ACJU/NGS/2021/117

2021.07.01. (1442.11.20)


பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கலாநிதி அஷ்ஷைக் அப்துர் ரஸ்ஸாக் இஸ்கன்தர் (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞரும், பன்னூல் ஆசிரியரும், மார்க்கக் கல்வியை கற்பிப்பதிலும், நூற்களை தொகுப்பதிலும் தனது வாழ்நாளை கழித்த கலாநிதி அஷ்ஷைக் அப்துர் ரஸ்ஸாக் இஸ்கன்தர் (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் நேற்று புதன்கிழமை, 2021.06.30 ஆம் திகதி பாக்கிஸ்தானில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னார், தனது மார்க்கக் கல்வியை மதீனா ஜாமிஆ இஸ்லாமிய்யா பல்கலைக்கழகத்திலும், கலாநிதி பட்டப்படிப்பை எகிப்து அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்துள்ளார்கள். பாக்கிஸ்தான் கராச்சியிலுள்ள 'ஜாமிஅத்துல் உலூமில் இஸ்லாமிய்யா'வின் (அல்லாமா பின்னூரி டவுன்) தலைவராகவும், அதன் ஷைகுல் ஹதீஸாகவும், பாக்கிஸ்தானிலுள்ள 'மத்ரஸாக்கள் ஒன்றியத்'தின் (விஃபாக்குல் மதாரிஸ்) தலைவராகவும், 'அல் மஜ்லிசுல் ஆலமி லி தஹப்புழி கத்மின் நுபுவ்வா' எனும் இறுதி நபித்துவத்தை பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் பொறுப்பாளராகவும் செயற்பட்டு வந்தார்கள். அன்னார் அல்லாமா யூசுப் பின்னூரி (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் பிரத்தியேக மாணவராகவும், ஜாமிஆ இஸ்லாமிய்யாவின் மிக முக்கிய தூணாகவும் செயற்பட்டார்கள்.


அன்னார், சுனாமி ஏற்பட்டதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கைக்கு வந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் இணைந்து சுனாமியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்தார்கள். அதேபோன்று, 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நடாத்திய 'இறுதி நபித்துவத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டிற்கு' ஜம்இய்யாவின் அழைப்பை ஏற்று வந்து, அரபு மொழியில் சிறப்புரை ஒன்றையும் நிகழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அன்னார் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையுடன் நெருங்கிய தொடர்பையும், உறவையும் வைத்திருந்ததோடு, இந்நாட்டுக்கு பல தடவைகள் விஜயம் செய்து பாரிய பங்களிப்புக்களை செய்துள்ளார்கள்.


அவர்களிடம் மார்க்கக் கல்வியைக் கற்ற மாணவர்கள் உலகளாவிய ரீதியில் காணப்படுவதுடன் குறிப்பாக, இலங்கை நாட்டிலும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் காணப்படுகின்றனர்.


இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் அறிவாற்றலினால் பிரயோசனம் பெற்றவர்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்iகை முஸ்லிம்கள் மற்றும் அனைத்து உலமாக்கள் சார்பிலும் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.


எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, தவறுகளை மன்னித்து, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.


أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله


(யா அல்லாஹ்! ஜனாஸாவுக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே. அந்த ஜனாஸாவுக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே. எம்மையும், இந்த ஜனாஸாவையும் மன்னித்தருள்வாயாக.)

 


அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா