2024.08.27ஆம் திகதி, நாட்டின் ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெளஸி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பைஸர் முஸ்தபா, ஷபீக் ரஜாப்தீன், முன்னாள் மேல்மாகாண ஆளுனர் அஸாத் சாலி மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகைதந்து சந்திப்பொன்றில் ஈடுபட்டனர்.

குறிப்பிட்ட தரப்பினரால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய இச்சந்திப்பிற்கான நேரம் வழங்கப்பட்டது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் அதன் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், உப தலைவர்கள், உப செயலாளர்கள் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

வருகை தந்திருந்த ஜனாதிபதி மற்றும் பிரமுகர்களுக்கு ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் ஆகியோரினால் ஜம்இய்யா பற்றிய அறிமுகமும் அதனால் முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டதுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவித அரசியல் கட்சிகள் சார்பற்ற, எல்லா காலங்களிலும் இலங்கைவாழ் மக்கள் அனைவரும் புரிந்துணர்வோடும் சகவாழவோடும் வாழ்வதற்கான வழிகாட்டலை வழங்கக்கூடிய ஒரு சமய நிறுவனமாகும் என்பது பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.

தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் நாட்டின் சகல பிரஜைகளுக்கும் எம்மை எல்லாக் காலங்களிலும் தொடர்பு கொள்ள முடியும் என்பதுடன், சீ.ஜீ. வீரமந்திரீ அவர்கள் எழுதிய 'Islamic Jurisprudence: An International Perspective' மற்றும் லோனா தேவராஜா அவர்கள் எழுதிய 'The Muslims of Sri lanka - Thousand Year of ethnic Harmony' ஆகிய நூல்களையும் ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட 'විවෘත දෑසින් ඉස්ලාම්', 'සමාජ සංවාද', 'Don't be extreme', 'மன்ஹஜ்' (மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும்) ஆகிய நூல்களையும் ஜனாதிபதி உட்பட சகல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய மதத் தலைவர்களும் படிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தினார்கள். மேலும், முஃப்தி தகீ உஸ்மானி அவர்கள் எழுதிய 'Islam And Politics' நூலும் தலைவர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டதோடு ஜனாதிபதி அவர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு, பாராளுமன்றத்தினதும் நாட்டிலுள்ள உணவு உற்பத்தி நிறுவனங்களினதும் வேண்டுகோள்களுக்கமைய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவானது 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையினை இலங்கையில் அமுல்படுத்திய வரலாற்றினை நினைவுகூர்ந்த தலைவர் அவர்கள், அதன்மூலமாக இற்றைவரை நாட்டிற்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் ஏற்றுமதி வருமானம் கிடைத்து வருவதனையும் சுட்டிக்காட்டினார்கள்.

மேலும், மார்க்கத்தில் எந்தவித வற்புறுத்தலோ, நிர்ப்பந்தமோ இல்லை என்பதை சுட்டிக் காட்டிய ஜம்இய்யாவின் தலைவர் அவர்கள், பிறமதங்களை நிந்தனை செய்வது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பதையும் பிற சமூகங்களோடு சகவாழ்வைப் பேணி நல்ல முறையில் நடந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தையும் அல்-குர்ஆன், அல்-ஹதீஸ் ஆதாரங்களுடன் முன்வைத்தார்கள்.

இதேவேளை, வாக்களிப்பு என்பது ஓர் அமானிதமாகும்; இவ்விடயத்தில் வாக்களிப்பவரும் வாக்களிக்கப்படுபவரும் மிகுந்த அவதானத்துடனும் பொறுப்புணர்ச்சியுனும் செயற்பட கடமைப்பட்டுள்ளனர் என்ற செய்தி ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அவர்களால் நினைவுபடுத்தப்பட்டது.

இதன்போது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா அவர்களினால் கோவிட் ஜனாஸா எரிப்பு மற்றும் பலஸ்தீன விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி அவர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அவர்களும் குறித்த விவகாரங்கள் தொடர்பிலான தெளிவுகளை வழங்குமாறு கோரிக்கையொன்றினை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், கோவிட் தொற்றினால் மரணித்த முஸ்லிம்கள் மற்றும் பிறசமயத்தவர்களை அவர்களது அனுமதியின்றி கட்டாய தகனம் செய்ய அரசுக்கு பரிந்துரைத்த தரப்பினரின் பொறுப்புக்கூறலை ஆராய ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்க முன்மொழிவதாகவும் இதன்போது கருத்துத் தெரிவித்தார்.

மேலும், பலஸ்தீன விவகாரத்தில் தான் மிகுந்த தெளிவுடன் இருப்பதாகவும் அவர் சபையில் சுட்டிக் காட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், அவர் தரப்பு அரசியல் கொள்கைகள் குறித்து விளக்கமளித்ததுடன், நாடு எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடி மற்றும் மோசமான நிலைகளில் இருந்து மீண்டு வருவதாகவும் அதனை தக்கவைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டினார்.

நிகழ்வின் இறுதியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் ஏனைய சில வெளியீடுகளும் ஜனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டன.

 

 

- ACJU Media -