ACJU/MED/2023/036

2023.01.20 (1444.06.26)

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நூற்றாண்டு நிகழ்வு நேற்று 2023.01.19 ஆம் திகதி அதன் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, இலங்கை வாழ் முஸ்லிம்களின் சன்மார்க்கத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஹிஜ்ரி 1344 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஓர் உயர்ந்த சிவில் அமைப்பாகும். இச்சபை, 2000 ஆம் ஆண்டு 51 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் நாடாளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 24 மாவட்டங்களிலும் 165 பிரதேசக் கிளைகள் உள்ளன. 8000 க்கும் மேற்பட்ட ஆலிம்கள் தற்போது இச்சபையில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.


ஜம்இய்யாவின் கடந்த பத்து தசாப்தகால பயணத்தில் அதன் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் தம்மையும் தமது வாழ்வையும் அர்ப்பணம் செய்த எமது மூத்த ஆலிம்களை நன்றியோடு நினைவுகூரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க, கௌரவ அதிதியாக பிரதமர் தினேஷ் குணவர்தன, பிரதம பேச்சாளராக தென்னாபிரிக்க உலமா சபையின் பொதுச் செயலாளர் மௌலானா இப்றாஹீம் பாஹ்ம் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு சர்வ மதத் தலைவர்கள், பாதுகாப்பு செயலாளர், பாராளுமன்ற சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், திணைக்களங்களின் பணிப்பாளர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், மஸ்ஜித் சம்மேளனங்களின் பொறுப்புதாரிகள், சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள், தனவந்தர்கள், நலன் விரும்பிகள், ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் அதன் மாவட்ட, பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்கள் என சுமார் 2000 பேர் கலந்துகொண்டனர்.


மூன்று கட்டங்களாக இடம்பெற்ற இந்நிகழ்வின் முதல் அமர்வு, அஷ்-ஷைக் அல்காரீ அப்துல் அஸீஸ் முஹம்மத் அர்கம் அவர்களின் கிராஅத்துடன் இனிதே ஆரம்பமானது. அத்துடன் ஸாஹிரா கல்லூரி மாணவர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர்களுள் ஒருவரான அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.


இரண்டாவது அமர்வில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கான கலாசார வரவேற்பு, டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் ஆசிரியர் ஜே.ஏ.எம். இர்ஷாத் அவர்களின் குழுவினர்களால் நிகழ்த்தப்பட்டு ஜம்இய்யாவின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரால் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டார். அடுத்து மவாஹிபுல் உலூம் அறபுக் கல்லூரி மற்றும் டீ.எஸ். சேனாநாயக்க மாணவர்களால் வரவேற்புக் கீதம் இசைக்கப்பட்டது.


நூற்றாண்டு அகவையைப் பூர்த்தி செய்யும் ஜம்இய்யாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்வில் தலைமை உரையை அதன் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் நிகழ்த்தியதோடு 'ஒற்றுமையுடன் சவால்களுக்கு முகம்கொடுப்போம்' எனும் கருப்பொருளில் ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அவர்களின் உரை இடம்பெற்றது.


ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் அல்குர்ஆனின் சில வசனங்களை ஓதி இரண்டாவது அமர்வுக்கான வரவேற்புரையையும் நிகழ்த்தினார்கள்.


பிரதம அதிதி ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க அவர்களின் உரையைத் தொடர்ந்து ஜம்இய்யாவின் நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு விஷேட முத்திரை ஜனாதிபதி அவர்களால் வெளியிடப்பட்டது. மேலும் பிரதம பேச்சாளரும் தென்னாபிரிக்க உலமா சபையின் பொதுச் செயலாளருமான மௌலானா இப்றாஹீம் இஸ்மாஈல் பாஹ்ம் ஆகியோர் உரை நிகழ்த்தியதோடு இவர்களுடன் சேர்ந்து இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.


அத்துடன் இலங்கையில் பல ஆலிம்களை உருவாக்கியவர் என்ற அடிப்படையில் ஷெய்குர் ரஹ்மானி ஏ.ஜே.எம். ஜிப்ரீ ஹழ்ரத், தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் ஜம்இய்யாவுக்கும் சமூகத்துக்கும் பங்களிப்புச் செய்கின்ற பரோபகாரிகள் என்ற அடிப்படையில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மற்றும் அல்ஹாஜ் இல்யாஸ் அப்துல் கரீம், ஜம்இய்யாவின் தற்போதைய கட்டடத்தைப் பெற்றுக்கொள்வதில் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கியவர் என்ற அடிப்படையில் திருமதி பேரியல் அஷ்ரப் ஆகியோரும் இந்நிகழ்வில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


மேலும் ஜம்இய்யாவின் அறிமுகம், வரலாறு, பதவி தாங்குனர்கள், அதன் உட்கட்டமைப்பு மற்றும் சமய, சமூகப் பங்களிப்புகள் என்பவற்றை உள்ளடக்கி தொகுக்கப்பட்டுள்ள 'ஸவ்த்துல் உலமா நூற்றாண்டு சிறப்பு மலரை' ஜம்இய்யாவின் உப தலைவர்களுள் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா அவர்கள் வெளியிட்டு வைத்தார்கள். அதன்பின்னர் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுள் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
தொடர்ந்து ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் அதன் உலமாக்கள் விவகார செயலாளருமான அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர் அவர்களால் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நூற்றாண்டு நிகழ்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை உள்ளடக்கிய பிரகடனம் வாசிக்கப்பட்டது.


மேலும் இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வகையில் கலை நிகழ்ச்சிகளும் நூற்றாண்டு நிகழ்வை அலங்கரித்தன. திஹாரிய தன்வீர் எகடமியின் பட்டதாரி அஷ்-ஷைக் எம்.ஆர்.எம். அய்யாஷ் அவர்களால் சிங்கள மொழி மூலம் 'விரிந்து' கவி பாடப்பட்டதுடன் டீ.எஸ். சேனாநாயக்க மற்றும் மவாஹிபுல் உலூம் கல்லூரி மாணவர்களால் கஸீதா பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


நிகழ்வின் இடைக்கிடையே ஜம்இய்யாவின் நூற்றாண்டு பயணம் மற்றும் அதன் சேவைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் காணொளிகள் திரையிடப்பட்டன.


இறுதியாக ஜம்இய்யாவின் பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஸ்வர் அவர்கள் நன்றியுரை வழங்கியதோடு அதன் உப தலைவர்களுள் ஒருவரான அஷ்-ஷைக் எச். உமர்தீன் அவர்களின் துஆவுடனும் மற்றும் ஸலவாத்துடனும் ஜம்இய்யாவின் நூற்றாண்டு நிகழ்;வு இனிதே நிறைவுபெற்றது.


குறித்த இந்நிகழ்வினை சகோதரர்களான பஸ்ஹான் நவாஸ், ஸித்தீக் அக்பர் ஆகியோர் மும்மொழிகளிலும் தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (
ACJU MEDIA)