இலங்கை முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வந்த சட்டமாக முஸ்லிம் தனியார் சட்டம் காணப்படுகிறது. அன்று தொட்டு இன்று வரை நடைமுறைப் படுத்தப்பட்டுவந்த இந்த சட்டத்தை பேணிப் பாதுகாப்பது முஸ்லிம்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
1972 ஆம் ஆண்டு கலாநிதி எச்.எம். இஸட் பாரூக் அவர்களின் தலைமையிலும், 1990 ஆம் ஆண்டு கலாநிதி ஏ.எச்.எம். ஷஹாப்தீன் அவர்களின் தலைமையிலும் நியமிக்கப்பட்ட கமிட்டிகள் குறித்த சட்டத்தில் பாரிய அளவு மாற்றங்கள் தேவையில்லை என்று குறிப்பிட்டிருந்தன. இவர்களது சேவைகளை நாம் பெரிதும் பராட்டுகின்றோம்.
2009 ஆம் ஆண்டு அப்போதைய நீதியமைச்சராக இருந்த மிலிந்த மொரகொட அவர்களால் முன்னாள் பிரதம நீதியரசர் ஸலீம் மர்சூப் அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு அங்கத்தவர்கள் நீண்ட காலமாக பல சிரமங்களுக்கு மத்தியில் இது விடயமாக செயற்பட்டது பராட்டுக்குரியதாகும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பொறுத்த வரையில் ஷரீஆவிற்கு முரணற்ற வகையில் காலத்தின் தேவைக்கு ஏற்ப கட்டாயமாக மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருந்து கொண்டு, அன்று தொட்டு இன்று வரை தனது பங்களிப்பை இக்கமிட்டிக்கு வழங்கி வந்தது. அதே நேரம் அல்-குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரணான, பெரும்பான்மையான புகஹாக்களின் கருத்துகளுக்கு மாற்றமான கருத்துக்களும் திருத்தங்களும் கொண்டு வரப்படும்போது ஜம்இய்யா தனக்கு முடியுமானளவு தெளிவுகளை கமிட்டி உறுப்பினர்களுக்கு வழங்கியது இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்க விடயமாகும். குறித்த இக்கமிட்டி ஜம்இய்யாவின் பத்வா குழுவையும் பல தடவைகள் சந்தித்தது.
எனினும் கமிட்டியின் சிலர் சில விடயங்களில் ஷரீஆவிற்கு முரணான அல்லது பெரும்பான்மையான புகஹாக்களின் கருத்துக்களுக்கு மாற்றமான கருத்துக்களை முன்வைத்த போது, அதுபற்றி எடுத்துக் காட்டப்பட்டு தெளிவுகள் வழங்கப்பட்ட பின்பும் அக்கருத்துக்களை மாற்றிக் கொள்ள தயாரற்ற நிலையில் இருந்ததால் கமிட்டியில் உள்ள பெரும்பான்மையானோர் ஒன்றிணைந்து தனியான ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டனர் என்ற தகவல் எமக்கு கவலையை தருகின்றது. உண்மையில் ஷரீஆவிற்கு முரணான அல்லது பெரும்பான்மையான புகஹாக்களின் கருத்துக்களுக்கு மாற்றமான அக்கருத்துக்கள், 2008 ஆம் ஆண்டு ஏலவே வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளுக்கு ஒத்ததாக காணப்பட்டமை பலராலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ஷரீஆவிற்கு முரணற்ற வகையில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ள அறிக்கையில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களும், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் யாப்புக் கவுன்ஸில் உறுப்பினர் ஷிப்லி அஸீஸ் அவர்களும், நீதிபதி ஏ.டப்லியு. ஏ. ஸலாம் அவர்களும், நீதிபதி எம். மக்கி அவர்களும், ஜாமியா நளீமிய்யாவின் பணிப்பளர் கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி அவர்களும், காழிமார்கள் சபையின் முன்னாள் தலைவர், சட்டத்தரணி நத்வி பஹாவுத்தீன் அவர்களும், சட்டத்தரணி பஸ்லத் ஷஹாப்தீன் அவர்களும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம் ரிஸ்வி முப்தி அவர்களும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்களும் உட்பட மொத்தமாக ஒன்பது பேர் கையொப்பமிட்டு தனியாக சமர்ப்பித்துள்ளமை ஊடகங்களில் எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த கமிட்டிக்கு வழங்கப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தத்திற்கான முன்மொழிவுகளை உள்ளடக்கிய விரிவான அறிக்கை மக்கள் பார்வைக்காக அதனுடைய இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளது. எனினும் இம்முன்மொழிவுகள் உரிய முறையில் உள்வாங்கப்பட்டதா என்பது கேள்விக் குறியாகும்.
பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்ட அந்தக் காலத்தில் பெண்களின் உரிமைகள் பற்றி உலகுக்கு கற்றுக்கொடுத்தது இஸ்லாமாகும். அது பெண்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் நீதமான முறையில் வழங்கியுள்ளது. அந்தவகையில் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என்ற கருத்திலேயே அன்று தொட்டு இன்று வரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இருந்து வருகின்றது.
அந்த வகையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது பரிந்துரையில் பிரச்சினைகளை முறையீடு செய்வதற்கான ஒரு ஆலோசனை சபை இருக்க வேண்டும் என்றும் அதில் பெண்கள் இருவருக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்றும் கலாசார மற்றும் சமூக ரீதியான விடயங்கள் கருத்திற் கொள்ளப்பட்டு, திருமணப் பதிவாளர்களாக பெண்கள் நியமிக்கப்பட முடியும் என்றும் விவாகப் பதிவுப் பத்திரத்தில் மணமகளின் விருப்பத்தை உறுதிப்படுத்தும் வகையிலான கையொப்பம் கண்டிப்பாகப் பெறப்பட வேண்டும் என்பதையும் ஒவ்வொரு காதி நீதிபதிக்கும் பயிற்றுவிக்கப்பட்ட திருமண ஆலோசகர்களையும், மத்தியஸ்த்தர்களையும் கொண்ட குழு ஒன்று உதவியாக இருத்தல் வேண்டும் என்றும் இவ்வாறான ஒவ்வொரு குழுவிலும் அதிகப்படியான பெண்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஜம்இய்யா தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. அத்துடன் ஒரு கணவர் ம(த்)தாவில் இருந்து விடுபடுவதற்காக மனைவியை பஸ்க் செய்ய நிர்ப்பந்திக்கும் பட்சத்தில் காழி ம(த்)தா கொடுப்பனவை கணவன் மீது கட்டளையிடலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளை சில பெண்ணிலைவாதக் குழுக்கள் ஊடகங்களினூடாக பரப்பிய போதும் சமூகத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக மிகவும் அமைதியாகவும், நிதானமாகவும் இதன்போது ஜம்இய்யா செயற்பட்டது.
பல்லாண்டு காலமாக முஸ்லீம்களால் பாதுகாக்கப்பட்டு வந்த இச்சட்டத்தை தொடர்ந்தும் பாதுகாத்து எமது உரிமைகளை உரிய முறையில் பெற்றுக் கொள்ளவும், எமது கடமைகளை சரியாக நிறைவேற்றவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக ஆமீன்.
அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் - பிரசாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
இலங்கையில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களால் பின்பற்றப்பட்டு, பேணப்பட்டுவந்த சட்டமாக முஸ்லிம் தனியார் சட்டம் காணப்படுகின்றது. அன்று தொட்டு இன்று வரை நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த இந்த சட்டத்தைத் தொடர்ந்தும் பேணிப்பாதுகாப்பது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
சர்வதேச அழுத்தம் காரணமாக அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் தீய சக்திகளின் தூண்டுதல்கள் காரணமாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஷரீஆவிற்கு முரணில்லாத வகையில் தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. இதன் ஒரு கட்டமாகவே 2009 ஆம் ஆண்டு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஸலீம் மர்ஸுப் அவர்களின் தலைமையில் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கான திருத்தங்களை முன்மொழிவதற்கான ஒரு உப குழு நியமிக்கப்பட்டு, அதன் இறுதி அறிக்;கை தற்போது வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் சில சர்வதேச அழுத்தங்கள் காரணமாக முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்திற்கான புதியதொரு குழு நியமிக்கப்படுவது எவ்வகையிலும் பொருத்தமானதாக அமையாது என்பதை அரசாங்கத்திற்கு மிகவும் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தங்கள் இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக மேற்கொள்ளப்படாமலிருக்க உலமாக்கள், துறைசார்ந்தவர்கள் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விழிப்புடன் செயற்படவேண்டும். இவ்விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் உரிய தரப்பினருடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.
இஸ்லாம் சமூக நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை வலியுறுத்தும் மார்க்கமாகும். தீமையைச் சுட்டிக் காட்டும் போது மென்மையை கடைபிடிக்குமாறு இஸ்லாம் எமக்குப் போதிக்கின்றது. முஸ்லிம் சமூகம் தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள முன்னெடுக்கும் செயற்பாடுகள் இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டதாகவும் நிதானமானதாகவும் அமைய வேண்டும்.
இஸ்லாம் எமக்குக் கற்றுத்தந்துள்ள பேச்சு ஒழுங்குகளையும், உயரிய பண்பாடுகளையும் நிலைநிறுத்தாது நாம் செயற்பட்டால் அல்லது சமூக வலைத்தளங்களில் எழுதினால் இஸ்லாம் பற்றிய பிழையான புரிதலை மாற்றுமத சகோதரர்களிடையே ஏற்படுத்திய குற்றத்திற்கு நாம் ஆளாகிவிடுவோம். இவ்வாறான பிழையான நடவடிக்கைகளை ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் இவை இஸ்லாத்திற்கு எதிராக செயற்படும் கடும்போக்குவாதிகளுடைய தீய திட்டங்களை செயற்படுத்துவதற்கு வழியமைத்துக்கொடுப்பதாகவே அமையும் என்பதையும் ஜம்இய்யா கூறிக்கொள்ள விரும்புகின்றது.
அதேபோன்று ஒருசிலரின் இவ்வாறான தீவிர செயற்பாடுகள் மொத்த முஸ்லிம் சமூகத்தின் நடவடிக்கையாக ஒருபோதும் பார்க்கப்படக்கூடாது என்பதை ஜம்இய்யா வலியுறுத்தி கூறிக்கொள்கினறது. அத்துடன் பல்லாண்டு காலமாக இந்நாட்டில் முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் காணப்பட்டு வரும் ஒற்றுமையும் சகவாழ்வும் தொடர்ந்தும் பேணப்பட அரசாங்கம் உட்பட சகல தரப்பினரும் முனைப்புடன் செயற்படவேண்டும் என ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா