புனித ரமழான் மாதம் எம்மை வந்தடைந்து பல நாட்கள் கழிந்து விட்டன. இம்மாதத்தில் அல்குர்ஆன் ஓதுதல், தான தர்மங்கள் செய்தல் போன்ற வணக்க வழிபாடுகளில் முஸ்லிம்களாகிய நாம் அதிகமாக ஈடுபடுவதன் மூலம் அல்லாஹுதஆலாவின் நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். குறிப்பாக ரமழானின் இறுதிப் பத்தில் இஃதிகாப் இருத்தல், கியாமுல் லைலில் ஈடுபடுதல் போன்ற வணக்கங்களை நாம் அதிகமாக மேற்கொள்ள வேண்டும்.
ரமழானின் இறுதிப் பத்து தினங்களில் ஆண்கள் அதிகளவு மஸ்ஜித்களில் நேரங்களை கழிப்பதால் மஸ்ஜித்களுக்கும் ஏனைய முக்கியமான இடங்களுக்கும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்ததாகும். மஸ்ஜித் நிர்வாகிகளும் ஊர் முக்கியஸ்தர்களும் ஜம்இய்யாவின் கிளைகளும் பொலிஸ் மற்றும் உரிய அரச அதிகாரிகளுடன் இணைந்து இவ்விடயத்தில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.
எல்லாம் வல்ல அல்லாஹ் இறுதிப் பத்தை சிறப்பான முறையில் பயன்படுத்தக் கூடிய பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக. மேலும் முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதகமான நிலையைப் போக்கி, அச்சமற்ற சுழ்நிலையை ஏற்படுத்தி, முஸ்லிம்களுக்கு எதிரான தீய சக்திகளின் சதித்திட்டங்களை முறியடித்து, நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தவானாக.
வஸ்ஸலாம்.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாரக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
25.05.2017 / 28.08.1438
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு
பத்வாப் பிரிவின் ரமழான் மாத விஷேட சேவை
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கீழ் இயங்கி வரும் 15 பிரிவுகளில் பத்வாப் பிரிவு முக்கிய இடத்தை வகிக்கின்றது. இப்பிரிவின் மூலம் மக்களுக்கு நாளாந்தம் ஏற்படும் மார்க்கம் சம்பந்தமான சந்தேகங்களுக்கான தெளிவுகள் எழுத்து மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். சிலர் நேரடியாக சமுகமளித்து தமக்கு ஏற்படுகின்ற மார்க்க சம்பந்தமான பிரச்சினைகளுக்கான தெளிவுகளைக் கேட்டறிந்து கொள்கின்றனர்.
கடந்த இரு வருடங்களைப் போன்று புனித ரமழானை முன்னிட்டு ஸகாத் மற்றும் நோன்பு சம்பந்தமான தெளிவுகளை மக்களுக்கு வழங்குவதற்கான விசேட பத்வா சேவையை ஜம்இய்யாவின் பத்வாப் பிரிவு இவ்வருடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சேவை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
துரித இலக்கம் : 0117 490 420
மின் அஞ்ஞல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அஷ்-ஷைக் எம்.எம். எம். இல்யாஸ்
செயலாளர் – பத்வாக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
04.06.2016 (27.08.1437)
ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்!
அல்லாஹ் புனித ரமழான் மாதத்தில் அல்-குர்ஆனை இறக்கி வைத்ததன் மூலம் இதனை சிறப்புப்படுத்தியுள்ளான். இது துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். மேலும் இது முஸ்லிம்களாகிய நாம் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் உலமாக்களின் வழிகாட்டலோடும் அதிகமாக நல்லமல்களை நிறைவேற்றும் மாதமுமாகும்.
துஆக்கள் அங்கீகரிக்கப்படும் இவ்வரிய மாதத்தைப் பயன்படுத்தி நாம் எமது தேவைகளுக்காகவும் உம்மத்துடைய நலனுக்காகவும் அதிகமாக துஆவில் ஈடுபட வேண்டும். குறிப்பாக அன்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்கள் நீங்கி வழமையான வாழ்வுக்குத் திரும்பவும், நாட்டில் ஒற்றுமை, சகவாழ்வு என்பன நிலவவும் நாம் பிரார்த்திக்க வேண்டும்.
ரமழானில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய ஒழுங்குகளும் ஆலோசனைகளும் பின்வருமாறு:
• அல்-குர்ஆன் இறக்கப்பட்ட மாதமான ரமழானில் அதிகளவு அல்-குர்ஆனை ஓதுதல் மற்றும் அதனை விளங்கி நடைமுறைப்படுத்தல்.
• இபாதத்களில் அதிகளவு கவனம் செலுத்துவதுடன் இரவு நேர வணக்கங்களில் ஈடுபடுதல். இதன் மூலம் நேரத்தை வீணாக்குவதைத் தவிர்ந்து கொள்ளல்.
• கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளாது உலமாக்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப நிதானத்துடன் நடந்து கொள்ளல்.
• ஆடம்பர இப்தார் நிகழ்ச்சிகள் போன்ற அவசியமற்ற செலவுகளைத் தவிர்த்து ஏழைகளையும் தேவையுடையோரையும் அடையாளம் கண்டு ஸக்காத் மற்றும் சதகா போன்றவற்றை வழங்கி உதவி செய்தல். குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை இனங்கண்டு தனிப்பட்ட ரீதியிலும் கூட்டாகவும் அவர்களுக்கு உதவி செய்தல்.
• ஏழைகளுக்கு ஸஹ்ர் மற்றும் இப்தாருக்கான ஏற்பாடுகளை செய்தல்.
• இளைஞர்கள் மஸ்ஜித்களில் இபாதத்கள் முடிந்தவுடன், இரவு நேரங்களில் பாதைகளில் விளையாடுதல் போன்ற பிறருக்கு இடையூறு செய்யும் விடயங்களை முற்றாகத் தவிர்ந்து கொள்ளல். மேலும் பெற்றௌரும் பொறுப்புவாய்ந்தவர்களும் இவ்விடயத்தில் கண்காணிப்புடன் செயற்படல்.
• இரவுநேர இபாதத்களில் ஈடுபடும் போதும் பயான்களின் போதும் பிறருக்கு இடையூறு ஏற்றபடாத வகையில் ஒலிபெருக்கி சத்தத்தை மஸ்ஜிதுக்குள் மாத்திரம் வைத்துக் கொள்ளல்.
• ஸஹர் நேரங்களில் பிறருக்கு இடையூறு ஏற்படும் வகையில் வானொலிச் சத்தத்தை உயர்த்தாதிருத்தல்.
• உங்கள் வீடுகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை அயலிலுள்ள முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதோர் அனைவருக்கும் கொடுத்தல் போன்ற நற்பணிகளில் ஈடுபடுதல்.
• பெண்கள் தொழுகைக்காக வெளியில் செல்லும் போது ஷரீஆ வரையறைகளைப் பேணி உரிய பாதுகாப்புடன் செல்லல். ஆண்கள் இது குறித்து சிறந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்தல்.
• மஸ்ஜித்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தும் போது பாதசாரிகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கு இடைஞ்சல் இல்லாது நடந்து கொள்ளல்.
• மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகளும் மஸ்ஜித் நிர்வாகங்களும் முஸ்லிம் சமூகமும் ஒத்துழைப்புடன் செயற்படல்.
எனவே, இப்புனித ரமழானை சரியாகப் பயன்படுத்திக் கொள்வோமாக. எல்லாம் வல்ல அல்லாஹ் எமது பிராh;த்தனைகளை அங்கீகரித்து நாட்டில் ஐக்கியம், சகவாழ்வு வளரவும் புரிந்துணர்வோடு வாழவும் நல்லருள் பாலிப்பானாக.
வஸ்ஸலாம்.
அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா