ACJU/NGS/2024/370

28th August 2024

 

மஸ்ஜிதுல் அக்ஸாவுக்குள் யூத ஆலயம் அமைப்பது தொடர்பில் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்வீர் வெளியிட்ட அறிக்கையை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது.

மஸ்ஜிதுல்-அக்ஸா ஒவ்வொரு முஸ்லிமின் இதயத்தோடும் உணர்வுப் பூர்வமாக மிக நெருக்கமான பிணைப்பினைக் கொண்டுள்ளது. இது இஸ்லாத்தில் மூன்றாவது புனிதத் தளமாகத் திகழ்வதோடு முஸ்லிம்களின் முதல் கிப்லா அதாவது தொழுகைக்கான திசையாகவும் காணப்படுகிறது. அல்லாஹு தஆலா திருக்குர்ஆனில் மஸ்ஜிதுல் அக்ஸாவை பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

"(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான். (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்). நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் பார்ப்போனாகவும் இருக்கின்றான்." (ஸூரா பனீ இஸ்ராயீல் : 01)

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டி, தீவிரவாதத்தை விதைக்கும் இத்தகைய ஆவேச அறிக்கைகள் சுதந்திரமாகப் பிரச்சாரம் செய்யப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது.

பலஸ்தீனத்தில் மனிதாபிமானப் பேரழிவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், அங்கு மேற்கொள்ளப்படும் அட்டூழியங்களுக்கு எதிராகவும் சர்வதேச சமூகம் துரிதமாக செயலாற்ற வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டினை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இலங்கை அரசாங்கமும் முஸ்லிம் சமூகமும் பலஸ்தீன பிரச்சினைக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகின்றன. 26.10.2023 அன்று ஐ.நா பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட உடனடி மற்றும் நீடித்த மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கமும் ஆதரவாக வாக்களித்திருந்தது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம் றிஸ்வி அவர்கள் தனது ஜெனீவா விஜயத்தின் போது இத்தீர்மானத்தை பாராட்டி ஜம்இய்யா சார்பில் உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை ஐ.நா செயலாளர் நாயகத்திடம் கையளித்தார்.

மஸ்ஜித் அல்-அக்ஸாவின் பாதுகாப்பிற்காகவும், அப்பிராந்தியத்தில் நீதி, சுதந்திரம் மற்றும் அமைதியை நிலைநாட்டப்படவும் நாங்கள் எல்லாம் வல்ல அல்லாஹு தஆலாவிடம் பிரார்த்தனை செய்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா பலஸ்தீனத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் துன்பங்களை நீக்கி, அவர்களின் இழப்புகளுக்கு பகரமாக நற்பேறுகளையும், கூலிகளையும் வழங்குவதோடு, பாதிக்கப்பட்டவர்கள் வெகுவிரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப அருள்பாலிப்பானாக!

 


முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 


அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா