பேராசிரியர்/கலாநிதி கநோக் வுன்ங்டன்கோன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு விஜயம் செய்தார்……….

   இலங்கைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள தாய்லாந்து நாட்டின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,அந்நாட்டுப் பிரதமரின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான பேராசிரியர்/கலாநிதி கநோக் வுன்ங்டன்கோன் நேற்று (2017/09/12ம் திகதி செவ்வாய் கிழமை) மாலை 6:00 மணியளவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.

   அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் தலைவர்,உபதலைவர்,செயலாளர் மற்றும் அதன் உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.அதன் போது அவர் உரையாற்றுகையில் தாய்லாந்து நாட்டின் அறிமுகத்தை வழங்கியதோடு அங்குள்ள முஸ்லிம்கள் பற்றியும் குறிப்பிட்டார்.இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகள் கவலை அளிப்பதாகவும் தெரிவித்த அவர் சமூக ஒற்றுமையை வலியுறுத்திக் கூறியதோடு பிறமதத்தவருடனான சகவாழ்வின் முக்கியத்துவம் பற்றியும் சுட்டிக்காட்டினார்.இஸ்லாத்தின் மீது குறை கூறுபவர்கள் அல்குர்ஆனையும் குறை கூறுவதாகவும் குறிப்பிட்ட அவர் அது அல்குர்ஆனை சரிவர விளங்காத காரணத்தால் தான் நடப்பதாகவும், அல்குர்ஆனில் அல்ல பிழை இருப்பது குறை கூறுபவர்களிடம் தான் என்று கூறியது கோடிட்டு காட்ட வேண்டிய ஒன்றாக அமைந்தது.

   தொடர்ந்து அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் சார்பில் உரையாற்றிய அதன் தலைவர் அஷ்ஷைக் ரிஸ்வி முப்தி அவர்கள் அண்மைக் காலமாக உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் சந்திக்கும் அவல நிலைகள் மிகவும் வருத்தம் அளிப்பதாகவும்,ரோஹின்யா முஸ்லீம்கள் விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து தீர்வு ஒன்றினைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டதோடு ஒற்றுமை பற்றியும்,சகவாழ்வு பற்றியும் எடுத்துக் கூறினார்.

  இலங்கையில் முஸ்லிம்களின் வரலாறு 1000 வருடங்களுக்கு முன்னிருந்து ஆரம்பிப்பதை தெளிவாகக் கூறிய அவர் இந்த நாட்டின் மீது முஸ்லிம்கள் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாகவும்,நாட்டுக்காக அன்று தொடக்கம் போராடி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பற்றிய பேராசிரியர்/கலாநிதி கநோக் வுன்ங்டன்கோன் அவர்களின் கேள்விக்கு தலைவர் பின்வருமாறு பதிலளித்தார் ”இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் 1924ம் ஆண்டு எமது முன்னோர்களால் திட்டமிட்டு இலங்கை முஸ்லிம்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டதன் விளைவாகவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆரம்பிக்கப்பட்டு பல பகுதிகளாக இன்றுவரை செயற்படுவதாக குறிப்பிட்டதோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒவ்வொரு பிரிவு பற்றியும் ஒரு தெளிவை வழங்கினார் தலைவரின் உரையில் வேற்றுமையில் ஒற்றுமை எனும் விடயத்தை வலியுறுத்திப் பேசியது குறிப்பிடத் தக்க விடயமாக அமைந்தது.

  சுமார் 2மணி நேரம் வரை நீடித்த இச்சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் ரிஸ்வி முப்தி,உபதலைவர் அஷ்ஷைக் அப்துல்ஹாலிக் ,பொதுச்செயளாலர் அஷ்ஷைக் முபாரக் ,உட்பட அதன் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.                        

                                                                                                                                                                                                                                                             

                                                                                                                                                                                                                                                                                            ஊடகப்பிரிவு

                                          அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா