2016.03.02 (1437.05.21)

ACJU/NGS/03-16/001

இஸ்லாம் இனிமையான மார்க்கமாகும். அது அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கமாகும். அதன் போதனைகள் அனைவரையும் கவரக்கூடியவை. அது மென்மை, விட்டுக்கொடுப்பு, தயாள குணம், சகிப்புத்தன்மை, இங்கிதம் முதலான அருங் குணங்களை போதிக்கும் மார்க்கமாகும். மாற்றுக்; கருத்துடையோரோடு மாத்திரமன்றி, முஸ்லிம் அல்லாதவர்களுடனும் நளினமாகவும் பண்பாடாகவும் நடந்து கொள்ளுமாறும் விவேகத்துடன் அழகிய உபதேசத்தைக் கொண்டு அழைக்குமாறும் கட்டளையிடுகின்ற மார்க்கம் இஸ்லாம் ஆகும்.

மென்மையாகவும் நளினமாகவும் உபதேசம் புரியுமாறும் அழைப்பு விடுக்குமாறும் வழிகாட்டும் இஸ்லாம், எல்லா விடயங்களிலும் மென்மையையும்; நளினமான போக்கையும் விலியுறுத்துகிறது.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான மார்க்கம் அசத்தியத்தை விட்டு சத்தியத்தில் நிலைத்து நிற்கின்ற இலகுவான மார்க்கமாகும்.” (முஸ்னத் அஹ்மத் : 5/266)

மற்றொரு தடவை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். “நிச்சயமாக இஸ்லாம் எளிதானது. இம்மார்க்கத்தை யார் (தன் மீது) சிரமமானதாக ஆக்கிக் கொள்கின்றாரோ அது அவரை மிகைத்துவிடும்.” (ஸஹீஹுல் புகாரி- ஹதீஸ் எண்: 39)

எனவே, நாம் எமது சகல நடவடிக்கைகளிலும் குறிப்பாக குத்பாப் பிரசங்கங்கள், உரைகள் முதலான தஃவாப் பணிகளின் போதும் நளினமான போக்கை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். நளினம், அல்லாஹ் விரும்பும் ஒரு நற்குணமாகும்.

ஒரு தடவை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களைப் பார்த்து,
" إن الله يحب الرفق في الأمركله "
“ஆயிஷா! நிச்சயமாக எல்லா விடயங்களிலும் மென்மையாக நடந்து கொள்வதையே அல்லாஹ் விரும்புகின்றான்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி- ஹதீஸ் எண்: 6024)

தானே இரட்சகன் என்று வாதாடிய பிர்அவ்னிடம் சென்று மென்மையாக பேசுமாறு நபி மூஸா, நபி ஹாரூன் (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகிய இருவருக்கும் அல்லாஹ் கட்டளையிட்டான். அது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
;" فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا "
“நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையாகப் பேசுங்கள்;.” (ஸுரா தாஹா: 44)

நபிமார்கள் தங்களது தஃவா களங்களில் மிக மோசமான எதிர்ப்புகளை சந்தித்தபோதும் மிகவும் பண்பாடாக, நளினமாக நடந்து கொண்டார்கள். அதற்கு பின்வரும் நிகழ்வு சிறந்த சான்றாகும்: இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை நோக்கி அவரது தந்தை, “நீர் இந்தப் பணியிலிருந்து விலகிக் கொள்ளாவிடின் உம்மைக் கல்லால் எறிந்து கொன்று விடுவேன். இனி நீர் என்னை விட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடு” என்று எச்சரிக்கை விடுத்தபோது இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்,
" قال سلام عليك سأستغفرلك ربي إنه كان بي حفيا "
“உங்கள் மீது சாந்தி உண்டாவதாக! மேலும் என் இறைவனிடம் உமக்காகப் பிழைபொறுக்கத் தேடுவேன்;. நிச்சயமாக அவன் என் மீது கிருபையுடையவனாகவே இருக்கின்றான்” (ஸுரா மர்யம்;: 47) என்று பதிலளித்ததை அல்குர்ஆன் பதிந்து வைத்திருக்கிறது.

அவ்வாறே நபி நூஹ், நபி ஹ_த், நபி ஸாலிஹ் மற்றும் நபி ஷுஐப் (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகியோர் தமது சமூகத்தவர்களிடம் தஃவாப் பணிகளை மேற்கொண்டபோது எந்தளவு தூரம் மென்மையாகவும் நளினமாகவும் நடந்து கொண்டார்கள் என்பதை ஸ_ரதுல் அஃராப் விரிவாக விளக்குகிறது.

முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், தம்மை எதிர்த்த முஷ்ரிக்குகள், நயவஞ்சகர்களுடன் எவ்வளவு விட்டுக்கொடுப்புடனும் நளினமாகவும் இதமாகவும் நடந்துள்ளார்கள் என்பதற்கான பல ஆதாரங்கள் ஹதீஸ் கிரந்தங்களில் பரவிக் கிடக்கின்றன.

இஸ்லாமிய அழைப்புப் பணியின் அடிப்படை ஹிக்மா(حكمة) எனும் விவேகமும் அழகிய உபதேசமுமாகும். அல்-குர்ஆன் அது பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது:
" ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة "
“(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!” (ஸுரா அந்நஹ்ல்: 125)

தஃவா களத்தில் பணியாற்றுகின்றபோது சிலவேளை விவாதிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் மிகவும் அழகிய முறையில் அதை மேற்கொள்ளுமாறு அல்குர்ஆன் எமக்கு வழிகாட்டுகிறது.
"وجادلهم بالتي هي أحسن "
“இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக!” (ஸுரா அந்-நஹ்ல்: 125)

தஃவா களத்தில் பணியாற்றுகின்ற போது மென்மையையும் நளினப் போக்கையும் இழந்து விட்டால் சிலவேளை எமக்கு நெருக்கமானவர்களைக் கூட நாம் இழக்க வேண்டி ஏற்படும். நபியவர்களுக்கு அல்லாஹு தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.
“அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொண்டீர்;;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும் கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;.” (ஸுரா ஆலு இம்ரான்: 159)

நளினம் இழக்கப்படும்போது நன்மைகள் அனைத்தையும் இழக்க வேண்டி நேரிடும். பின்வரும் நபிமொழி இதற்கு நல்ல சான்றாகும்:
عن جريرعن النبي صلى الله عليه وسلم قال من يحرم الرفق يحرم الخير (مسلم : 2592)
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்லல்;லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் : 2592)
“மென்மையை இழந்தவர் நன்மைகள் அனைத்தையும் இழந்தவர் ஆவார்.” (முஸ்லிம்)

எனவே, நபிமார்களின் வாரிசுகளான உலமாக்கள் தமது தஃவா நடவடிக்கைகளில் குறிப்பாக, குத்பாப் பிரசங்கங்களில் நபிமார்களின் தஃவா அணுகுமுறையையே கையாண்டு மக்களை அணுக வேண்டும்.

இஸ்லாத்துக்கு எதிரான தீய சக்திகள், பிழையான கொள்கையுடையோர் பற்றி குத்பாப் பிரசங்கங்கள் மற்றும் சொற்பொழிவுகளில் மக்களுக்கு தெளிவுபடுத்தும்போது இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களைப் பேணி சிறந்த வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், நாவைப் பேணி நல்ல வார்த்தையைக் கூறுவதே உண்மையான பிரசாரகரின் பண்பாகும்.

சமூக ஊடகங்களில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பிறர் முன்வைக்கும்போது நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் இஸ்லாமிய வரையறைகளைப் பேணியவாறும் அவர்களுக்கு தெளிவுகளை வழங்க வேண்டும். மோசமான, மாற்று மதங்களை அகௌரவப்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துவதை விட்டும் கண்டிப்பாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தின் எதிரிகள் ஏதேனும் சிரமங்களில் சிக்கிக் கொள்கின்றபோது மகிழ்ச்சியை வெளிப்படுத்தக் கூடாது. மாறாக அனைத்து மக்களுக்கும் நேர்வழி கிடைக்க பிரார்த்திக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் போதனைகளில் ஒன்றாகும். இது குறித்து மக்களுக்கு அறிவூட்டுவது அவசியமாகும்.

தவிரவும் சாதாரண பொது மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையான மொழிநடையில் சுருக்கமாக குத்பாக்களை நிகழ்த்த வேண்டும். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

عن أنس – رضي الله عنه - قال: قال رسول الله – صلى الله عليه وسلم -: (يسِّرواولاتعسِّروا،وبشِّرواولاتنفِّروا) متفق عليه.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்;லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர்ந்ததாக அனஸ் பின் மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். “(மக்களிடம்) நளினமாக நடந்து கொள்ளுங்கள்;. (அவர்களைச்) சிரமப்படுத்தி விடாதீர்கள்;. நன்மாராயம் கூறுங்கள் (எச்சரிக்கும் போதுகூட) வெறுப்பூட்டி விடாதீர்கள்.” (புகாரி, முஸ்லிம்)
இவ்வகையில் எமது தஃவா நடவடிக்கைகள் அமையுமாக இருந்தால் நிச்சயமாக அது பயன்மிக்கதாக அமையும். அத்தோடு பின்வரும் விடயங்களும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

1. எமது பிரசாரங்களை அல்லது மார்க்க விளக்கங்களை அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்தோடு மேற்கொள்ளுதல்.
2. பிழையான கருத்துடையோர் தமது பிழைகளிலிருந்து மீள வேண்டும் என்ற அவாவோடு பிரார்த்தனை செய்தல்.
3. அத்தகையவர்களோடு எப்போதும் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுதல்.
4. தவறுகளைத் திருத்துவதே நோக்கமன்றி தவறிழைப்போரை குத்திக் காட்டுவதோ கடுமையான வார்த்தைகள் மூலம் கண்டிப்பதோ நோக்கமாக இருக்கக் கூடாது.

எனவே, எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் சத்தியத்தை விளங்கி அதன்படி நடக்கவும் அதன் வழியில் மென்மை, நளினம் என்பவற்றைக் கடைப்பிடிக்கவும் அருள் புரிவானாக!


அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா