இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 21ஆம் சீர்திருத்தம் தொடர்பாக முஸ்லிம் சமூகத்தின் கருத்தை அறிவதற்காக மதிப்பிற்குரிய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்களின் அழைப்பின் பெயரில் ஒரு கலந்துரையாடல் நீதி அமைச்சு தலைமையகத்தில் கடந்த 03.06.2022 ஆம் திகதி நடைபெற்றது. அதற்கு சிவில் அமைப்புக்கள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அழைக்கப்பட்டதோடு ஜம்இய்யா சார்பில் அதன் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், உதவிப் பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி அஸ்வர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், ஊடக இணைப்பாளர் அஷ்-ஷைக் பஹத் ஆகியோர் கலந்து கொண்டனர். சிவில் அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரனி ஜாவிட் யூசுப், இஃப்திகார் அஸீஸ் மற்றும் ரியாஸ் முஹ்லார் போன்றோர் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இதில் நாட்டுக்கும் சகல இன மக்களுக்கும் பொறுப்புக் கூறக்கூடிய ஒரு அரசாங்கம் உருவாவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு சர்வமதத் தலைவர்களின் ஆலோசனையின் பெயரில் உருவாக்கப்பட்ட மக்கள் பேரவையில் ஜம்இய்யா சார்பில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளும் இக்கலந்துரையாடலின் போது அமைச்சருக்கு முன்வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.