ACJU/NGS/2021/085

26.05.2021 CE / 13.10.1442 AH

புறநிழல் சந்திர கிரகணம் தொடர்பாக

இன்று (26.05.2021) புதன்கிழமை இன்ஷா அல்லாஹ் பூரண சந்திரக் கிரகணம் (Total Lunar Eclipse) ஏற்படவுள்ளதாகவும் அது இலங்கைக்கு புறநிழல் சந்திர கிரகணமாகவே (Penumbral Lunar Eclipse) ஏற்படவுள்ளது எனவும் வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிகழவிருக்கும் இப்புறநிழல் சந்திர கிரகணம் கொழும்பு நேரப்படி 19:20 மணியுடன் முடிவுறுவதாகவும் அவ்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

புறநிழல் கிரகணத்தின் போது சந்திரனின் வெளிச்சத்தில் மங்கலான ஒரு நிலையே ஏற்படும். சந்திரன் பூரணமாகவோ அல்லது அதில் ஒரு பகுதியோ மறைவதில்லை. சூரியன் அல்லது சந்திரன் முழுமையாக அல்லது அவற்றில் ஒரு பகுதி மறைவதை காணும் போதுதான் கிரகணத் தொழுகை சுன்னத்தாகும். மாறாக, புறநிழல் கிரகணத்தின் போது கிரகண தொழுகை சுன்னத்தாகமாட்டாது.

'சூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. ஆகவே அவை மறையக் கண்டால் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தர்மம் செய்யுங்கள்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி - 1044)


அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொது செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 
2021.02.04

 

நம் தாய் நாடான இலங்கையின் 73 வது சுதந்திர தினத்தை நாம் இப்போது நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம். என்றாலும் இலங்கை உட்பட முழு உலகிற்கும் பெரும் சவாலாக காணப்படும் கொவிட் 19 தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் 73வது சுதந்திர தினத்தை அடைந்துள்ள நாம் இத்தினத்தை சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப மிகுந்த பொறுப்புணர்வுடன் நினைவுகூறுவது அவசியமாகும்.

இந்நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இன, மத பேதங்களுக்கு அப்பால் நம் மூதாதையர் உழைத்தனர். பேதங்களின்றி ஒன்றுபட்டு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதும் அதன் அடிப்படையில் ஐக்கியமாக வாழ்வதுமே அவர்களது ஒரே குறிக்கோளாக இருந்தது. ஆதலால் ஒவ்வொரு சமூகமும் தத்தமக்குரிய உரிமைகளைப் பெற்று நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டனர்.

சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றுபட்டு பெற்றுத் தந்த இந்த சுதந்திர நாட்டில் வன்செயல்கள் நிகழ்வதையும் மத நிந்தனை இடம்பெறுவதையும் இந்நாட்டின் எந்தப் பிரஜையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனை அனுமதிக்கவும் மாட்டார்கள். இந்நாட்டு பிரஜைகளாகிய நாம் இச்சுதந்திரத்தின் அர்த்தத்தை உண்மைப்படுத்தும் வகையில் ஒன்றுபட்டு ஐக்கியத்துடனும் புரிந்துனர்வுடனும் நாட்டின் அபிவிருத்திற்கு பணியாற்ற முன்வர வேண்டும்.

நாட்டில் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக வாழவும் நாட்டில் நல்லபிவிருத்தி ஏற்படவும் சகல வளமும் பெற்று சுதந்திர தேசமாக இலங்கை மிளிரவும் கொவிட் 19 தொற்று அச்சுறுத்தலிலிருந்து நாடு விரைவாக மீட்சி பெற்றிடவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இச்சந்தர்ப்பத்தில் பிரார்த்திக்கின்றது.

 அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

2017-11-17

முக்கிய அறிவித்தல்

காலி கிந்தோட்டை அசம்பாவிதம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உயர் மட்ட தலைவர்கள் அரசாங்கத்துடனும் உயர் அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு ஆவண செய்துவருகின்றனர்.

ஜம்இய்யாவின் கௌரவ தலைவர், பிரதித் தலைவர் உட்பட முக்கிய செயற்குழு உறுப்பினர்கள் கூடி இது தொடர்பில் முடியுமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இத் தருணத்தில் அனைவரும் நிதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் துஆ, இஸ்திஃபார், போன்ற இபாதத்களில் ஈடுபடுமாறும் ஜம்இய்யா அனைவரையும் வேண்டிக் கொள்கின்றது.

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா