ACJU/FTW/2020/19-403
[29.07.2020 (07.12.1441) அன்று வெளியிடப்பட்ட ஃபத்வா]
கேள்வி : பர்ளான தொழுகை நேரத்தில் ஜனாஸா தொழுகை நடத்த நேர்ந்தால் எதை முற்படுத்துவது?
பதில் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
முஸ்லிம் ஒருவர் மரணித்துவிட்டால் அந்த ஜனாஸாவை குளிப்பாட்டி, கபன் செய்து, தொழுகை நடாத்தி முஸ்லிம்களது மையவாடியில் நல்லடக்கம் செய்வது முஸ்லிம்கள் மீது பர்ளு கிபாயாவாகும். இக்கடமைகளில் ஏதேனும் ஒன்று விடுபடுமானால் முஸ்லிம்கள் அனைவருமே அல்லாஹ்விடத்தில் குற்றவாளிகளாவார்கள்.
பொதுவாக ஒருவர் மரணித்துவிட்டால் அவரது ஜனாஸாவை தாமதப்படுத்தாது மேற்கூறப்பட்ட கடமைகளை நிறைவேற்றி அடக்கம் செய்வது அவசியமாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.
'ஜனாஸாவை விரைவாக கொண்டு செல்லுங்கள். ஏனெனில் அது நற்செயல்கள் செய்த ஒரு ஜனாஸாவாக இருந்தால் நீங்கள் அதனை நன்மையின் பக்கம் விரைவுபடுத்துகிறீர்கள். அதற்கு மாற்றமாக இருந்தால் உங்களது தோள் புஜங்களிலிருந்து இறக்கி வைக்கக்கூடிய கெட்ட ஒரு ஜனாஸாவாக இருக்கும்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹிஹு முஸ்லிம் : 1721) 1
'உங்களில் ஒருவர் மரணித்தால் அவரை தடுத்து வைக்க வேண்டாம். விரைவாக அவரை கப்ரில் அடக்கம் செய்யுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.' 2
மரணித்தவரின் நெருங்கிய உறவினர்கள் சமுகம் தருவதற்காக ஜனாஸாவை அடக்கம் செய்வதைப் பிற்படுத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டு. என்றாலும் ஜனாஸாவில் மாற்றங்கள் நிகழாது என்பது உறுதியாக இருத்தல் வேண்டும்.3 அவ்வாறே எமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பிரேத பரிசோதனை போன்ற முக்கிய காரணங்களுக்காகவும் ஜனாஸாவை அடக்கம் செய்வதைத் தாமதப்படுத்துவதில் தவறேதுமில்லை.
பொதுவாக தொழுவதற்கு மக்ரூஹான நேரங்களான பஜ்ர் மற்றும் அஸர் தொழுகைகளுக்குப் பின்னரும் சூரியன் உதிக்கும், உச்சம் கொடுக்கும், அஸ்தமிக்கும் நேரங்கள் போன்ற எல்லா நேரங்களிலும் ஜனாஸாத் தொழுகையைத் தொழுவதற்கு அனுமதியுள்ளது.4
என்றாலும் சிலர் அஸர் தொழுகையின் பின் ஜனாஸாத் தொழுகை தொழக்கூடாது என்ற எண்ணத்தில் அஸர் தொழுகைக்கு முன்பே ஜனாஸாத் தொழுகையை தொழுதுவிட்டு ஒரு சிலர் மாத்திரம் அதனை அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்கின்ற நடைமுறை சில இடங்களில் காணப்படுகின்றது. இவ்வாறு செய்வதனால் சிலருக்கு பர்ளுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழும் சந்தர்ப்பமும் மற்றும் சிலருக்கு அடக்கம் செய்யும் இடத்திற்கு சமுகமளிக்கும் சந்தர்ப்பமும் இல்லாமல் போகின்றது. எனவே அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஜனாஸாத் தொழுவதற்கு அனுமதியுள்ளதால் அஸர் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றி விட்டு அனைவரும் சேர்ந்து ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றி அடக்கம் செய்வதற்கு முடியும்.
மேலும் சில இடங்களில் ஜனாஸாவை மஸ்ஜிதிற்குக் கொண்டுவரும் போது அங்கு பர்ளுத் தொழுகை ஜமாஅத்தாக நிறைவேற்றக்கூடிய நேரமாக இருந்தால் அவர்கள் முதலில் ஜனாஸாத் தொழுகையை தொழுதுவிட்டு ஜனாஸாவை ஓரமாக வைத்து பர்ளுத் தொழுகையை நிறைவேற்றுகின்ற முறைமையும் காணப்படுகின்றது.
ஆகவே ஜனாஸாவை மஸ்ஜிதிற்குக் கொண்டுவரும் போது அங்கு பர்ளுத் தொழுகை ஜமாஅத்தாக நிறைவேற்றக்கூடிய நேரமாக இருந்தால் முதலில் பர்ளான தொழுகையை நிறைவேற்றிவிட்டு அதன் பின்னர் ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றுவதில் தவறேதுமில்லை. இவ்வாறு ஜனாஸாத் தொழுகையை பிற்படுத்தித் தொழுவதனால் அதிகமான நபர்கள் அதில் கலந்து கொள்ளக்கூடியதாகவும் ஜனாஸாவிற்கு அதிகமாக துஆக்கள் கிடைப்பதற்கு வாய்ப்பாகவும் அமையும்.5 ஒரு பர்ழான தொழுகைக்காக ஜனாஸாவை அடக்கம் செய்வதைப் பிற்படுத்துவது சிறிதளவு நேரமேயாகும்.
அந்தவகையில் மஸ்ஜிதில் பர்ளான தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றக்கூடிய நேரத்தில் ஜனாஸா கொண்டுவரப்பட்டால் முதலில் பர்ளான தொழுகையை நிறைவேற்றிவிட்டு பின்னர் ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.
என்றாலும் ஜனாஸாவில் மாற்றங்கள் ஏற்படும் என்று அச்சம் நிலவுமாயின் பர்ளான தொழுகையை விட ஜனாஸா தொழுகையை முற்படுத்துவது அவசியமாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி
மேற்பார்வையாளர் - ஃபத்வாப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
-------------------------------------------------------------------------
[1] عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَسْرِعُوا بِالْجَنَازَةِ، فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرٌ - لَعَلَّهُ قَالَ - تُقَدِّمُونَهَا عَلَيْهِ، وَإِنْ تَكُنْ غَيْرَ ذَلِكَ، فَشَرٌّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ» (رواه مسلم - باب الاسراع بالجنازة)
[2] عن ابْن عُمَر رضي الله عنهما قال : سَمِعْت رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُول : (إِذَا مَاتَ أَحَدكُمْ فَلَا تَحْبِسُوهُ وَأَسْرِعُوا بِهِ إِلَى قَبْره) رواه الطَّبَرَانِيّ بِإِسْنَادٍ حَسَن كما قال الحافظ في الفتح.
[3] ولا بأس بانتظار الولي إذا رجي حضوره عن قرب وأمن من التغير. انتهى (باب شروط صحة صلاة الجنازة, نهاية المحتاج للرملي)
[4] قال زكريا الأنصاريُّ: (قلنا: لأنَّ التَّخصيصَ دخله بما مرَّ مِنَ الأخبارِ في صلاةِ العَصرِ وصلاة الصبح، وبالإجماعِ على جواز صلاةِ الجِنازَة بعدَهما). (فَصْلٌ فِي أَوْقَاتِ كَرَاهَةِ الصَّلَاةُ - أسنى المطالب في شرح روض الطالب)
(وَلَا) تُكْرَهُ (مَا) أَيْ صَلَاةٌ (لَهَا سَبَبٌ مُتَقَدِّمٌ أَوْ مُقَارِنٌ كَالْجِنَازَةِ وَالْمَنْذُورَةِ) (فَصْلٌ فِي أَوْقَاتِ كَرَاهَةِ الصَّلَاةُ - أسنى المطالب في شرح روض الطالب)
قال الإمام النوويُّ رحمه الله : (وأجمع المسلمون على إباحةِ صلاةِ الجنائِزِ بعد الصُّبح والعصر، ونقل العبدريُّ في كتاب الجنائز عن الثوريِّ، والأوزاعيِّ، وأبي حنيفة، وأحمد، وإسحاق: أنَّ صلاة الجِنازَة منهيٌّ عنها عند طلوع الشَّمس وعند غروبها وعند استوائِها، ولا تُكرهُ في الوقتين الآخَرينِ). (المجموع شرح المهذب)
فِي مَذَاهِبِ الْعُلَمَاءِ فِي جَوَازِ الصَّلَاةِ الَّتِي لَهَا سَبَبٌ فِي هَذِهِ الْأَوْقَاتِ: قَدْ ذَكَرْنَا أَنَّ مَذْهَبَنَا أَنَّهَا لَا تُكْرَهُ (باب الساعات التى نهي عن الصلاة فيها -المجموع شرح المهذب)
[5] وَإِنَّمَا يَتَّجِهُ إنْ خُشِيَ تَغَيُّرُهَا أَوْ كَانَ التَّأْخِيرُ لَا لِكَثْرَةِ الْمُصَلَّيْنَ وَإِلَّا فَالتَّأْخِيرُ يَسِيرٌ وَفِيهِ مَصْلَحَةٌ لِلْمَيِّتِ فَلَا يَنْبَغِي مَنْعُهُ وَلِذَا أَطْبَقُوا عَلَى تَأْخِيرِهَا إلَى مَا بَعْدَ صَلَاةِ نَحْوِ الْعَصْرِ لِكَثْرَةِ الْمُصَلِّينَ حِينَئِذٍ (بَابُ صَلَاةِ الْكُسُوفَيْنِ - تحفة المحتاج في شرح المنهاج)
وَلَوْ اجْتَمَعَ فَرْضٌ مَعَهَا قُدِّمَتْ الْجِنَازَةُ أَيْضًا وَلَوْ جُمُعَةً بِشَرْطِ أَنْ يَتَّسِعَ وَقْتُهُ، فَإِنْ ضَاقَ قَدَّمَ عَلَيْهَا وَمَا اسْتَقَرَّ عَلَيْهِ عَمَلُ النَّاسِ فِي اجْتِمَاعِ الْفَرْضِ وَالْجِنَازَةِ، عَلَى خِلَافِ مَا ذُكِرَ مِنْ تَقْدِيمِ الْفَرْضِ مَعَ اتِّسَاعِ وَقْتِهِ خَطَأٌ يَجِبُ اجْتِنَابُهُ وَلَوْ فِي الْجُمُعَةِ، وَلِهَذَا قَالَ السُّبْكِيُّ: قَدْ أَطْلَقَ الْأَصْحَابُ تَقْدِيمَ الْجِنَازَةِ عَلَى الْجُمُعَةِ فِي أَوَّلِ الْوَقْتِ وَلَمْ يُبَيِّنُوا هَلْ ذَلِكَ عَلَى سَبِيلِ الْوُجُوبِ أَوْ النَّدْبِ وَتَعْلِيلُهُمْ يَقْتَضِي الْوُجُوبَ اهـ.
وَيُتَّجَهُ أَنَّ مَحَلَّ حُرْمَةِ التَّأْخِيرِ إنْ خُشِيَ تَغَيُّرُهَا، أَوْ كَانَ التَّأْخِيرُ لَا لِكَثْرَةِ الْمُصَلِّينَ، وَإِلَّا فَالتَّأْخِيرُ إذَا كَانَ يَسِيرًا وَفِيهِ مَصْلَحَةٌ لِلْمَيِّتِ لَا يَنْبَغِي مَنْعُهُ، )باب صلاة الكسوفين - نهاية المحتاج إلى شرح المنهاج)