று வருடத்திற்கொரு முறை  ஜம்இய்யாவின் பொதுத் தெரிவு நடைபெற்று வருகின்றது. அத்தெரிவில் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் அமைப்புக்களையும் சேர்ந்த 33 ஆலிம்கள் அதனது நிறைவேற்றுக் குழுவுக்குத் தெரிவு செய்யப்படுகின்றனர். பொதுத் தெரிவைத் தொடர்ந்து உப குழுக்களும் புதிதாகத் தெரிவு செய்யப்படுகின்றன.

ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுவுடைய மேற்பார்வையின் கீழ் பின்வரும் 15 குழுக்கள் காணப்படுகின்றன. ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், ஆலிம்கள், துறைசார்ந்தோர், முழுநேர ஊழியர்கள் என்று பலரும் இவற்றுக்கு தமது பங்களிப்பை செய்து வருகின்றனர்.

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப குழுக்கள்

 1. ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு
 2. சமூக சேவை மற்றும் தகவற் குழு
 3. கல்விக் குழு
 4. மக்தப் புனரமைப்புக் குழு
 5. பத்வாக் குழு
 6. பிரசாரக் குழு
 7. பிறைக் குழு
 8. வெளியீடு மற்றும் ஆய்வுக்கான குழு
 9. இளைஞர் விவகாரக் குழு
 10. மகளிர் விவகாரக் குழு
 11. ஊடகக் குழு
 12. இஸ்லாமிய பொருளீட்டலுக்கான மதியுரைக் குழு
 13. ஹலால் குழு
 14. ஆலிம்கள் விவகாரக் குழு
 15. கிளைகளுக்கான ஒருங்கிணைப்புக் குழு

ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு

இக்குழு இயக்க ரீதியாக முஸ்லிம் சமூகம் பிளவுபடுதலைத் தடுக்கவும் முஸ்லிம்களுக்கும் மாற்றுமத சகோதரர்களுக்குமிடையில் நல்லுறவைப் பேணவும் உழைத்து வருகின்றது. இஸ்லாமிய அமைப்புக்கள், தஃவா இயக்கங்கள், தரீக்காக்கள் ஆகியவற்றுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வையும் விட்டுக் கொடுப்பையும் ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் உண்டாக்கி ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்காகப் பாடுபட்டு வருகின்றது. அது தொடர்பில் கலந்துரையாடல்களையும் கூட்டங்களையும் மாநாடுகளையும் ஆங்காங்கே ஒழுங்கு செய்து நடாத்தி வருகின்றது. பொதுவாக குத்பாப் பேருரைகள் மூலம் ஒற்றுமையையும் சகவாழ்வையும் மக்களுக்கு வலியுறுத்தி வருகின்றது.

ஒவ்வொரு ஊரிலும் அங்குள்ள ஜம்இய்யாவின் பிரதிநிதிகள் இஸ்லாமிய அமைப்புக்களைச் சேர்ந்த ஆலிம்கள் துறைசார்ந்தவர்கள் புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான உப குழுக்களை நிறுவுவதுடன் தேசிய மட்டத்திலும் சமூகத்தின் அனைத்துத் தரத்தைச் சார்ந்தவர்களினது பிரதிநிதிகளையும் உள்வாங்கி குழுவொன்றை அமைத்து அவர்களது ஆலோசனைகளோடு திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை தற்போது ஆரம்பித்துள்ளது.

பல்லாண்டு காலமாக முஸ்லிம்களுக்கும் மாற்று மத சகோதரர்களுக்கும் மத்தியில் நிலவிவந்த நல்லுறவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள இடைவெளியை நீக்க இக்குழு பாடுபட்டு வருகின்றது. இஸ்லாத்தின் உண்மை நிலையை பிறமத சகோதரர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் வெளியீட்டுக் குழு மற்றும் பிரசாரக் குழுவுடன் இணைந்து பல நடவடிக்கைகளை  மேற்கொண்டுவருகின்றது.

சமூக சேவை மற்றும் தகவற் குழு

இக்குழு சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக உழைத்து வருவதுடன் நிவாரண மற்றும் புனர்நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.

சிறந்த சூழலையும் சிறந்த சமூக கலாசாரப் பண்புகளையும் சுகாதார வாழ்வையும் கட்டியெழுப்ப தன்னாலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் சமூகத்தில் அவ்வப்போது வரும் பிரச்சினைகள், அனர்த்தங்கள் போன்றவற்றில் தலைமை தாங்கி பல்வேறு  சேவைகளைச் செய்து வருகின்றது. சுனாமிää பாரிய வெள்ளப்பெருக்குகள் மற்றும் அளுத்கம வன்செயல்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளின் போது ஜம்இய்யா களம் இறங்கிச் செயற்பட்டது.

முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி மாற்று மதங்களைச் சேர்ந்த சகோதரர்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் தன்னாலான உதவி ஒத்தாசைகளைச் செய்து வருகின்றது. சமூக சேவையில் குறித்த ஒரு நிகழ்வுக்காக சேகரிக்கப்பட்ட பணத்தில், அத்தேவை பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் மீதமாகும் தொகை வேறொரு சமூக சேவைக்காக செலவிடப்படுகின்றது. அதேபோன்று நாடளாவிய ரீதியிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களோடு இணைப்பை ஏற்படுத்தி அதனூடாகவும் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான திட்டங்களை இக்குழு வரைந்துள்ளது.

இன்று எமது நாட்டில் விவாகரத்துகள் அதிகரித்துச் செல்வது கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறு அதிகரித்துச் செல்லும் விவாகரத்துகளை குறைப்பதற்காக நாட்டிலுள்ள ஒவ்வொரு காழி சபைக்கு கீழும்  இணக்கச் சபைகளை உருவாக்க இக்குழு திட்டமிட்டுள்ளது. ஆலிம்கள் மற்றும் உளவளத்துணையாளர்களின் உதவியுடன் அமைக்கப்படவுள்ள இச்சபை காழிமார்களுக்கு விவாகரத்துப் பிரச்சினைகள் சென்றடையும் முன்;னர் பிணக்குடையோரை அணுகி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கும். மது, மாது, சூது போன்றவற்றிற்கு அடிமையாகி இருப்பவர்களை இனங்கண்டு அவர்களுக்குத் தேவையான உளவளத்துணை ஆலோசனை வழங்க ஒவ்வொரு மஸ்ஜித் சம்மேளனங்களுக்கு கீழும் உளவளத்துணை ஆலோசனைகளை வழங்குவதற்கான குழுக்களை அமைப்பதற்கு இக்குழு உத்தேசித்துள்ளது. மன நிலை பாதிக்கப்பட்டு நிம்மதியிழந்தவர்களின் சிகிச்சைக்காக வழிகாட்டுதல் போன்ற வேலைத்திட்டங்களையும் இக்குழு திட்டமிட்டு வருகின்றது. இதன் முதற் கட்டமாக தென்னாபிரிக்காவில் பயிற்சி பெற்ற ஒரு குழுவின் மூலம் உளவளத்துணை ஆலோசனை சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட அனைத்துத் தகவல்களையும் இக்குழு ஆவணப்படுத்தி வருகின்றது. நாட்டிலுள்ள பாடசாலைகள், அறபு மத்ரசாக்கள், மஸ்ஜித்கள், மக்தப்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், துறை சார்ந்தவர்கள்  மற்றும் சமய, சமூகம் சார்ந்த தேவையான அனைத்து தகவல்களையும் இக்குழு சேகரித்து வருகின்றது.

கல்விக் குழு 

ஜம்இய்யாவின் கல்விக் குழு முஸ்லிம் பாடசாலைகள், அறபு மத்ரசாக்கள், பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள், பொது மக்கள் என சமூகத்தின் அனைத்துத் தரத்தைச் சேர்ந்தவர்களும் தத்தமது துறைசார்ந்து நின்று தக்வா மற்றும் தர்பியாவுடன் வாழவும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் கல்வி கலாசாரத்தின் வளர்ச்சிக்காகவும் முஸ்லிம் பாடசாலைகளின் தேவைகளை நிறைவேற்றி வைக்கவும் அவற்றின் கல்வித் தரங்களை உயர்த்தவும் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கையிலுள்ள அறபு மத்ரசாக்களின் கல்வித் தரங்களைக் கண்காணித்து வருவதுடன் அவற்றுக்கிடையிலான ஒருமித்த பாடத்திட்டமொன்றையும் அமுல் செய்திருக்கின்றது.

பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உத்தியோக பூர்வ தொடர்புகளை ஏற்படுத்தி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான தர்பியா நிகழ்ச்சிகளையும் தேவைக்கேற்ப ஒழுங்கு செய்து நடாத்தி வருகின்றது.

 மக்தப் புனரமைப்புக் குழு

குழந்தைச் செல்வம் அல்லாஹ{தஆலாவினால் வழங்கப்படும் மாபெரும் அருட்கொடைகளில் ஒன்றாகும். இந்த அருட்கொடையின் பெறுமதியை விளங்கி அதற்குத் தகுந்தவாறு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதும் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லும் பிரகாரம் வாழ வழிவகுத்துக் கொடுப்பதும் பெற்றோரின் தலையாய கடமையாகும்.

இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள். நாளைய சமூகம்  ஈமானிய உணர்வோடும் இஸ்லாத்தின் உன்னத வழிகாட்டல்களோடும் அறிவு நிறைந்த ஒளிமயமான  சமூகமாக, நாட்டின் நல்ல பிரஜையாக வாழவேண்டுமென்றால் இன்றைய இளைய தலைமுறையினருக்குச் சிறந்த கல்வி, ஒழுக்கம் என்பன வழங்கப்படல் வேண்டும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மக்தப் புனரமைப்புக் குழு இப்பாரிய நோக்கை இலக்காகக் கொண்டே செயற்பட்டுவருகின்றது.

மக்தப் என்ற எண்ணக்கரு இலங்கைக்கு ஒரு புதிய விடயம் அல்ல. 1969 ஆம் ஆண்டு கல்வி மற்றும் கலாச்சார விவகார அமைச்சு வெளியிட்ட பிரசுரமொன்றில்ää கல்வி பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம் என்ற தலைப்பில் கலாநிதி ஏ. எம். ஏ. அஸீஸ் எழுதிய ஒரு கட்டுரையில் மக்தப் கல்வித் திட்டம் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். தற்போது மக்தப் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் நோக்கம், அல்-குர்ஆன் மற்றும் ஸுன்னாவை கற்பதற்கான ஆர்வத்தை முஸ்லிம் சிறார்களுக்குள் தோற்றுவிப்பதாகும். நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டமானது ஜம்இய்யத்துல் உலமாவின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும். இந்த மக்தப் கல்வித் திட்டங்கள் பிரிட்டன், தாய்லாந்து, தென்னாபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட்ட பல நாடுகளில் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

பத்வாக் குழு

அன்றாடம் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு மார்க்கத் தீர்ப்;பினை வழங்கும் அங்கீகாரம் பெற்ற ஒரே நிறுவனமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இயங்கி வருகின்றது. இஸ்லாத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்ப்பளிக்க நீதிமன்றங்களும் ஜம்இய்யாவின் பத்வாவை வேண்டி நிற்கின்றன. நாளாந்தம் உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து  தொலை பேசி மூலமும் மின்னஞ்சல் மூலமும் எழுத்து மூலமும் பத்வாக்கள் கேட்கப்படுகின்றன. அது மாத்திரமின்றி ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்துக்கு நேரடியாகவும் பத்வாக்களைக் கேட்டு வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் பத்வாக்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மாதாந்தம் பத்வாக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. அக்குழுவில் அங்கம் வகிக்கும் நாட்டின் பல பகுதிகளையும்ää அமைப்புக்களையும் சேர்ந்த உலமாக்கள் அன்றைய தினம் தலைமையகத்தில் ஒன்று கூடி சிக்கலான மற்றும் சர்ச்சைக்குரிய விடயங்களை மிகத் தெளிவாக ஆய்வு செய்து பத்வாக்களை எழுத்து மூலம் வெளியிடுகின்றனர். அவ்வாறு எழுதப்பட்டு வெளியிடப்பட்ட பத்வாக்கள் தற்போது 215 பத்வாக்களைத் தாண்டி உள்ளன.

பிரசாரக் குழு

இக்குழு பாவங்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கிவருவதுடன் முஸ்லிம் சமுதாயத்தின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்துப் பிரசாரங்களையும் தேவைக்கேற்ப முன்னெடுத்து வருகின்றது. வழி தவறிய கூட்டங்கள் மேற்கொள்ளும் தவறான மற்றும் பொய்யான பிரசாரங்களை விட்டும் முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பது இக்குழுவின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். அத்துடன் பொது மக்களுக்கும் ஆலிம்களுக்கும் மஸ்ஜித்களுக்கும் தேவையான வழிகாட்டல்களையும் அறிவுரைகளையும் இக்குழு வழங்கி வருகின்றது.   

மஸ்ஜித்களை பதிவு செய்தல், யாப்பை இயற்றுதல், நிர்வாகிகள், இமாம்கள் மற்றும் முஅத்தின்களுக்கான பயிற்சிகளை வழங்குதல்; பைதுல் மால்,  ஸகாத்,  வஸிய்யா, வராஸத், நிர்வாகம், முஸ்லிமல்லாத அயலவர்களுடன் கலந்துறவாடுதல் போன்றன தொடர்பான அறிவுரைகள் கோரப்படும் பட்சத்தில் அவற்றையும் இக்குழு வழங்குகின்றது.

அதேபோன்று ஹஜ் ரமழான் காலங்களில் தேவைப்படும் விசேட வழிகாட்டல்கள், அமைதியான குடும்ப வாழ்விற்கான ஆலோசனைகள் தீய பழக்கங்களில் இருந்து விடுபடுவதற்கான அறிவுரைகள் ஆகியவற்றையும் இக்குழு ஜம்இய்யாவின் கிளைகள் ஊடாக வழங்கி வருகின்றது.   மேலும் மஸ்ஜித்களின்  இமாம்கள் தமது குத்பாப் பேருரைகளை வினைத் திறன்மிக்கதாக அமைத்துக்கொள்ளவும் நவீன சவால்களுக்கு ஷரீஆவின் வரையறைக்குள் நின்று முகம்கொடுக்கவும் பயிற்சிப் பட்டறைகள் மூலம் இக்குழு அவர்களைத் தயாரித்து வருகின்றது.

வழிதவறியவர்களின் பொய்யான பிரசாரங்களில் இருந்து முஸ்லிம்களை பாதுகாக்கும் நோக்குடன் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடாத்தும் பணியிலும் இக்குழு ஈடுபட்டு வருகின்றது. இதற்காக மக்கள் மத்தியில் சென்று முயற்சிகளை மேற்கொள்ள இக்குழு ஆலிம்களை தயார் செய்து வருகின்றது.

பிறைக் குழு

ஜம்இய்யாவின் பிறைக் குழு மாதாந்தம் கொழும்பு பெரிய பள்ளிவாயலுடன் இணைந்து பிறை பார்த்து ஹிஜ்ரிக் கலண்டரை வெளியிட்டு வருகின்றது. அத்துடன் பிறை சம்பந்தமாக மக்களிடம் காணப்படும் தவறான கருத்துக்களைத்  தெளிவு படுத்திச் சரியான நிலைப்பாட்டிற்கு அனைவரையும் கொண்டு வரும் பொருட்டு ஆங்காங்கே பிறை மாநாடுகளையும்ää கருத்தரங்குகளையும் நடாத்தி வருகின்றது. பிறை பார்ப்பதோடு சம்பந்தமான  தீர்மானங்களை ஏகமனதாக எடுத்து அவற்றை அமுல் செய்து வருகின்றது. நாட்டின் தொழுகை நேரங்கள், மஸ்ஜித்களின் கிப்லாத் திசை என்பவற்றைச் சரியாக அமைத்துக்கொள்ள உதவி வருவதுடன் கிரகணம் சம்பந்தமான தெளிவுகளையும் வழங்கி வருகின்றது.

தலைப்பிறைத் தீர்மானம் சம்பந்தமான சர்ச்சைகளைத் தீர்வுக்குக் கொண்டுவரும் பொருட்டு கூட்டாகச் சென்று பிறை பார்க்கும் முறையை ஊக்குவித்து வருவதுடன் ஒவ்வொரு ஊரிலும் அங்குள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதேசக் கிளைகளின்  பிரதிநிதிகள் மற்றும் மஸ்ஜித்கள், முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவொன்றை அமைத்து கூட்டாகப் பிறைபார்ப்பதற்கான வழிகாட்டல்களையும் அதனுடன் சம்பந்தப்பட்ட தேவையான பயிற்சிகளையும் வழங்கிவருகின்றது.

உலகளாவிய ரீதியில் காணப்படுகின்ற பிறை மாதங்களை தீர்மானிப்பதற்கான முறைமைகளுக்கு ஏற்ப உப குழுக்களின் ஒத்துழைப்புடன் ஹிஜ்ரி மாதங்கள் முடிவு செய்யப்படுகின்றன. இதற்காக நாடளாவிய ரீதியில் இருக்கும் பிரதிநிதிகளின் பங்களிப்பும் ஜம்இய்யாவின் கிளைகள் ஊடாக இக்குழுவிற்கு கிடைக்கின்றது. ஹிஜ்ரி மாதங்கள் தொடர்பான அறிவித்தல்களை குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல் மூலம் இக்குழு அனுப்பி வைக்கின்றது. மேலும் இவை தெடர்பான தகவல்களை ஜம்இய்யாவின் இணையதளத்திலும் இக்குழு வெளியிடுகின்றது.

நவீன நுட்பங்களை பயன்படுத்தி முடிவு செய்யப்படும் கிப்லா திசை பல சந்தர்ப்பங்களில் தவறாக அமைவதால் அதனை முடிவு செய்வதற்கு சூரியனை பயன் படுத்துவது தொடர்பாகவும் இக்குழு கவனம் செலுத்தி வருகின்றது.

ஒவ்வொரு இஸ்லாமிய மாத முடிவிலும் அடுத்த மாதத்திற்கான பிறை தென்படுகின்றதா என்பதை பார்ப்பதற்கு சகல முஸ்லிம்களையும் ஊக்குவிப்பதற்கான வழிவகைகளையும் இக்குழு ஆராய்ந்து வருகின்றது.

வெளியீடு மற்றும் ஆய்வுக்கான குழு

அறபு, தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சமூகத்துக்குத் தேவையான முக்கிய வெளியீடுகளையும் மற்றும் பருவ வெளியீடுகளையும் இக்குழு வெளியிட்டு வருவதுடன் தேவைக்கேற்ப மூல நூற்களையும் மொழி பெயர்த்து வெளியிட ஆரம்பித்துள்ளது.

றமழான், ஹஜ் போன்ற காலங்களில் மக்கள் தங்களது இபாதத்களைப் பிற மத சகோதரர்களுக்கு இடைஞ்சல் இல்லாதவாறு மிகச் சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ளத் தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் கைநூற்கள் மூலம் இக்குழு வெளியிட்டுவருகின்றது.

மேலும் ஜம்இய்யாவின் நூலகங்களை பராமரித்தல் மற்றும் இஸ்லாமிய அகீதா கோட்பாடுகளுக்கு மாற்றமாக வெளியிடப்படும் பிரசுரங்கள் தொடர்பாக கண்காணிப்பாக இருத்தலும் அவற்றிற்கு எதிராக தக்க நடவடிக்கை எடுத்தலும் இக்குழுவின் பணிகளாகும். இதேவேளை அல்-குர்ஆனை சிங்கள மொழியில் மொழிபெயர்க்கும் ஜம்இய்யாவின் செயற்பாடும் பூர்த்தியடைந்து வருகின்றது. அதேநேரம் முஸ்லிம் சமூகம் பற்றி எழுந்துள்ள சில சந்தோகங்களுக்கு அறிவுபூர்வமாக தெளிவுகளை வழங்கும் வகையில் “சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல்” என்ற கட்டுரைத் தொடரை ஜம்இய்யா வெளியிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இளைஞர் விவகாரக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழு ஆலிம்களுடன் தொடர்புள்ள சிறந்ததொரு இளைஞர் சமூகத்தைக் கட்டியெழுப்பும் உயர் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழு இளைஞர்களின் தஃலீம், தர்பியா மற்றும் றியாழாத் போன்ற விடயங்களை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றது.

தற்காலத்தில் இளைஞர்கள் மத்தியில் காணப்படும் தீய செயல்களின் விளைவுகளை விளக்கி அவற்றை நமது இளம் சமுதாயத்திடம் இருந்து முற்றாக ஒழிப்பதற்கு இக்குழு அயராது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மது பானம், போதை வஸ்து பழக்கங்களில் இருந்து இளைஞர்களை விடுவித்து அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கு பயிற்சிகளை வழங்குவதும் இக்குழுவின் ஒரு சேவையாகும். அதே போன்று சிறைக்கைதிகளாக இருப்பவர்களுடைய விபரங்களை இக்குழு பெற்று வருவதோடு, அவர்களுக்கு உதவுவதற்கான திட்டங்களை இக்குழு வகுத்து வருகின்றது.

இவைகளுடன் இளைஞர்களுக்கு தேவையான தலைமைத்துவ பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இவை அவர்கள் திருமணம் செய்ததன் பின் சிறப்பாக குடும்பம் நடத்தவும் துணை புரியும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் தமது பிள்ளைகளை ஆலிம்களாகவும் ஹாபிழ்களாகவும் நல்லறிஞர்களாகவும் ஆக்குவதற்கான ஊக்கமும் வழங்கப்படவுள்ளன. இளைஞர்களை பயிற்றுவிப்பதற்கு சிறப்பான கல்வித் திட்டம் ஒன்றின் அவசியத்தையும் இக்குழு இனங்கண்டுள்ளது. ஒவ்வொரு இளைஞரிடமும் மறைந்து காணப்படும் ஆற்றல்களை அடையாளம் கண்டு அவற்றிற்குப் பொருத்தமான வழிகாட்டல்களையும் தொழிற் பயிற்சிகளையும் வழங்கவும் வேலைவாய்ப்பு வங்கி ஒன்றை ஸ்தாபித்து அதனூடாக இளைஞர்களுக்கு வாழ்வாதார வசதிகளை செய்து கொடுக்கவும் இக்குழு திட்டமிட்டு வருகின்றது.   

மேலும் சகவாழ்வு, சகிப்புத்தன்மை போன்ற நற்பண்புகளை வளர்ப்பதற்காகவும் சமூகங்களுக்கிடையே ஒற்றுமை, பரஸ்பர புரிந்துணர்வு போன்றவற்றை மேம்படுத்தவும் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி, விளையாட்டு வைபவங்கள், கலாசார நிகழ்ச்சிகள், செயற்பட்டறைகள், கருத்தரங்குகள், உரையாடல் மேடைகள் போன்றவற்றை ஒழுங்கு செய்யவும் இக்குழு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது.

மகளிர் விவகாரக் குழு

நாடளாவிய ரீதியிலுள்ள ஆலிமாக்களின் தீன் பணிக்கு வழியமைத்துக்கொடுக்கவும் வழிகாட்டவும் அவர்களினூடாக மகளிர் விவகாரங்களைக் கண்காணிக்கவும் இக் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜம்இய்யாவின் மகளிர் விவகாரக் குழு தனது பணிகளைத் துரிதமாகச் செய்து வருகின்றது. இத்திட்டத்திற்கு உதவியாக நாட்டிலுள்ள ஆலிமாக்களின் விபரங்களை இக்குழு திரட்டிக்கொண்டிருக்கிறது.

 நமது சமூக வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் பங்களிப்பு செய்து வரும் எமது தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் தேவையான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேணடும். குறிப்பாக பெண்களுக்கு ஆன்மீகப் பயிற்சிகளை தருவதற்கான மாதாந்த நிகழ்ச்சிகளை நடாத்தவும் முஸ்லிம் பெண்கள் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கிய அரையாண்டு சஞ்சிகை ஒன்றை வெளியிடுவது தொடர்பாகவும் பெண்களோடு தொடர்பான மார்க்க சட்டதிட்டங்களை உள்ளடக்கிய நூற்களை வெளியிடுவது பற்றியும் இக்குழு ஆலோசித்து வருகின்றது.

இதேவேளை இலங்கையில் உள்ள முஸ்லிம் மகளிர் பாடசாலைகள் அனைத்தையும் ஒரு வலையமைப்பிற்குள் அமைத்து அவைகளுடன் தொடர்பாடலை மேற்கொள்வதன் ஊடாக அக்கல்வி சாலைகளில் பயிலும் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்குத் தேவையான ‘தர்பிய்யா’ (பயிற்சிகள்) வழங்கும் ஒரு திட்டம் பற்றியும் இக்குழு ஆலோசித்து வருகின்றது. மேலும் வயதடைந்த முஸ்லிம் யுவதிகளுக்கு மக்தப் வகுப்புக்களை நடாத்தவும் பெண் ஜனாஸா தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவது பற்றிய பயிற்சிகளை பெண்களுக்கு அளிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் திருமணம் செய்யவிருக்கும் பெண்களுக்கான அறிவுரைகள் வழங்கும் ஒரு திட்டத்தை ஆரம்பிக்க இக்குழு  ஆலோசித்து வருவதோடு விவாக விடுதலை கோர எண்ணியிருக்கும் தம்பதிகளுக்கான உளவளத்துணை ஆலோசனை சேவை ஒன்று பற்றியும் திட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. இதற்காக உளவியல் பயிற்சி பெற்றுள்ள முஸ்லிம் பெண்களுடைய ஒத்துழைப்பை பெறவும் இக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் உயர் கல்வி கற்றல், மகப்பேறு, சமூக ஊடகம் போன்ற விடயங்களில் இஸ்லாமிய வரையறைகளுக்குட்பட்டு அறிவுறுத்தல்களை வழங்கவும் இக்குழு எண்ணியுள்ளது. அத்துடன், பெண்களுக்கு அன்றாடம் ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தொலைபேசி மூலம் வழங்கும் ஒரு சேவையை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

ஊடகக் குழு

எமது சமூகம் அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றது. இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் தவறான பொய்யான இட்டுக்கட்டப்பட்ட தகவல்களைக் கொடுத்து மாற்று மத சகோதரர்களின் உள்ளங்களில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய பயத்தையும் தப்பபிப்பிராயங்களையும் ஒரு சாரார் உருவாக்கி வருகின்றனர். இது உலகறிந்த உண்மையாகும்.

எனவே இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றியுள்ள தப்பபிப்பிராயங்களை நீக்கி உண்மை நிலையை நாட்டுக்கும் உலகுக்கும் விளங்கப்படுத்துதல், இஸ்லாமிய அடிப்படைகளை மாற்று மத சகோதரர்களுக்கு தெளிவுபடுத்துவதுடன் சமுதாயத்துக்குத் தேவையான உண்மையான தகவல்களைக் கொடுத்து அவர்களைச் சரியான முறையில் வழிகாட்டுதல்; அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நடவடிக்கைகளை மக்கள் மயப்படுத்துதல் போன்ற உயர் நோக்குடன் ஜம்இய்யா தனது ஊடகக் குழுவை ஆரம்பித்து வைத்துள்ளது. அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக ஜம்இய்யாவின் ஊடகக் குழு தனது பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

 • அச்சு ஊடகம்

அன்றாட வாழ்வில் பொதுவாக நாட்டு மக்களையும் குறிப்பாக முஸ்லிம்களையும் வழிநடாத்தும் வகையில் தேவையான ஊடகச் செய்திகளையும் ஆக்கங்களையும் வெளியிடுதல் மற்றும் விஷேட தினங்கள் சம்பந்தமான இஸ்லாமியப் பார்வையை தெளிவுபடுத்தும் ஆக்கங்களை வெளியிடுதல் போன்றன இதில் உள்ளடங்கும்.

 • இலத்திரனியல்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினதும் அதனது மாவட்டப் பிரதேசக் கிளைகளினதும் நடவடிக்கைகளை மக்கள் மயப்படுத்தும் விதத்தில் நாளாந்த, வாராந்த, மாதாந்த வானொலி மற்றும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை மும்மொழிகளிலும் ஒழுங்கமைத்து நடாத்தல் மற்றும் இணையத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட வானொலி வரிசையொன்றை ஆரம்பித்தல் போன்றன இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

 • சமூக வலைத்தளங்கள்

இஸ்லாத்தைப் பற்றியுள்ள தப்பபிப்பிராயங்களைக் களைந்து இஸ்லாமிய அடிப்படைகளை தெளிவுபடுத்தும் விதத்தில் சிறிய காணொளிகளை மும்மொழிகளிலும் தயாரித்து வலைத்தளத்தில் மேலேற்றம் செய்தவதற்கும் ட்விட்டர், வட்ஸ்அப் போன்ற இணைய நுட்பங்களை விரிவாகப் பயன் படுத்தி வாசகர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ளவும் இக்குழு திட்டமிட்டு வருகின்றது.

இஸ்லாமிய பொருளீட்டலுக்கான மதியுரைக் குழு

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சம்பந்தமான இஸ்லாமிய விளக்கங்களையும் தெளிவுகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றது. வளர்ந்து வரும் நவீன பொருளாதார முறையினைக் கவனத்திற் கொண்டு அவற்றிற்கு முகம் கொடுக்கும் விதத்தில் ஆலிம்களைத் தயாரிக்கும் உயர் நோக்கில் பல்வேறு வதிவிடப் பயிற்சிகளையும் கருத்தரங்குகளையும் நடாத்தி வருகின்றது.

இஸ்லாமிய நிதி மற்றும் பொருளாதாரத் துறைகளுக்கு போன்றே ஸகாத், சதகா, வராஸத் (அனந்தரச் சொத்து) வஸிய்யா போன்ற விடயங்களில் இலங்கை முஸ்லிம்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்குவது இக்குழுவின் முக்கிய பணியாகும். 

பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ள முஸ்லிம்களது தகவல்களை மஸ்ஜித் வாரியாக சேகரித்து, தகுதியுடையோருக்கு நிவாரணங்களை வழங்கவும் வாழ்வாதார மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்கவும் இக்குழு செயற்பட்டு வருகின்றது. அத்துடன், குடும்ப நிலை உட்பட பல்வேறுபட்ட நெருக்கடிகளின் காரணமாக கல்வியை தொடர முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கான உதவிகளும் திறமையுடையோருக்கான தொழில் நுட்பப் பயிற்சிகளும் வழங்க இக்குழு செயற்பட்டு வருகின்றது. இது போன்ற தேவைகளுக்காக மஸ்ஜித்களை மையப்படுத்தி ஸகாத்தை சேகரிக்கும் விடயத்திலும் பைதுல் மாலை உருவாக்கும் விடயத்திலும்  இக்குழு தற்போது கவனம் செலுத்தி வருகின்றது.

மேலும் வஸிய்யா, வராஸத், வக்ப் போன்ற விடயங்கள் தொடர்பான சட்டப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கி வருவது இக்குழுவின் மற்றுமொரு பணியாகும்.

ஹலால் குழு

புதுப் புதுக் கண்டுபிடிப்புகளும் நவீன தயாரிப்புக்களும் அதிகரித்து  சுகமான வாழ்வை நாளாந்தம் அச்சுறுத்தி வரும் இன்றைய காலப்பகுதியில் சுத்தமான, ஹலாலான உணவுகளை மட்டும் உட்கொண்டு அல்லாஹ்வின் பொருத்தத்துடனும் சுகத்துடனும் வாழ வேண்டுமென்ற உயர் நோக்குடனேயே ஹலால் அத்தாட்சிப் படுத்தற் குழு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நவீன உலகின் சவால்களை நன்கறிந்து சுகமான வாழ்விற்கு வழிவகுக்க வேண்டுமென்ற உயர் நோக்கில் சேவையாற்றி வரும் ஜம்இய்யாவின் ஹலால் குழுவால் வழங்கப்பட்ட ஹலால் அத்தாட்சிப் படுத்தற் சான்றிதழ் முஸ்லிம்களால் மாத்திரமின்றி முஸ்லிமல்லாதவர்களாலும் பெரிதும் வரவேற்பைப் பெற்றுது.

இருப்பினும் கடந்த 2014.01.01ஆம் திகதி முதல் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு இப்பொறுப்பினை வழங்க வேண்டுமெனவும் ஷரீஆ சார்ந்த விடயங்களில் மாத்திரம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குறித்த நிறுவனத்திற்கு ஒத்துழைப்பையும் வழிகாட்டல்களையும் வழங்குமெனவும் ஜம்இய்யா தீர்மானித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அத்தனியார் நிறுவனத்தின் தொடர்பு கீழே தரப்பட்டுள்ளது.

ஹலால் அங்கீகார சபை - HALAL ACCREDITATION COUNCIL (HAC)

26-B, Retreat Rd,
Colombo 4.
Sri Lanka.

E Mail: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Website: www.hac.lk

Hotline: +94 117 425 225
Fax: +94 112 588 050

ஆலிம்கள் விவகாரக் குழு

நாடளாவிய ரீதியிலுள்ள ஆலிம்களின் விவகாரங்களைக் கவனிக்கவென ஆலிம்கள் விவகாரக் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக் குழு ஆலிம்களின் நலன்களைக் கவனத்திற் கொண்டு பல்வேறு செயற்திட்டங்களை வகுத்து ஆலிம்களின் விபரங்களையும் சேகரித்து வருகின்றது. தற்போது நாலாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட ஆலிம்கள் ஜம்இய்யாவில் அங்கம் வகிப்பது குறிப்படத்தக்கதாகும். இக்குழுவின் மூலம் கீழ் வரும் சேவைகள் உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன:

 • தியாகத்துடனும் தன்னலம் கருதாமலும் சேவையாற்றி வரும் ஆலிம்களை இனங்கண்டு அவர்களை கௌரவித்தல்.
 • தகைமையும் ஆற்றலும் மிக்க ஆலிம்களைக் கண்டறிந்து அவர்களுடைய உயர்ந்த சேவையை சமூகத்திற்கு பெற்றுத் தருதல்.
 • இஸ்லாமிய உயர் கல்வியைப் பெற ஆர்வமும் ஆற்றலும் உள்ளவர்களை இனங்கண்டு அதற்கான உதவிகளையும் ஊக்கங்களையும் அவர்களுக்கு கொடுத்தல்.
 • மஸ்ஜிதுகளில் சேவையாற்றும் இமாம்களுடைய வாழ்கைத் தரத்தை மேம்படுத்துதல்.
 • தேவையான தொழில் நுட்ப மற்றும் தொழில் பயிற்சிகளை ஆர்வமுள்ள ஆலிம்களுக்கு பெற்றுத் தந்து சுயதொழில் வாய்ப்புக்களை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தல்.

கிளைகளுக்கான ஒருங்கிணைப்புக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு நாடளாவிய ரீதியில் மாவட்ட, பிரதேசக் கிளைகள் என 145 கிளைகள் உள்ளன. மூன்று வருடத்துக்கொருமுறை  மாவட்ட, பிரதேசக் கிளைகள் புனரமைப்புச் செய்யப்படுகின்றன.

எனவே ஜம்இய்யாவின் யாப்பின் பிரகாரம் கிளைகளைப் புனரமைத்து அதனைக் கண்காணித்து வரவும் கிளைகளின் சீரான செயற்பாட்டுக்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கி அவற்றுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணவும் கிளைகளுக்கான ஒருங்கிணைப்புக் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளைகளின் பதவி தாங்குனர்களுக்குத் தத்தமது பிரதேசங்களில் செயற்திறன்மிக்க பணிகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்களை வதிவிடப் பயிற்சி நெறிகளினூடாக இக்குழு வழங்கிவருகின்றது.

இவை போன்ற இன்னோரன்ன சேவைகளில் பங்கேற்று தன்னலம் பாராது உழைத்து வரும் ஜம்இய்யாவின் வளர்ச்சியும் உறுதிப்பாடும் முன்னேற்றமும் முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சியாகவும் உறுதிப்பாடாகவும்  முன்னேற்றமாகவுமே இருக்கின்றது.

எனவே ஒவ்வொருவரும் தமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று ஜம்இய்யாவின் வளர்ச்சிக்காகத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய முன் வர வேண்டுமென ஜம்இய்யா அனைத்து சகோதரர்களையும் அழைக்கின்றது. அல்லாஹ் எம் அனைவரையும் அவன் விரும்பும் பொருந்திக் கொள்ளும் பணிகளுக்காகக் கபூல் செய்து கொள்வானாக! ஆமீன்.