13.11.2019 / 15.03.1441


ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது என்பதை நாம் அறிவோம். இலங்கைப் பிரஜைகள் என்ற வகையில் தான் விரும்புகின்ற வேட்பாளருக்கு வாக்களிப்பது ஒவ்வொருவரதும் உரிமையாகும். எனவே இவ்வுரிமையை வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

தேர்தல் தினத்தன்று வாக்குரிமை பெற்ற அனைவரும் மாலை வரை தாமதிக்காமல் காலையில் நேர காலத்துடன் வாக்குச் சாவடிக்களுக்குச் சென்று தாம் விரும்புகின்ற வேட்பாளருக்கு வாக்களிப்பதில் கவனமெடுக்குமாறும் வாக்குச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை சிறப்பாகச் செய்வதற்கு ஒத்தாசையாக இருக்குமாறும் வாக்களிக்கும்போது தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான தேசிய அடையாள அட்டை போன்ற அனுமதிக்கப்பட்ட ஆவணங்களை தம்முடன் வைத்துக் கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.

வாக்குச் சாவடிக்குள் நுழையும் போதே ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் அவசியம் இருப்பதால், குறிப்பாக முகத்திரை அணியும் பெண்கள் வாக்குச் சாவடிக்குள் நுழையும்போது அவர்களது முகங்களை திறந்து, ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி, தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வாக்குச் சாவடிக்குச் செல்லும்போது தனியாகச் செல்லாமல் மஹ்ரமான ஆணுடன் செல்லுமாறும் முடிந்த அளவு வாகனத்தில் செல்வதற்கு ஒழுங்கு செய்து கொள்ளுமாறும் வாக்களித்தவுடன் தாமதிக்காது தத்ததமது வீடுகளுக்கு திரும்புமாறும் வேண்டிக் கொள்கின்றோம். இவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் வீணான பிரச்சினைகள் உருவாகுவதைத் தடுக்க வழியாக அமையும் என்பதை ஆலோசனையாக முன்வைக்கின்றோம்.

அத்துடன் வாக்களித்த பின்னர் வீதிகளில் கூடி நின்று வீணாக நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்காமல் பயனுள்ள பணிகளில் ஈடுபடுமாறும் தேர்தலில் வெற்றி பெறுபவர் நாட்டை நேசிக்கின்ற, குடிமக்களின் நலனுக்காக உழைக்கின்ற, நாட்டைக் கட்டியெழுப்பும் உணர்வும் வல்லமையும் மிக்கவராக இருப்பதற்கு பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் உலமாக்கள், மஸ்ஜித் நிருவாகிகள், ஜம்இய்யாவின் பிரதேச கிளை உறுப்பினர்கள் இது தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.

குறிப்பு: இவ்வறிவித்தலை ஜுமுஆவிற்குப் பின்னர் சகல பள்ளிவாசல்களிலும் மக்களுக்கு வாசித்துக் காட்டுமாறு நிர்வாக சபையினரிடம் வேண்டுகின்றோம்.


அஷ்-ஷைக் ஏ.ஸீ. அகார் முஹம்மத்
பிரதித் தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

24.10.2019 / 24.02.1441

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்கள்

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பின்வரும் வழிகாட்டல்களை கவனத்திற் கொண்டு செயலாற்றுமாறு இலங்கை முஸ்லிம்களிடம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுக்கிறது.

  1. நாட்டில் கடந்த 90 வருடங்களுக்கும் மேலாக அரசியலுக்கு அப்பால் நின்று சமூக, சமய, சன்மார்க்கப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒரு சிவில் அமைப்பே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பதை சகலரும் அறிவர். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு வேட்பாளருக்கும்இ எந்தவோர் அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவோ எதிராகவோ செயற்படுவதில்லை. எனவே, ஜம்இய்யதுல் உலமாவின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டாமென வேண்டுகின்றோம்.
  2. பிரபஞ்சத்தின் அத்தனை விடயங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியும் திட்டப்படியுமே நடந்தேறுகின்றன என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள நாம், தேர்தலில் யார் வென்றாலும் அது இறை முடிவு என்பதை உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்வது எமது கடமையாகும்.
  3. ஈருலக வாழ்வின் வெற்றியும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பின்பற்றி வாழ்வதிலேயே தங்கியிருக்கிறது என்பதை புரிந்து வைத்துள்ள நாம், தேர்தல்; காலத்திலும் நபிவழி நின்றே செயற்பட வேண்டும். முஸ்லிம்களின் மிகப் பெரும் ஆயுதம் பிரார்த்தனையாகும். இந்த சந்தர்ப்பத்தில் எமது தாய் நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும் குடிமக்களது நல்வாழ்வுக்காகவும் அதிகம் பிராரத்திப்போம்; இறையுதவியைப் பெற்றுத் தரும் நற்கருமங்களில் எம்மை ஈடுபடுத்திக் கொள்வோம்.
  4. ஜனநாயக நாடொன்றில் எவரும் எந்தக் கட்சியும் தேர்தலில் போட்டியிடலாம். தான் விரும்பும் வேட்பாளரை ஆதரிப்பது அவரவர் உரிமையாகும். இந்த தேசத்தின் குடிமக்களாகிய முஸ்லிம்கள் தமது வாக்குரிமையை பயனுள்ள விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருபோதும் வாக்களிப்பதில் அசிரத்தையுடன் நடந்து கொள்ளலாகாது.
  5. எமது வாக்குகளைப் பெறுபவர்கள் நாட்டை நேசிக்கின்றஇ குடிமக்களின் நலனுக்காக உழைக்கின்றஇ நாட்டைக் கட்டியெழுப்பும் உணர்வும் வல்லமையும் மிக்கவர்களாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.
  6. பொதுவாகவும் தேர்தல் காலங்களில் குறிப்பாகவும் முஸ்லிம்கள் வார்த்தையளவிலோ செயலளவிலோ எந்தவொரு குற்றச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது. வதந்திகளைப் பரப்புதல், வீண் விதண்டாவதாம், சண்டை- சச்சரவுகள், வன்செயல்களில் ஈடுபடுவது ஈமானைப் பாதிக்கும் அம்சங்கள் என்பதைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
  7. ஆலிம்கள் மிம்பர் மேடைகளில் எந்தவொரு வேட்பாளருக்கும் அரசியல் கட்சிக்கும் சார்பாகவோ எதிராகவோ பேசுவதை முற்றாக தவிர்த்துக் கொள்வதுடன் மேற்குறிப்பிட்ட வழிகாட்டல்களை கடைபிடித்தொழுகுமாறு பொது மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். மேலும் பள்ளிவாசல்களை தேர்தல் பிரசாரங்களுக்கோ அதனுடன் தொடர்புபட்ட வேறு விடயங்களுக்கோ பயன்படுத்தக் கூடாது.
  8. தேர்தல் முடிவடைந்த பின்னர் நிதானமாக நடந்து கொள்வது கடமையாகும். முஸ்லிம் சமூகம் எப்போதும் ஒற்றுமையையும் சகவாழ்வையும் பேணும் வகையில் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.

ஆலிம்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், புத்திஜீவிகள் பொதுவாகவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேச கிளை அங்கத்தவர்கள் குறிப்பாகவும் மேற்சொன்ன அறிவுறுத்தல்களுக்கமைய பொது மக்களை வழிநடத்த வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுக்கிறது.

 

 

அஷ்-ஷைக் ஏ.ஸீ. அகார் முஹம்மத்

பிரதித் தலைவர்,

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா