2024.06.03ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனங்களின் பிரமுகர்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஆகியோரிடையே வெள்ள அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான விஷேட ஒன்றுகூடலொன்று ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
நிலவும் சீரற்ற வானிலையினால் இவ்வனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு, எவ்வாறான உடனடி பங்களிப்புக்களை வழங்கலாம் என்பது தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதோடு பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கத்திடம் இருந்து வெள்ள நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கான வழிவகைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும் அந்தந்த பகுதிகளிலுள்ள மஸ்ஜித் சம்மேளனங்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் கள நிலவரங்களை நேரில் சென்று பார்வையிட்டு, விபரங்களை திரட்டுவதோடு அதற்கான முன்னெடுப்புக்களை கொழும்பு மாவட்ட மஸ்ஜிதுகள் சம்மேளனம் மற்றும் ஜம்இய்யா ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்வதாகவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இதில் ஜம்இய்யா சார்பில் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உப செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் ஆகியோருடன் கொழும்பு மாவட்ட ஜம்இய்யாவின் நிர்வாகிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
- ACJU Media -