ACJU/NGS/2022/394

2022.12.10 (1444.05.15)            


மனித உரிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் கிடைக்கப்பெற வேண்டிய மற்றும் அவனுக்கு உரித்தான அடிப்படை உரிமைகளும் சுதந்திரமுமாகும்.


இனம், மதம், பால், நிறம் என அனைத்தையும் கடந்து ஒவ்வொரு தனிமனிதனது சுதந்திரத்துக்கும் கண்ணியத்துக்கும் நலன்களுக்கும் அவசியமான உரிமைகள் மனித உரிமைகள் என அழைக்கப்படுகின்றது. அவை ஒவ்வொருவருக்குமான அடிப்படையான பிறப்புரிமை என்பதால் அவற்றை மீறுவதற்கோ, மறுப்பதற்கோ அல்லது அவற்றை அனுபவிப்பதற்குத் தடையாக இருப்பதற்கோ எவருக்கும் உரிமை கிடையாது.


அந்தவகையில் குடியுரிமை உட்பட அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் அனைவருக்கும் பாரபட்சமின்றி, தடையின்றிக் கிடைக்கப் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். அதுவே அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படையாகும். நாட்டின் அரசியல், சமூக ஸ்திரத்தன்மையையும் ஜனநாயக வெற்றியையும் இதுவே தீர்மானம் செய்கிறது.


உலகப் படைப்பினங்களில் மனிதன் சிரேஷ்டமான படைப்பாவான். மனித குலத்தின் மேம்பாட்டுக்கும் நாகரிக வெற்றிக்கும் அவனே உயிர் நாடி. எனவேதான் இஸ்லாம் தனிமனிதனின் கௌரவம், கண்ணியம், சுதந்திரம் என்பன பாதுகாக்கப்படுதில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறது. மனிதனின் உயிரைப் பறிப்பது மிகப்பெரும் குற்றம் என்றும் மனிதனை வாழவைப்பது மிகப்பெரும் புண்ணியம் எனவும் மார்க்கம் வலியுறுத்தியுள்ளது.


மேலும் உங்களில் ஒரு கூட்டம் அடுத்தவர்களை பரிகசிக்க வேண்டாம். பட்டப்பெயர் சூட்ட வேண்டாம். அடுத்தவர்கள் குறித்து தப்பபிப்பிராயம் கொள்ள வேண்டாம். துருவித் துருவி ஆராய வேண்டாம். குறை பேச வேண்டாம் என அல்குர்ஆன் மனிதர்களைப் பார்த்து கட்டளையிட்டுள்ளது.


எனவேதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 'அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளுங்கள். அவன் முஸ்லிமல்லாதவனாக இருப்பினும் சரியே. அவனுக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் எத்தகைய திரையும் இல்லை' (நூல் : முஸ்னத் அஹ்மத்)


இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது, ஒரு முஸ்லிம் மீது இன்னொரு முஸ்லிமின் இரத்தம், சொத்து, மானம் என்பன ஹராமாக்கப்பட்டுள்ளன (தடுக்கப்பட்டுள்ளன) எனக்கூறி மனிதர்களின் உயிர், உடைமை, கண்ணியத்தை உறுதி செய்தார்கள்.


மேலும் பெண்கள், சிறார்கள், நோயாளிகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் சமூகத்திலுள்ள பலவீனமானவர்களின் உரிமைகள் விடயத்திலும் இஸ்லாம் அதிக கவனம் செலுத்தியிருப்பதை அதன் போதனைகளிலிந்து புரிந்து கொள்ளலாம்.


வாழ்வுரிமையை உறுதி செய்யும் வகையிலும் மனிதப் படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை எதிர்த்தும் சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.


உரிமைகள் அனைவருக்குமானவை. அன்றாட சமூக வாழ்க்கையில் நாம் எமது உரிமைகளை பெற்றுக் கொள்வதிலும் பேணுவதிலும் உள்ள கவனமும் ஆர்வமும் பிறரது உரிமைகளை உறுதி செய்வதிலும் இருப்பது அவசியமானது. அதுவே நியாயமானதுமாகும். ஆகவே எமது உரிமைகளைப் போன்றே எம்மைச் சூழ வாழ்பவர்களது உரிமைகளையும் மதித்து நடப்போம். மனித உரிமைகளை உறுதி செய்வதனூடாக மனிதநேயம் மிக்க, மனித இருப்புக்கும் மகிழ்ச்சியான வாழ்வுக்கும் அச்சுறுத்தல் இல்லாத சமூக, அரசியல் சூழலைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பு செய்வோம். உரிமை மீறப்பட்டவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறி நீதியும் சமத்துவமும் கோலோச்சுவதற்கு இருகரம் ஏந்துகிறோம்.

 

முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா