ACJU/NGS/2023/269
2023.11.16 (1445.05.01)

 

இஸ்லாம் வழிகாட்டியிருக்கும் உயரிய நற்பண்புகளில் மிக முக்கியமானதொன்று சகிப்புத்தன்மையாகும். ஒவ்வொரு தனி மனிதனிலும் பிரதிபலிக்கவேண்டிய மென்மையாக நடத்தல், இணங்கிச் செல்லுதல், விட்டுக்கொடுத்தல், பொறுமையை கடைபிடித்தல், பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளல் போன்ற சகல நல்லம்சங்களும் சகிப்புத்தன்மையோடு மிக நெருங்கிய தொடர்பினை கொண்டவைகளாகும்.

ஒரு மனிதன் சமூகத்தில் பிறரோடு குரோதங்கள், வைராக்கியங்கள், காழ்ப்புணர்வுகள், சண்டை சச்சரவுகள், முறுகல்கள் இன்றி சமாதானமாக புரிந்துணர்வுடன் வாழ்வதற்கு சகித்துக்கொள்ளுதல் எனும் உயரிய பண்பு மிக இன்றியமையாததாகும். சகிப்புத்தன்மையினை அல்லாஹு தஆலா தன்னுடைய பண்பு என்பதாக அல்-குர்ஆனிலே குறிப்பிடுகின்றான்.

“அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் மிக்க சகித்துக்கொள்பவனாகவும் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்." (ஸூறா அல்-பகரா : 235)

உண்மையில் சகிப்புத்தன்மை மனிதர்களிடம் இல்லாமல் போகின்ற சந்தர்ப்பங்களிலேயே தனிநபர், சமூகம், நாடு சர்வதேசம் என்ற ரீதியில் குழப்பங்களும் வன்முறைகளும் மோதல்களும் ஏற்பட வழிகள் திறக்கப்படுகின்றன. எந்தவொரு நிலையிலும் சகிப்புத்தன்மையின்றி பொறுமையிழந்து ஆவேசப்படுவது இறுதியில் ஆபத்தான விளைவுகளை நோக்கியே எம்மை கொண்டுசெல்லும்.

அடித்து வீழ்த்துபவன் வீரனல்ல. கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்பவனே வீரனாவான் என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். (பார்க்க - ஸஹீஹ் முஸ்லிம் : 5086)

மனிதர்கள் என்ற ரீதியில் அவரவர் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப செயற்படுகின்ற சந்தர்ப்பங்களில் அதிருப்திகள் ஏற்படுவது இயல்பான விடயமே. ஆனால் அவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் சகிப்புத் தன்மையை கைக்கொள்வதே சாலச்சிறந்ததாகும். மாத்திரமன்றி அதுதான் வெற்றிக்கான வழி என்பதாக அல்லாஹு தஆலா அல்-குர்ஆனின் மூலமாக எமக்கு போதிக்கிறான்.

“முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்! (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்! (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்! (இம்மையிலும் மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!" (ஸூறா ஆலு இம்ரான் : 200)

அவ்வாறே ஒருவருக்கொருவர் பொறுமையைக் கொண்டு உபதேசம் செய்யுமாறும் பின்வருமாறு கூறுகின்றான்:

“ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் நஷ்டத்திலில்லை) (ஸூறா அல்-அஸ்ர் : 03)

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சகிப்புத் தன்மையின் முழு வடிவமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். பசி, ஏழ்மை, நெருக்கடிகள், சோதனைகள், எதிரிகளின் சூழ்ச்சிகள் என தமது வாழ்வில் ஏகப்பட்ட சவால்களை சந்தித்தபோதும் அழகிய முறையில் சகிப்புத் தன்மையையும் பொறுமையையும் மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதனை அவர்களது வாழ்வில் இடம்பெற்ற பல சம்பவங்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.

சகித்துக்கொள்வதிலும் பொறுமையை கடைபிடிப்பதிலும் தான் வெற்றி தங்கியுள்ளது என்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவாசிகளுடன் ஹிஜ்ரி 06 ஆம் ஆண்டில் மேற்கொண்ட, இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட ஹுதைபிய்யா உடன்படிக்கை மிகப்பெரும் சான்றாகும்.

இஸ்லாத்தின் தூதை எடுத்துரைப்பதற்காக பாடுபட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறசமூகத்தவர்களுடன் மத சகிப்புத்தன்மையினை கடைப்பிடித்து ஒழுகினார்கள். அனைவருக்கும் அவரவர் மத சுதந்திரம் மற்றும் மார்க்க கடமைகளை நிறைவேற்ற உரிமைகளை வழங்கினார்கள். ஹிஜ்ரி 08ஆவது ஆண்டு மக்கா வெற்றியின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நடந்துகொண்ட விதம் அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

அந்த வகையில் பல்லின சமூகங்கள் வாழும் இந்நாட்டில் வாழக்கூடிய நாம் இஸ்லாம் போதிக்கின்ற வகையில் சகிப்புத்தன்மையோடும் பொறுமையோடும் விட்டுக்கொடுப்போடும் வாழவேண்டியது காலத்தின் கட்டாயமாக இருப்பதுடன் நல்லிணக்கத்திற்கும் புரிந்துணர்விற்கும் அடித்தளமிடுகின்ற செயற்பாடுமாகும்.

உலகளாவிய ரீதியில் புரிந்துணர்வும் நல்லிணக்கமும் ஏற்படவேண்டும் என்ற நோக்கில் ஐ.நா சபையினால் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் திகதி சர்வதேச சகிப்புத்தன்மை தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

பிற சமூகங்களோடு சகிப்புத்தன்மையுடனும் புரிந்துணர்வுடனும் நல்லிணக்கத்தோடும் அவரவர் உரிமைகளை சுதந்திரங்களை மதித்து வாழ அல்லாஹு தஆலா எம் அனைவருக்கும் அருள் புரிவானாக என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இத்தினத்திலே பிரார்த்திக்கிறது.


முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா