ACJU/NGS/2022/378

2022.11.16 (1444.04.20)


சகிப்புத்தன்மையானது இஸ்லாம் வழிகாட்டியுள்ள அறம் சார்ந்த நற்பண்புகளில் மிக முக்கியமான ஒரு பண்பாகும். விட்டுக்கொடுத்தல், பெருந்தன்மையோடு நடத்தல், கண்ணியமாக நடந்து கொள்ளல், போதுமென்ற மனதைப் பெற்றிருத்தல், பொறுமை காத்தல், மன்னித்தல், மறத்தல் ஆகிய பல்வேறு நற்குணங்களுடன் இப்பண்பு நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது.


சகிப்புத்தன்மையை இழக்கின்ற மனிதனை பொறாமை, பகைமை, விரோதம், குரோதம், காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் உணர்வு போன்ற தீய பண்புகள் சூழ்ந்து கொள்கின்றன.
இஸ்லாத்தில் சகிப்புத்தன்மை எனும் பண்பானது விரிந்த அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. தனிநபர்களுக்கிடையிலான உறவு, குடும்பம் மற்றும் அண்டை அயலவர்களுடனான உறவு, தொழில் ரீதியான உறவு, சமூக உறவு, பிற இனம், மதம், கலாச்சாரம் மற்றும் நாடுகளுடனான உறவு என அனைத்து உறவுகளின் வெற்றிக்கும் மகிழ்ச்சிகரமான நல்வாழ்வுக்கும் சகிப்புத்தன்மை மிக இன்றியமையாததாகும்.


அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் இறையச்சமுடையோரின் (முத்தகீன்கள்) பண்புகளைப் பற்றி குறிப்பிடும் போது, '...மேலும் அவர்கள் கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்கள் செய்யும் பிழைகளை மன்னிப்பவர்களாக இருப்பார்கள். நற்செயல் புரிகின்ற இத்தகையோரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல் குர்ஆன், ஸுறா ஆல இம்ரான் : 134) எனக் குறிப்பிடுகிறான்.


அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று எனக் கூறினார்கள். (நூல் : ஸஹீஹுல் புகாரி)


அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் மனிதர்களை நோக்கி பின்வருமாறு வினவுகிறான். 'மேலும், நாம் உங்களில் சிலரை மற்றும் சிலருக்கு சோதனையாக ஆக்கியுள்ளோம். நீங்கள் பொறுமையை கடைப்பிடிப்பீர்களா?' (அல்குர்ஆன், ஸுறா புர்கான் : 20)


எனவேதான் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'மக்களுடன் கலந்து வாழ்ந்து, அவர்கள் மூலமாக ஏற்படும் கஷ்டங்களை சகித்து வாழும் முஃமின், மக்களுடன் கலந்து வாழாத, அவர்கள் மூலமாக ஏற்படும் கஷ்டங்களை பொறுத்துக் கொள்ளாத முஃமினை விட சிறந்தவர் ஆவார்' எனக் கூறினார்கள். (நூல் : இப்னு மாஜா)
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வியலில் சகிப்புத்தன்மைக்கான உதாரணங்களை ஏராளமாகப் பெற்றுக் கொள்ளலாம்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் ஏற்படுத்திய அரசியல், சமூக வாழ்வொழுங்கானது பன்மைத்துவத்தை, நீதியை, சமத்துவத்தை, மனித உரிமைகளை அனைத்துப் பிரஜைகளுக்கும் உத்தரவாதம் செய்தது. மதம், நிலம், நிறம், பிரதேசம் ஆகிய எல்லா வேறுபாடுகளையும் தாண்டி ஒரு நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் ஒரே அரசாங்கத்தின் அங்கத்தவர்கள் என்ற அரசியல் உண்மையை அன்னாரது மதீனா சாசனம் பறைசாற்றியது.


பல்லின கலாச்சாரங்கள் மற்றும் மக்களிடையே சகிப்புத்தன்மையை வலியுறுத்தியும் அதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் திகதி சர்வதேச சகிப்புத்தன்மை தினம் ஐ.நா சபையால் அனுஷ்டிக்கப்படுகிறது.


இலங்கை போன்ற பன்மைத்துவ சமூக அமைப்பைக் கொண்ட நாட்டில் சகிப்புத்தன்மையும் இன நல்லிணக்கமும் மிகவும் இன்றியமையாதவை. மனிதர்களுடனான கூட்டு வாழ்க்கையில் நாம் பன்மைத்துவத்தை மதித்து, கருத்து வேறுபாடுகளில் புரிந்துணர்வுடன் செயற்படும்போது அங்கு ஒற்றுமையும் சகவாழ்வும் உறுதிசெய்யப்படுகிறது. தேசத்தின் அபிவிருத்தியையும் கட்டுமானத்தையும் இவை உறுதி செய்கின்றன.


எனவே நாம் ஒவ்வொருவரும் பிறரது உரிமைகளை மதித்து, குறைகளை மன்னித்து, சகிப்புத்தன்மையோடு வாழ்வதனூடாக சந்தோசகரமான இன நல்லுறவைக் கட்டியெழுப்பி, நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்கின்ற முன்மாதிரி சமூகமாக வாழ்வதற்கு அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக.

 

முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா