ACJU/NGS/2021/019

2021.03.08

1442.07.23

 

அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு

இவ்வுலகின் முழு இயக்கமும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றது என்பது ஓர் இறைவிசுவாசியின் நம்பிக்கையாகும்.


அந்த அடிப்படையில் ஆரோக்கியமும் நோயும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே ஏற்படுகின்றன. இதைப் பின்வரும் அல்-குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது.

وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ (سورة الشعراء : 80)


'நான் நோயுற்றால், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்' (என்று இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கூறினார்கள்). (அஷ்ஷுஅரா : 80).


பொதுவாக அனைத்து நோய்களுக்குமுரிய நிவாரணியை அல்லாஹு தஆலா இவ்வுலகிற்கு இறக்கிவைத்துள்ளான் என்பதுடன் நோய் ஏற்பட்டால் அதற்குரிய மருத்துவ சிகிச்சை செய்யுமாறும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.


இதனைப் பின்வரும் ஹதீஸ் உறுதிசெய்கின்றது.

عن أسامة بن شريك رضي الله عنه قال : يَا عِبَادَ اللَّهِ تَدَاوَوْا ، فَإِنَّ اللَّهَ لَمْ يَضَعْ دَاءً إِلا وَضَعَ لَهُ شِفَاءً ، إِلا دَاءً وَاحِدًا ، قَالُوا : يَا رَسُولَ اللَّهِ ، وَمَا هُوَ ؟ قَالَ : الْهَرَمُ ) . (رواه الترمذي : 2038)


அல்லாஹ்வின் அடியார்களே! வைத்தியம் செய்யுங்கள், நிச்சயமாக அல்லாஹு தஆலா எந்த நோயையும் அதற்கான நிவாரணியை வைக்காது விடவில்லை, ஒரேயொரு நோயைத் தவிர என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய போது, அது என்ன நோய் யா ரஸூலல்லாஹ் என்று தோழர்கள் வினவ, அதுதான் முதுமை என்று பதிலளித்தார்கள் என உஸாமா பின் ஷரீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(ஸுனன் அத்திர்மிதி : 2038).


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோய்களுக்கு நிவாரணியாக சில மருந்துகளையும் வைத்திய முறைகளையும் வழிகாட்டியுள்ளதோடு, நோய்கள் விடயத்தில் அது வருமுன் எவ்வாறு முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அந்தவகையில்; அல்லாஹ்வின் நாட்டப்படி தொற்றுநோய் ஏற்பட்டாலும் அத்தகைய நோய் உள்ளவர்களுடன் சேர்ந்து இருப்பது சிலவேலை, அந்நோய் உண்டாகக் கூடிய காரணிகளில் ஒன்றாகலாம் என்ற காரணத்தினால், அத்தகைய நோய் காணப்படும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்ற முன்னெச்சரிக்கை மார்க்கத்தில் வழிகாட்டப்பட்டுள்ளது.


حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، قَالَ: سَمِعْتُ إِبْرَاهِيمَ بْنَ سَعْدٍ، قَالَ: سَمِعْتُ أُسَامَةَ بْنَ زَيْدٍ، يُحَدِّثُ سَعْدًا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِذَا سَمِعْتُمْ بِالطَّاعُونِ بِأَرْضٍ فَلاَ تَدْخُلُوهَا، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلاَ تَخْرُجُوا مِنْهَا. (صحيح البخاري : 5728)


ஓர் ஊரில் தொழுநோய் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால், அந்த ஊருக்குள் நுழைய வேண்டாம். மேலும், நீங்கள் ஓரிடத்தில் இருக்கும் பொழுது அந்நோய் ஏற்பட்டால் அங்கிருந்து வெளியேரவும் வேண்டாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உஸாமா இப்னு ஸைத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.   (ஹீஹுல் புகாரி : 5728)


عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، حَدَّثَهُ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَا يُورِدُ مُمْرِضٌ عَلَى مُصِحٍّ. (صحيح مسلم : 2221)


நோயுள்ள கால்நடையை ஆரோக்கியமான கால்நடையிடம் கொண்டுசெல்லக் கூடாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, அபூ ஸலமா பின் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.   (ஸஹீஹு முஸ்லிம் : 2221)


எனவே, இத்தகைய நோய் உள்ளவர்கள் தன்னையும் பாதுகாத்துக் கொண்டு பிறருக்கும் அது ஏற்படாமல் பேணுதலுடன் நடந்து கொள்ள வேண்டும் என இஸ்லாம் வழிகாட்டியுள்ளது.


عن أبي سعيدٍ الخدري رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه و سلم قَالَ: لَا ضَرَرَ وَلَا ضِرَارَ. (مستدرك الحاكم: 2345)


ஒருவர் தனக்கு தீங்கிழைப்பதும் கூடாது, மற்றவர்களுக்கு தீங்கிழைப்பதும் கூடாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல் குத்ரிய்யி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்தத்ரக் அல் ஹாகிம் : 2345).


ஒருவருக்கு ஒரு நோய் ஏற்படாவிட்டாலும், அதன் தாக்கத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முன்னெச்சரிக்கையுடன் அதற்கான தற்காப்பு விடயங்களை செய்துகொள்வதற்கு மார்க்கம் வழிகாட்டியுள்ளது.


سعد بن أبي وقاص رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال : مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً ، لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ اليَوْمِ سُمٌّ وَلاَ سِحْرٌ. (صحيح البخاري : 5445)


யார் ஏழு அஜ்வா ஈத்தம் பழங்களை ஒவ்வொரு நாள் காலையிலும் சாப்பிடுகின்றாரோ, அந்நாளில் அவரை சூனியமோ, நஞ்சோ எந்தத் தீங்கையும் ஏற்படுத்தமாட்டாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஃத் பின் அபீ வக்காஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் புகாரி : 5445)


வைத்தியத் துறையைப் பொறுத்தவரையில், இக்காலத்தில் பல்வேறு வைத்தியமுறைகள் காணப்படுகின்றன. இவ்வைத்திய முறைகளில் மார்க்க வழிகாட்டல்களுக்கு அமைவாக சிகிச்சைகள் பெற்றுக்கொள்ள இஸ்லாம் அனுதித்துள்ளதுடன், வைத்தியம் செய்யும் விடயத்தில் நம்பிக்கையான துறைசார்ந்த அனுபவமுள்ள வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளும்படியும் அது வழிகாட்டியுள்ளது.


உலகளாவிய ரீதியில் பரவிவரும் கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒவ்வொரு நாடும் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதைப் போன்று, நம்நாடும் இவ்வைரஸின் தாக்கத்திலிருந்து நாட்டுமக்களை விடுவித்துக்கொள்ள இன்னோரன்ன வழிகாட்டல்களை வழங்கி வருவதுடன், நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. அவற்றில் இந்நோயிலிருந்து காத்துக்கொள்வதற்காக ஏற்றப்படும் தடுப்பூசியும் மிக முக்கிய ஒன்றாகும்.


இவ்வடிப்படையில், கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து தற்பாதுகாப்புப் பெறுவதற்காக எமது நாட்டின் சுகாதார திணைக்களமும் சில வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. அவற்றை பேணுவதுடன், இத்தடுப்பூசி விடயத்தில் அனுபவமுள்ள நம்பிக்கைக்குரிய வைத்தியர்களிடம் இது பற்றிய ஆலோசனைகளைப் பெற்று, குறித்த தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. 

எல்லாம் வல்ல அல்லாஹ் இக்கொடிய நோயிலிருந்து நம்மனைவரையும் பாதுகாப்பானாக.

 

 

அஷ்-ஷைக் ஏ. ஜே. அப்துல் ஹாலிக்,
பதில் தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.