2024.01.10ஆம் திகதி அரபிக் கல்லூரிகளுக்கான பாடத்திட்டம் மற்றும் அவற்றிற்கான சட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான விஷேட கூட்டமொன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இலங்கையிலுள்ள அரபுக் கல்லூரிகள் தொடர்பான சட்டம் ஒன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் அதுபற்றி கலந்துரையாடவே இச்சந்திப்பு இடம்பெற்றது. இதில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மத்ரஸாக்களின் ஒன்றியம், ரிபாத்துல் மதாரிஸ், ஷரீஆ கவுன்சில் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர்.

இதுவரைகாலமும் நடைமுறையில் உள்ள அரபிக் கல்லூரிகளுக்கான பாடத்திட்டம், மற்றும் அவற்றிற்கான சட்டக்கோவை பற்றி இக்கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு எதிர்காலங்களில் அரபி மத்ரஸாக்களுக்கான பொதுவான பாடத்திட்டத்தை புதிதாக கட்டமைத்தல் மற்றும் சட்டக்கோவை தயாரித்தல் தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இச்சந்திப்பில் ஜம்இய்யா சார்பில் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, உப தலைவர் அஷ்-ஷைக் எச். உமர்தீன், பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி. ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர், நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், அரபிக் கல்லூரிகளுக்கான குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜவ்பர் ஆகியோருடன் ஜம்இய்யாவின் உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

 

- ACJU Media -