27.10.2020 / 09.03.1442
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் தலைவரும் தற்போதைய பொதுச் செயலாளருமான அஷ்ஷைக் உஸ்தாத் எம்.எம்.ஏ. முபாரக் (கபூரி, மதனி) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அன்னார் 1991 முதல் 2003 வரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவராகவும் 2003 முதல் 2010 வரை உப தலைவராகவும் சிறப்பாகச் சேவையாற்றியுள்ளார்கள். 2010 முதல் இறுதி மூச்சு வரை கௌரவ பொதுச் செயலாளராக இருந்து ஜம்இய்யாவை வழி நடாத்திய ஒரு பெருந்தகையை இன்று நாம் இழந்திருக்கிறோம். சுமார் 33 வருடங்கள் தான் கல்வி கற்ற கபூரிய்யா அரபுக் கல்லூரியின் அதிபராகவும், ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் சேவையாற்றி கல்விப் பணிக்காகவும் தீனின் வளர்ச்சிக்காகவும் அவர்கள் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை கழித்துள்ளார்கள்.
அன்னார் இந்நாட்டில் பிரபலமான இஸ்லாமிய அழைப்பாளராகவும், சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கினார்கள். அன்னாரின் மறைவு இந்நாட்டு முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும், நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவாகவும் பாரிய இழப்பாகும். இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் செயற்குழு அடங்களாக அனைத்து உலமாக்கள் சார்ப்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது பிழைகளைப் பொறுத்து அன்னாருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக!
குறிப்பு : நாட்டில் கொரோனா பாதிப்பின் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவரின் ஜனாஸாவில் கலந்து கொள்ள முடியாதவர்கள் அவருக்காக துஆ செய்யுமாறும், முடியுமானவர்கள் காஇப் (غائب) ஆன ஜனாஸா தொழுகை தொழுதுகொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக்கொள்கின்றது.
அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா