ACJU/NGS/2021/071

2021.05.14 (1442.10.01)


கொவிட் 19 காரணமாக மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் ஒரு மாத காலம் தொடராக நோன்பு நோற்று, நற்காரியங்களில் ஈடுபட்டு பெருநாளைக் கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம்;களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், ஏனைய உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் தமது ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.


இவ்வைரஸ் தொற்றிலிருந்து நம் தாய்நாட்டை மீட்டெடுப்பதற்காக உழைக்கும் சுகாதார சேவையில் ஈடுபடுகின்றவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அத்தியவசிய சேவைகளில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை இந்த நோன்புப் பெருநாள் தினத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்கின்றது.


அநியாயம் இழைக்கப்பட்டவர்களுக்கும், ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களது குடும்பத்தினர்களுக்கும் நீதமும் ஆறுதலும் கிடைக்க வேண்டுமென்றும், நோயுற்றவர்கள் மற்றும் கொவிட் 19 காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு விமோசனமும் மனஅமைதியும் கிடைக்க வேண்டுமெனவும் இந்த புனித தினத்தில் பிரார்த்திக்கின்றோம்.


இவ்வினிய தினத்தில் சுகாதார வழிகாட்டல்களையும் இஸ்லாமிய போதனைகளையும் உரிய முறையில் பின்பற்றுவதுடன் முழு உலக மக்களும், குறிப்பாக எமது தாய் நாட்டு மக்கள் இந்த வைரஸின் தாக்கத்திலிருந்து விடுபட அனைத்து முஸ்லிம்களும் பிரார்த்திக்க வேண்டும்.


நெருக்கடியான நேரங்களில் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை வைப்பதே முஃமின்களின் பண்பாக இருக்கின்றது. அல்லாஹுதஆலா ஒரு விடயத்தை எம்மிடமிருந்து எடுக்கும் போது அதனை விட சிறந்ததொன்றை அதற்கு பகரமாக தந்தருள்வான் என்ற உணர்வு எம்மிடம் வரவேண்டும். 'நிச்சயமாக கஷ்டத்துடன் இலேசு இருக்கின்றது' என்று அல்லாஹுதஆலா அருளுகின்றான். இந்த ஷவ்வால் மாதத்தின் உதிர்ப்புடன் நாம் எதிர்பார்க்கும் சிறந்த, நல்ல விடயங்களும் உதிர்ப்பு பெற ஆதரவு வைப்போம்.


எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா நாம் நோற்ற நோன்பை அங்கீகரித்து அவனது உயரிய நற்கூலியை தந்தருள்வானாக, உலகளாவிய ரீதியில் மக்கள் முகங்கொடுக்கும் அனைத்து சோதனைகளையும் நீக்கியருள்வானாக! ஆமீன்.


அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா