அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருகிணைப்பிற்குமான குழு, கடந்த 2021.10.15 ஆம் திகதி வெள்ளிக் கிழமை கொழும்பு மாநகர சபை தேசிய நூலகம் உட்பட 12 பொது வாசிகசாலைகளின் பிரதானிகளைச் சந்தித்து ஜம்இய்யாவின் சிங்கள மொழியிலான வெளியீடுகளை வழங்கி வைத்தனர்.


இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் உதவிப் பொதுச் செயலாளர் அஷ் ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம், ஒத்துழைப்பிற்கும் ஒருகிணைப்பிற்குமான குழுவின் உதவிச் செயலாளர் அஷ் ஷைக் பரூத் பாரூக் மற்றும் ஒத்துழைப்பிற்கும் ஒருகிணைப்புகுமான குழு அங்கத்தவர் அல் ஹாஜ் அன்வர் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.


வழங்கப்பட்ட வெளியீடுகள்:


1. சிங்கள மொழியிலான புனித அல் குர்ஆன் விளக்கவுரை


2. சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல் என்ற தலைபிலான கைநூல்கள் (சமாஜ சங்வாத)


3. பரந்த பார்வையில் இஸ்லாம் (விவுர்த தேசின் இஸ்லாமய)


4. மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம் (அன்தவாதியெக் நொவமு)


இடம்: கொழும்பு பொதுசன நூலகம், 15 ஸ்ரீ மேர்கஸ் பெர்னான்டோ மாவத்த, கொழும்பு 07


நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்: ஒத்துழைப்பிற்கும் ஒருகிணைப்பிற்குமான குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் சல்மான்

ACJU/NGS/2021/138

21.07.2021 / 10.12.1442


அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், ஏனைய உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம். உலகளாவிய ரீதியிலும் நம் நாட்டிலும் கொவிட்-19 தொற்றின் காரணமாக பல வகையிலும் நெருக்கடியான ஒரு சூழலில் தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹாவை நாம் அடைந்திருக்கிறோம்.


இவ்வருடம் குறிப்பிட்ட தொகையினரே ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற அனுமதியளிக்கப்பட்டிருப்பதால் எமது நாட்டில் மட்டுமன்றி ஏனைய நாடுகளிருந்தும் ஹஜ்ஜுக்காக செல்ல நாட்டமிருந்த பலருக்கும் அவ்வாய்ப்பு கிடைக்கவில்லை. நிச்சயமாக அதற்காக நாட்டம் வைத்த அனைவருக்கும் மற்றும் ஏனையோருக்கும் அல்லாஹுதஆலா பூரண நன்மைகளைத் தந்தருள வேண்டுமென இத்தினத்தில் பிராத்தனை செய்கின்றோம்.


நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களினதும், அவர்களது மனைவி மற்றும் குழந்தையினதும் (அலைஹிமுஸ்ஸலாம்) தியாகங்களை நினைவு படுத்தும் முகமாக அல்லாஹ் இத்திருநாளை எமக்கு அருளியுள்ளான். அக்குடும்பத்தினரின் தியாகங்கள் முழு மனித சமூகத்திற்கும் சிறந்த முன்மாதிரியாகும். தனிமனிதர்களின், குடும்பங்களின் மற்றும் சமூகங்களின் தியாகங்கள் மூலமே தேசம் வெற்றிகரமான எதிர்காலத்தை அடைய முடியும். இஸ்லாம் தியாகங்களின் ஊடாகவே வாழ்வில் வெற்றி அடைய முடியுமென்பதை போதிக்கின்றது. இந்நெருக்கடியான காலத்தில் நாட்டினதும் சமூகத்தினதும் நன்மைக்காக தன்னுடைய தனிப்பட்ட ஆசைகளை அர்பணித்து மற்றவர்களுடைய தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.


அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றப் பின்வாங்காத தந்தை மற்றும் மகனின் தியாகத்தை பறைசாற்றும் உழ்ஹிய்யா மற்றும் ஏனைய அமல்களை நாம் இஸ்லாத்தின் போதனைகளுக்கு ஏற்பவும் சுகாதார வழிமுறைகளைப் பேணியும் ஒழுங்காக நிறைவேற்ற முன்வர வேண்டும்.


அதே நேரம் தியாகத் திருநாள் கற்றுத் தரும் தியாக மனப்பாங்கை எம்மில் வளர்த்தல், மார்க்க விடயங்களில் பேணுதலாக இருத்தல், ஏனையோருக்கு உதவிகள் செய்தல், அனைவருடனும் அன்பாக பழகுதல், சகோதர இனங்களோடு ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் நடந்து கொள்ளல் போன்ற நல்ல பண்புகளையும் எம்மில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.


எல்லாம் வல்ல அல்லாஹ் நம் நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் சமாதானமும் ஐக்கியமும் மலர துணைபுரிய வேண்டும் என்றும் கொவிட்-19 பரவலின் தீங்கிலிருந்தும் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.


தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்! ஈத் முபாரக்!

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


2021.06.04 (1442.10.22)



ஏழை எளியோருக்கும், கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டு அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது சிரமப்படுவோருக்கும் உதவுவதன் மூலம் அல்லாஹ்வின் ரஹ்மத்தை அடைந்து கொள்வோமாக!
எமது நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான நிலை யாவரும் அறிந்ததே. சில பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டும் ஏனைய பகுதிகளில் பிரயாணத் தடை விதிக்கப்பட்டும் இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் நாளாந்தம் உழைக்கக்கூடியவர்கள், கூலி வேலை செய்யக் கூடியவர்கள் என பலரும் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.


எனவே, இத்தகைய சூழலில் அதிக தேவையுள்ளவர்களை இனங்கண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளினூடாக அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்வதற்கான ஒரு வேலைத் திட்டத்தை ஜம்இய்யத்துல் உலமா அறிமுகம் செய்துள்ளது. இதற்கா அங்குரார்ப்பண நிகழ்வு Zoom ஊடாக நேற்று (03.06.2021) மாலை 04.00 மணிக்கு நடைபெற்றது.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு மொத்தமாக 162 மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகள் காணப்படுகின்றன. அந்த ஒவ்வொரு கிளையிலும் நிவாரண ஒருங்கிணைப்பு மையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. அந்த ஒவ்வொரு மையத்திற்கும் உட்பட்ட பகுதிகளில் உணவின்றி தவிப்போர்களுக்கான உதவிகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்கள் ஜம்இய்யாவின் அனைத்து கிளைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.


மிக நெருக்கடியான நிலையில் உள்ளவர்கள் தங்களின் உணவுத் தேவையை, ஜம்இய்யாவின் கிளைகள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் துரித இலக்கத்தினூடாக அந்தந்த பிரதேசத்திலுள்ள ஒருங்கிணைப்பு நிவாரண மையத்திற்கு தெரிவித்தால் அதற்கான உதவிகள் மேற்கொள்ளப்படுவதற்கான முயற்சிகள் அதனூடாக செய்யப்படும். அத்துடன் உதவி வழங்கக்கூடியவர்களும் அப்பிரதேசங்களில் அமைக்கப்படும் நிவாரண மையங்களுக்கு அதன் துரித இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் தமது பங்களிப்புகளை வழங்க முடியும். மேலும் ஏலவே, எந்தெந்த மஸ்ஜித் சம்மேளனங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் இந்த உயர் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனரோ அவர்கள் தொடர்ந்தும் அப்பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளும் அதேநேரம் அவர்களுக்கு ஜம்இய்யா தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.


பசித்தவர்களின் பசியை போக்க முன்வருபவர்களுக்கு ஹதீஸ்களில் பல நன்மாராயங்களும் கூறப்பட்டுள்ளன. அவற்றை பெற்றுக் கொள்வதற்கு இந்த நெருக்கடியான சூழ்நிலையை ஒரு சந்தர்ப்பமாக ஆக்கிக் கொள்வோமாக. ஆமீன்.

 

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2021.06.04

 

01. ஆன்மீக ரீதியான வழிகாட்டல்கள்:


 அல்லாஹ்வின் அன்பையும், அருளையும், நெருக்கத்தையும் பெற்றுத்தரக் கூடிய வணக்க வழிபாடுகளிலும், நற்காரியங்களிலும் அதிகமாக ஈடுபடுவதோடு, எமது கஷ்டங்களையும் துன்பங்களையும் அல்லாஹ்விடம் பொறுப்புச்சாட்டி அவன் மீது பூரண நம்பிக்கை வைத்தல்.


 இச்சோதனைகள் நீங்குவதற்காக ஏலவே அறிவுறுத்தியது போல குனூத் அந்-நாஸிலாவை ஐவேளைத் தொழுகைகளில் ஓதுவதோடு, பாவமான காரியங்களிலிருந்து விலகி, துஆ, திக்ர், குர்ஆன் திலாவத், இஸ்திஃபார், நோன்பு மற்றும் சதகா போன்ற நல்லமல்களில் ஈடுபடல்.


 ஆண்கள், பெண்கள், வாலிபர்கள், வயோதிபர்கள் அனைவரும் தத்தமது வீடுகளில் இருந்தவாறு இச்சோதனை நீங்க அல்லாஹ்விடம் மன்றாடிப் பிரார்த்திக்கும் வழமையை உருவாக்கிக் கொள்வதோடு, காலை, மாலை துஆக்களையும் இந்நோயிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான துஆக்களையும் தவறாது ஓதி வருதல்.


 ஐவேளைத் தொழுகைகளை வீட்டில் உள்ளவர்களுடன் மாத்திரம் சேர்ந்து உரிய நேரத்தில் ஜமாஅத்தாக நிறைவேற்றிக் கொள்ளல்.

 

02. தொற்று நோய்கள் தொடர்பில் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களது வழிகாட்டல்கள்:

 

 தனிமைப்படுத்தல் நபியவர்களின் அறிவுரையாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள் 'சிங்கத்தைக் கண்டால் விரண்டோடுவது போன்று நீ தொழு நோயாளியிடமிருந்து விரண்டோடு'. (புகாரி - 5707)


 பௌதீக இடைவெளியைப் (Physical Distancing) பேணுதல்; நபியவர்களின் கட்டளையாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் 'தொழுநோய் உள்ளவர்கள் ஆரோக்கியமானவர்களிடமிருந்து விலகியிருத்தல் வேண்டும்'. (புகாரி 5771, முஸ்லிம் 2221)


 பயணத்தடை நபியவர்களின் வழிகாட்டலாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள் 'தொற்று நோயிருக்கும் ஊருக்குள் நுழையவேண்டாம். அந்த நோய் ஏற்பட்ட ஊரிலிருந்து வெளியேறவும் வேண்டாம்'. (புகாரி 5729/5730/6973, முஸ்லிம் 2219)


 உங்களுக்கு நோய் அறிகுறிகள் இருந்தால் பிறரை ஆபத்துக்குள்ளாக்க வேண்டாம் என்பது நபியவர்களது போதனையாகும். 'தான் ஆபத்தில் சிக்கிக்கொள்வதுமில்லை, பிறரை ஆபத்தில் சிக்க வைப்பதுமில்லை'. (சுனன் இப்னு மாஜா 2340)


 இது போன்ற சந்தர்ப்பங்களில் வீட்டிலிருத்தல் மிகவும் முக்கியமான அம்சமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'தனக்கு தீங்கு விளைவிப்பதும் கூடாது, பிறருக்கு தீங்கு விளைவிப்பதும் கூடாது. எவர் மற்றவர்களுக்கு தீங்கு செய்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் தீங்கு செய்வான், யார் மற்றவர்களுக்கு கஷ்டங்களை ஏற்படுத்துகிறானோ, அவனுக்கு அல்லாஹ் கஷ்டங்களை ஏற்படுத்துவான்'. ஹாக்கிம் (2345), பைஹகி (11384)


எனவே மேற்படி நபிமொழிகளை பின்பற்றி இந்நோய் பரவாமல் இருக்க நாம் ஒவ்;வொருவரும் முயற்சி செய்ய வேண்டும்.


03. சுகாதார ரீதியான வழிகாட்டல்கள்:

 பயணத்தடை அமுலிலிருக்கும் போது வீட்டைவிட்டு வெளியில் செல்வதை முற்றுமுழுதாகத் தவிர்ந்துக் கொள்ளல். அத்தியவசிய பொருட்களை வீட்டுக்கு விநியோகம் செய்யும் முறையினூடாகப் (Home Delivery) பெற்றுக் கொள்ளல்.


 கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் எம்மனைவரதும் நலனுக்காகவே பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளங்கி பொறுப்புணர்வுடன் அதனை முழுமையாக பின்பற்றி நடத்தல்.


 பயணத்தடை இல்லாத சந்தர்ப்பங்களில் வெளியில் செல்பவர்கள் உரிய முறையில் முகக்கவசம் அணிதல், 1 மீற்றர் அல்லது 3 அடி பௌதீக இடைவெளியை பேணி நிற்றல், சன நெரிசலான இடங்களை தவிர்ந்துக் கொள்ளல், கைகளை அடிக்கடி நன்றாக கழுவிக் கொள்ளல் போன்ற சுகாதார வழிகாட்டல்களைப் பேணி நடந்துக் கொள்ளல். அத்துடன் வீடு திரும்பியவுடன் கைகளை கழுவி நன்றாக சுத்தம் செய்த பின் அல்லது குளித்து ஆடையை மாற்றிய பின் குடும்ப அங்கத்தவர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ளல்.


 கொவிட்-19 இலிருந்து பாதுகாப்பதற்காக தடுப்பூசி ஏற்றிக் கொள்வது பற்றிய மார்க்க வழிகாட்டலை ஜம்இய்யா ஏற்கனவே வழங்கியுள்ளது. எனவே வைத்தியர்களின் ஆலோசனையுடன் உங்களது பகுதியிலுள்ள தடுப்பூசி வழங்கும் இடங்களுக்குச் சென்று அதனை ஏற்றிக் கொள்ளல்.


 கொவிட்-19 தொற்று உங்களுக்கு உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அதுபற்றி உங்கள் பிரதேச பொது சுகாதார அதிகாரிக்கு அறிவித்து, உரிய வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ளல்.


 சுகாதார அதிகாரிகளினால் வெளியிடப்படும் அனைத்து வழிகாட்டல்களையும் சரியாகப் பின்பற்றி நடந்து, இவ்வைரஸின் பரவலைத் தடுக்க அனைவரும் பங்களிப்பு செய்தல்.


 பயணத்தடை மற்றும் தனிமைப்படுத்தல் அறிவுறுத்தல்களுக்கு முரணாக செயற்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறான தருணங்களில் சுகாதார வழிகாட்டல்களையும் பயணக் கட்டுப்பாடுகளையும் பின்பற்றுவதுதே மார்க்கமாகும். மேற்படி வழிகாட்டல்களையும் கட்டுப்பாடுகளையும் புறக்கணிப்பதன் மூலம் நாம் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி உயிராபத்து ஏற்பட்டால் நமக்கு நாமே அழிவை ஏற்படுத்தியதாக அமைந்து விடும் என்பதை நாம் ஒவ்வொருவரும் விளங்கி செயற்பட வேண்டும். மேலும் ஒருவரின் பொடுபோக்கின் காரணமாக இத்தொற்று பிறருக்கு பரவி மரணம் ஏற்பட்டால், பிறர் இந்நோயினால் மரணமானதற்கு அவர் ஒரு காரணமாக ஆகிவிடலாம். இவற்றை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. ஏனெனில் இஸ்லாம் தனக்குத் தானே அழிவை அல்லது தீங்கை ஏற்படுத்திக் கொள்வதை தடுத்துள்ள அதேநேரம் பிறருக்கு அழிவை அல்லது தீங்கை ஏற்படுத்துவதையும் தடுத்திருக்கின்றது.

 

குறிப்பு:


 மஸ்ஜித்கள் விடயமாக சுகாதார அமைச்சு, வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கியுள்ள வழிகாட்டல்களை பின்பற்றி நடத்தல்.
 நிவாரணப் பணிகளை மேற்கொள்பவர்கள் சுகாதார விதிமுறைகளைப் பேணி அதற்கான அனுமதியை குறித்த பிரதேசத்தின் பொலிஸ் நிலையத்தில் பெற்றுக் கொள்ளல்.

Ref: ACJU/MED/2021/002

04.03.2021

 

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி அப்பாவி வழிபாட்டாளர்கள் மற்றும் பலர் மீது உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை அடையாளம் காட்டி, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு முன்வைக்கப்படும் பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் ஆதரிக்கின்றது. இந்த மோசமான தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சகல மதங்களைச் சேர்ந்த சகோதர சகோதரிகளின் வருத்தத்திலும் வேதனையிலும் நாமும் பங்கு கொள்கின்றோம்.

இந்த தாக்குதல்களின் விளைவாக நம் நாட்டில் வாழும் எல்லா இன, மத மக்களுடன் சமாதானமாகவும் இணக்கமாகவும் வாழ்ந்து வந்த இலங்கை முஸ்லிம்களாகிய நாம் மிகவும் பாதிக்கப்பட்டதோடு, அன்னியப்படுத்தப்பட்டவர்களாகவும் பார்க்கப்பட்டோம். இதன் விளைவாக முஸ்லிம்களது அடையாளங்களும் உரிமைகளும் கேள்விற்கு உற்படுத்தப்பட்டு பல இழப்புகளையும் முஸ்லிம் சமூகம் சந்தித்தது.

உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதற்காகவும், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதற்காகவும் நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கின்றோம். ஆகவே, பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோளை நேர்த்தியாக சிந்திக்கக்கூடிய மக்கள் அனைவரும் முழு மனதுடன் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

2019 ஜூலை 21 ஆம் திகதியன்று கட்டுவபிட்டிய புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்கள் இத்தாக்குதல் வழிதவறிய வாலிபர்களை பயன்படுத்தி சர்வதேச சக்திகளின் தேவைகளை நிறைவேற்றிகொள்ள மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்ட வார்த்தைகளை நினைவுகூர்கிறோம்.

பாதிக்கப்பட்டவர்களின் இவ்வுணர்வுகளுடன் நாங்கள் முழு மனதுடன் இணைந்துகொள்வதோடு, குற்றவாளிகளை வெளிப்படுத்துமாறு மேற்கொள்ளப்படும் இவ்வேண்டுகோளில் அனைத்து இலங்கையர்களும் ஒன்றுபடுமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் உரிய பரிகாரம் வழங்குவதன் மூலம் அவர்களுக்கு தேவையான ஆறுதலையும் வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

ACJU/MED/2021/001

 

02.01.2021 (17.05.1442)


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற, அதன் மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய மிகப் பழமையான அமைப்பு என்பதை யாவரும் அறிவர். இந்த அமைப்பு அதன் நூற்றாண்டு காலப் பூர்த்தியை அண்மித்திருக்கும் சந்தர்ப்பம் இது (1344-1442).


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஸ்தாபிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை தனது இலட்சிய பயணத்தை தொய்வில்லாமல் மேற்கொண்டு வருகின்றது, அல்ஹம்துலில்லாஹ். இனிவரும் காலங்களிலும் அல்லாஹ்வின் பேரருளால் அதன் பணிகள் சீராகவும், சிறப்பாகவும் தொடரும் என்ற ஆழமான நம்பிக்கை நமக்குண்டு. வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் இப்பணியை தொடர அருள்பாளிப்பானாக!


அல்குர்ஆன், அஸ்ஸூன்னா, இஜ்மா, கியாஸ் ஆகியவற்றின் அடிப்படையிலும் எமது முன்னோர்களின் வழிகாட்டலின் அடிப்படையிலும் தீனின் மேம்பாட்டுக்காகவும் நாட்டு நலனுக்காகவும் சமூக ஒற்றுமை மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்காகவும் (https://cutt.ly/UjeCIrX) ஜம்இய்யா தன்னாலான பங்களிப்புக்களை செய்து வருகின்றமையை நீங்கள் அறிவீர்கள்.


ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு அதன் மத்திய சபையின் ஒத்துழைப்புடன் இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவம், அன்பு, கலந்தாலோசித்தல், பரஸ்பர புரிந்துணர்வு, விட்டுக் கொடுப்பு, நல்லெண்ணம், தாராளத்தன்மை, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைப் பேணி மிகவும் கட்டுப்பாடாகவும் கட்டுக்கோப்புடனும் இயங்கி வருகின்ற ஒரு முன்மாதிரி அமைப்பாகும். அங்கு வீணான வாதங்கள் முன்வைக்கப்படுவதில்லை. பேதங்கள் பாராட்டப்படுவதில்லை. சண்டை, சச்சரவுகள் இல்லை. எந்தவொரு விவகாரத்திலும் மார்க்கம் சொல்லும் கருத்து வேறுபாடுகளின் போது பேண வேண்டிய ஒழுக்கங்களையும், தர்மங்களையும் பேணி அனைவரும் தத்தமது கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் சுதந்திரமாக முன்வைப்பர்;. இறுதித் தீர்மானம் மிகவும் சுமுகமாகப் பெறப்படும். இதுதான் இன்று வரை பேணப்பட்டு வரும் ஜம்இய்யாவின் பாரம்பரியமும் கலாச்சாரமுமாகும். (https://cutt.ly/UjeCSYB)


ஜம்இய்யத்துல் உலமா மீது அபிமானமும் நம்பிக்கையும் கொண்டுள்ள இலங்கை முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பை வீணாக்கி விடாமல் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்பதில் அது உறுதியாக உள்ளது. எனவே, ஜம்இய்யாவுக்குள்ளும் அதன் நிறைவேற்றுக் குழு மட்டத்திலும் பரஸ்பர நல்லெண்ணமும் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் இன்று வரை வலுவாக இருக்கின்றன என்ற உண்மையை இங்கு சமூகத்திற்கு மிகவும் பொறுப்புணர்வுடன் அழுத்தமாகச் சொல்ல விரும்புகின்றோம். என்றும் போல் ஜம்இய்யத்துல் உலமா அதன் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை அல்லாஹ்வின் துணைக் கொண்டு அதன் சக்திக்கு உட்பட்ட வகையில் நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளது என்பதை இத்தால் உங்களது கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். (அல்லாஹ்வின் அனுகூலமேயன்றி வேறெதுவும் இல்லை).


குறிப்பாக, சமூகம் காலத்திற்குக் காலம் எதிர்நோக்கி வந்துள்ள எல்லா வகையான சவால்களின் போதும் ஜம்இய்யா தனக்கே உரிய பாணியில் அவற்றை எதிர் கொண்டு அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதில் பின் நின்றதில்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்த வகையில் தற்போது சமூகம் எதிர் கொண்டுள்ள கோவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் ஜனாஸாக்களை எரிக்கும் சுகாதாரத் துறையின் நிலைப்பாட்டை மாற்றி அவற்றை அடக்கம் செய்வதற்கான அனுமதியைப் பெறும் முயற்சியில் ஜம்இய்யா தனிப்பட்ட முறையிலும் பிற அமைப்புக்களுடன் இணைந்தும் ஆரம்பம் முதல் இன்று வரை பெருமுயற்சி செய்து வருகின்றது என்பதையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. (https://cutt.ly/njeVu8G)


ஆகவே, சமூகம் பல்வேறு சவால்களுக்கும் அறைகூவல்களுக்கும் முகங் கொடுத்துள்ள இன்றைய கால கட்டத்தில் வீணான சந்தேகங்களைக் கிளப்புதல், வதந்திகளைப் பரப்புதல், வீணான தர்க்கங்களில் ஈடுபடுதல் போன்ற அல்லாஹ்வின் அருளிலிருந்து சமூகத்தை தூரமாக்கும் செயற்பாடுகளிலிருந்து முற்றாக விலகி அவனின் அருளைப் பெற்றுத் தரும் நற்கருமங்களில் ஈடுபடுமாறும் பரஸ்பர ஒத்துழைப்புடன் ஒற்றுமையாக செயற்படுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து முஸ்லிம்களையும் வினயமாக வேண்டிக் கொள்கின்றது.
வஸ்ஸலாம்.

 

அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி                          
கௌரவத் தலைவர்

                                                           

அஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத்                               
கௌரவ பிரதித் தலைவர் 

 

அஷ்ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்

கௌரவ பதில் பொதுச் செயலாளர்

                                               

அஷ்-ஷைக் ஏ.எல்.எம். கலீல் 

கௌரவ பொருளாளர்

 

அஷ்-ஷைக் எச். உமர்தீன்                                                  
கௌரவ உப தலைவர் 

                                                      

 அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக்

கௌரவ உப தலைவர்

 

அஷ்-ஷைக் ஏ.எல்.எம். றிழா                                              
கௌரவ உப தலைவர்     

                                                   

 அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம்

கௌரவ உப தலைவர்

 

அஷ்-ஷைக் எஸ்.எச். ஆதம்பாவா                                   
கௌரவ உப தலைவர்     

                                                    

அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித் 

கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்                                   
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

                       

  அஷ்-ஷைக் கே.எம். அப்துல் முக்ஸித்

கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

அஷ்-ஷைக் எம்.எப்.எம். பாழில்                                       
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர் 

                     

 அஷ்-ஷைக் எம். ஹஸன் பரீத்

கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

அஷ்-ஷைக் அர்கம் நூராமித்                                               
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர் 

                      

 அஷ்-ஷைக் எம்.எச்.எம். யூஸூப்

கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

அஷ்-ஷைக் ஏ.ஸி.எம். பாழில்                                               
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர்

கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 


அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான்                                
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர் 

                        

அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜஃபர்

 கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்                        
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்   

                       

அஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான்

கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான்                                         
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர் 

                         

அஷ்-ஷைக் ஸகீ அஹ்மத்

கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

கலாநிதி அஷ்-ஷைக் அஹ்மத் அஸ்வர்                               
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்   

                        

அஷ்-ஷைக் எம்.இஸட்.எம். நுஃமான்

கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

கலாநிதி அஷ்-ஷைக் எம்.எல்.எம். முபாரக்                         
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்   

                       

அஷ்-ஷைக் எம்.எப்.எம். பரூத்

கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

அஷ்-ஷைக் எம்.ஏ.ஏ.எம். பிஷ்ர்
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

25.12.2020

கொவிட்-19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படல் வேண்டும் என்று சுகாதார துறையினரின் தீர்மானம் அறிவிக்கப்பட்டபோது, குறித்த வைரஸ் தாக்கத்தினால் மரணமடையும் முஸ்லிம்களது ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உரிய தரப்பினருக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏனைய அமைப்புகளோடு சேர்ந்து முன்வைப்பதில் முன்னின்று உழைத்ததை அனைவரும் அறிவர். அந்தவகையில் எமது வேண்டுகோள் கவனத்திற் கொள்ளப்பட்டு, தகனமும் அடக்கமும் என்ற, இருவிதமான அனுமதிகள் கிடைக்கப் பெற்றன. ஆயினும் பின்னர், மீண்டும் அது தகனம் மட்டும் என்ற அடிப்படையில் அரச வர்த்தமானியில் சட்டபூர்வமாக்கப்பட்டது.


அன்று முதல் இன்று வரையில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, துறைசார்ந்தோர், சிவில் அமைப்பினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியைப் பெறும் நோக்கில் தொடர்ந்து உச்சகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.


இது வரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்:


1. 24.03.2020 ஜனாதிபதி, பிரதமர், கெரோனா பாதுகாப்புப் பிரிவு ஆகியோருக்கு ஏனைய நாடுகளை போன்று ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு வேண்டி ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
https://acju.lk/en/news/acju-news/item/2049-letter-to-hep-pm-let-gen

 

2. 31.03.2020 ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், கொரோனா பாதுகாப்புப் பிரிவின் தலைமையகம் மற்றும் டாக்டர் அனில் ஜயசிங்க முதலானோருக்கு மற்றுமொரு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

https://acju.lk/en/news/acju-news/item/2050-a-letter-sent-from-acju

 

3. 31.03.2020 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உறுப்பினர்கள் உட்பட ஒரு குழு, இலங்கை ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடன், கொவிட் -19 பாதிக்கப்பட்டவர்களின் இறந்த உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக ஒரு சந்திப்பை இராணுவத் தலைமையகத்தில் நடத்தியது.

 

4. 31.03.2020 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உறுப்பினர்கள் உட்பட ஒரு குழு, சுகாதார அமைச்சர் திரு பவித்ரா வன்னிஆரச்சி அவர்களுடன், கொவிட் -19 பாதிக்கப்பட்டவர்களின் இறந்த உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக ஒரு சந்திப்பை சுகாதார அமைச்சில் நடத்தியது.


5. 01.04.2020 அன்று தகனம் தொடர்பிலான அதிருப்தியைத் தெரிவித்து ஓர் ஊடக அறிக்கையை ஜம்இய்யா வெளியிட்டது.
English:  https://acju.lk/en/news/acju-news/item/1887-acju-expresses-its-disappointment-with-regard-to-revising-the-method-of-disposal-of-the-covid-19-bodies
தமிழ் : https://acju.lk/news-ta/acju-news-ta/item/1889-19

 

6. 02.04.2020 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் கொவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் ஜனாசா தொடர்பான சமகால பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு விஞ்ஞான பூர்வமாக அறிவிப்பது மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கு வழிகாட்டுதல் வழங்குவது குறித்து முஸ்லிம் புத்திஜீவிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.

 

7. 22.04.2020 ஆம் திகதி தகனம் செய்வது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட விடயம் என்பதை உறுதிப்படுத்தி ஒரு பத்வா ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்டது.
https://acju.lk/en/fatwa-bank/recent-fatwa/item/1958-religious-clarification-with-regard-to-cremating-the-body-of-a-muslim-covid-19-victim

 

8. 07.05.2020 சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.
English : https://acju.lk/en/news/acju-news/item/1935-clarification-on-the-ambiguity-on-burying-the-ashes-of-a-muslim-who-succumbed-to-covid-19-and-request-to-reverse-the-stance-by-permitting-burial
தமிழ் : https://acju.lk/news-ta/acju-news-ta/item/1936-19

 

9. 10.05.2020 சுகாதார அமைச்சருக்கு ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டி ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டது.

https://acju.lk/en/news/acju-news/item/2051-a-letter-to-hon-min-pavithra-wanniarachchi-minister-of-health

 

10. 05.06.2020 மரணித்தவர்களை அடக்கம் செய்வது சம்பந்தமாக ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் தகனம் செய்வது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது என்பதும் அடக்கம் செய்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதும் பல ஆவணங்களை மேற்கோள் காட்டி சுட்டிக்காட்டப்பட்டது.

https://acju.lk/en/news/acju-news/item/1963-opinion-regarding-disposal-of-covid-19-affected-human-remains


11. 10.11.2020 கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கான பொருத்தமான இடத்தை கண்டறிய அதிகாரிகளுடன் சேர்ந்து மன்னார் பிரதேசத்திற்கு விஜயம் செய்யப்பட்டது.


12. 24.11.2020 தெஹிவளை முஹையத்தீன் ஜூம்மா மஸ்ஜிதில் ஜனாசா சம்பந்தமாக முஸ்லிம் அமைப்புக்களுடனான விஷேட கூட்டமொன்று இடம்பெற்றது.

 

13. 10.12.2020 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முஸ்லிம்களது ஜனாஸாக்களை தகனம் செய்ய மார்க்க ரீதியான எந்த அனுமதியும் கிடையாது என்பதை கூறி முஸ்லிம்களது ஜனாஸாக்களை அடக்கும் உரிமையை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

https://www.youtube.com/watch?v=ZCebVqobrZ8&t=1s

https://www.youtube.com/watch?v=KBAOFhrYH38&t=4s

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் சேர்ந்து, இவ்விவகாரமாக சிவில் அமைப்பினர், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எனப் பல தரப்பினரும் தம்மாலான முயற்சிகளில் இன்று வரை தொடர்ந்தேர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். எமது இந்த முயற்சிகளை அல்லாஹ் வீணாக்கப்போவதில்லை என நாம் உறுதியாக நம்புகிறோம். “இன்ஷா அல்லாஹ்” இம்முயற்சிகள் வெற்றி பெற முஸ்லிம்கள் பொறுமையை கடைபிடித்து துஆக்களில், சுன்னத்தான நோன்புகளில், ஸதகா தானதர்மங்களில் குறிப்பாக வணக்க வழிபாடுகளில் தொடர்ந்தும் ஈடுபடுமாறு ஜம்இய்யா பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறது. வல்ல அல்லாஹ் இந்நோயை விட்டும் சகலரையும் பாதுகாத்து நம் அனைவர்களுக்கும் நல்லருள்பாளிப்பானாக!

 


அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

30.10.2020 / 12.03.1442

அகிலத்துக்கோர் அருட்கொடையாக வந்துதித்த நபி முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்புச் செய்தியை வெளியிடுவதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பெருமகிழ்ச்சி அடைகின்றது.


ரபிஉனில் அவ்வல் மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாதமாகும். மனித சமூகத்துக்கு அருளாகவும், அனைவரையும் நேர் வழியின் பக்கம் வழி நடாத்தவும் வந்துதித்த நபி முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த மாதம் இது.


'ரபீஉன்” என்றால் வசந்தம் என்பது பொருள். வசந்த காலம் பூமிக்கு பசுமையையும், அழகையும் கொண்டு வருவது போல 'வசந்தம்' எனப் பொருள்படும் 'ரபீஉனில் அவ்வலில்” பிறந்த நபி முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மனித சமூகத்திற்கு சுபீட்சத்தையும், வெற்றியையும், மகிழ்ச்சியையும், அமைதியையும், மன நிறைவையும் கொண்டுவந்தார்கள்.


இன்றைய உலகின் ஆன்மீகத் தேவையை நிறைவேற்றுவதற்கும் மற்றும் உலக அமைதி, சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் அவசியமான போதனைகளும் வழிகாட்டல்களும் அன்னார் கொண்டு வந்த தீனுல் இஸ்லாத்தில் நிறைவாக உண்டு.


இறைத்தூதர் நபி முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை அளவிலா அன்புடனும் நேசத்துடனும் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவு கூருகின்ற இந் நன்னாளில் அவர்கள் போதித்த மனித நேயம், அன்பு, கருணை, பிறர் நலன் பேணல், நல்லிணக்கத்துடன் வாழ்தல் முதலான பண்புகளை கடைப்பிடித்து வாழ நாம் திட சங்கற்பம் பூணுவோமாக.


நடைமுறையில் இத்தினங்களில் முஸ்லிம்கள் பல்வேறு நற்காரியங்களில் ஈடுபடுவர் என்ற வகையில் அனைவரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் சமூக ஒற்றுமையைப் பேணி, சகோதரத்துவ வாஞ்சையுடன், அடுத்தவர்களின் உணர்வுகளை மதித்தும் நடந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.


கொவிட்-19 தொற்றின் காரணமாக நம் நாட்டு மக்களில் பலர் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்ற சூழலில் இந்த பொன்னான நாளில் தேவையுடைய மக்களுக்கு இன, மத பாகுபாடுகள் இன்றி உதவிக்கரம் நீட்டுமாறும் அனைவரையும் தயவாய் வேண்டிக் கொள்கின்றோம். மேலும் பயங்கர கொரோனா தொட்டின் ஆபத்து நம் நாட்டிலிருந்தும் உலகிலிருந்தும் விரைவில் நீங்கி எல்லோருக்கும் சுபீட்சமான வாழ்வு பிறக்க பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் எல்லோரையும் கேட்டுக் கொள்கின்றோம்.


நமது தாய் மண்ணில் சாந்தியும், சமாதானமும், நல்லுறவும் நல்லிணக்கமும் ஓங்க வேண்டும் என இன்றைய நன்னாளில் எல்லாம் வல்ல அல்லாஹூத் தஆலாவிடம் பிரார்த்திக்கின்றோம்.

 

முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

27.10.2020 /  09.03.1442

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் தலைவரும் தற்போதைய பொதுச் செயலாளருமான அஷ்ஷைக் உஸ்தாத் எம்.எம்.ஏ. முபாரக் (கபூரி, மதனி) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அன்னார் 1991 முதல் 2003 வரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவராகவும் 2003 முதல் 2010 வரை உப தலைவராகவும் சிறப்பாகச் சேவையாற்றியுள்ளார்கள். 2010 முதல் இறுதி மூச்சு வரை கௌரவ பொதுச் செயலாளராக இருந்து ஜம்இய்யாவை வழி நடாத்திய ஒரு பெருந்தகையை இன்று நாம் இழந்திருக்கிறோம். சுமார் 33 வருடங்கள் தான் கல்வி கற்ற கபூரிய்யா அரபுக் கல்லூரியின் அதிபராகவும், ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் சேவையாற்றி கல்விப் பணிக்காகவும் தீனின் வளர்ச்சிக்காகவும் அவர்கள் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை கழித்துள்ளார்கள்.


அன்னார் இந்நாட்டில் பிரபலமான இஸ்லாமிய அழைப்பாளராகவும், சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கினார்கள். அன்னாரின் மறைவு இந்நாட்டு முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும், நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவாகவும் பாரிய இழப்பாகும். இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் செயற்குழு அடங்களாக அனைத்து உலமாக்கள் சார்ப்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது பிழைகளைப் பொறுத்து அன்னாருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக!

 

குறிப்பு : நாட்டில் கொரோனா பாதிப்பின் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவரின் ஜனாஸாவில் கலந்து கொள்ள முடியாதவர்கள் அவருக்காக துஆ செய்யுமாறும், முடியுமானவர்கள் காஇப் (غائب) ஆன ஜனாஸா தொழுகை தொழுதுகொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக்கொள்கின்றது.


அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா