ACJU/NGS/2021/292

2021.12.25

 

இறைத்தூதர் ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்களது பிறப்பு உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை தன்னகத்தே உள்ளீர்த்துக்கொண்ட ஓர் அதிசயம் ஆகும்.

ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்லாத்தின் முக்கியமான நபிமார்களிலும் இறைத்தூதர்களிலும் ஒருவர் ஆவார்கள். முஸ்லிம்களாகிய நாம் ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபிமார்கள் மற்றும் இறைத்தூதர்களுள் ஒருவர் என நம்புகின்றோம். அவர்கள் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம், நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம், நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம், நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் இறுதி நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முதலான நபிமார்களின் சங்கிலித்தொடரில் ஒரு பாகமாக உள்ளார்கள்.

புனித அல் குர்ஆனில் ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றி 25 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அவரின் தாயார் மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்கள் பற்றி அல் குர்ஆனில் 34 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பு குறித்து புனித அல் குர்ஆனின் ஸூரா 'ஆல இம்ரான்' (அத்தியாயம்: 3) மற்றும் ஸூரா 'மர்யம்' (அத்தியாயம்: 19) ஆகிய அத்தியாயங்களில் விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கு மத்தியில் ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் காணப்படும் உயர்வையும் அந்தஸ்த்தையும் குறித்துக் காட்டுகின்றது.

உலகில் காணப்படும் அனைத்து மதங்களுக்குமிடையிலான பொதுவான அடிப்படைகளாக அன்பு, கருணை, மனிதநேயம், நீதி, அமைதி, சமாதானம் பேன்றன காணப்படுகின்றன. இந்த பொதுவான அடிப்படைகளானது மதங்களுக்கு மத்தியில் வினைத்திறன் மிக்க, பயனுள்ள உரையாடல்களை மேற்கொள்வதற்கு உதவியாக அமைவதோடு, பரஸ்பர மரியாதை மற்றும் சமூக நல்லிணக்கம் என்பனவற்றை கட்டியெழுப்பி, உலகளாவிய ரீதியில் மனிதர்களுக்கு காணப்படும் சவால்களை எதிர்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குபவையாகவும் காணப்படுகின்றன.

இந்நாட்களில் உலகெங்கும் வாழும் நம் கிறித்தவ சகோதரர்கள் ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்களது பிறப்பை நினைவுகூர்கின்றனர். ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மற்றும் ஏனைய அனைத்து நபிமார்களும் உபதேசித்த உறுதிப்படுத்தப்பட்ட அழகிய போதனைகளை நாம் அனைவரும் பின்பற்றி செயற்படவும் அனைத்து மக்களும் நல்வழி, சமாதானம் மற்றும் அபிவிருத்தியை பெறவும் பிரார்த்திக்கிறோம்.

 

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ACJU/NGS/2021/166

1442.08.09


'யா அல்லாஹ்! இந்த பிறையை அபிவிருத்தி உள்ளதாகவும், ஈமானையும் இஸ்லாத்தையும் சாந்தியையும் கொண்டு வரக் கூடியதாகவும் எங்களுக்கு ஆக்குவாயாக! (பிறையே!) எனது இரட்சகனும் உனது இரட்சகனும் அல்லாஹ்வே தான்!'

 

இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி என்பது அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் அடிப்படையில் கால அளவீடாக பயன்படுத்தப்படுவதோடு, இது முஸ்லிம்களின் வாழ்வில் ஒரு முக்கிய பங்கும் வகிக்கிறது. ஸகாத், நோன்பு, மற்றும் ஹஜ் போன்ற வருடாந்த வணக்க வழிபாடுகளை செய்து கொள்வதற்கும் இது அவசியப்படுகிறது.

 

ஹிஜ்ரி நாட்காட்டி என்பது சந்திர நாட்காட்டியாகும். இதில் பன்னிரண்டு சந்திர மாதங்கள் உள்ளதோடு ஒவ்வொரு மாதமும் பிறை பார்த்தல் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. இந்த மாதங்களாவன: முஹர்ரம் (ஆண்டின் முதல் மாதம்), ஸபர், ரபீஉனில் அவ்வல், ரபீஉனில் ஆகிர், ஜுமாதல் ஊலா, ஜுமாதல் ஆகிரா, ரஜப், ஷஃபான், ரமழான், ஷவ்வால், துல் கஃதா, துல்ஹிஜ்ஜஹ்.

 

அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் கூறுகின்றான்: வானங்களையும் பூமியையும் படைத்த நாளில், (இருந்து மறுமை நாள் வரை நடந்தேறும் அனைத்து விஷயங்களும் எழுதப்பட்ட) அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளவாறு. நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடத்தில் (ஒரு வருடத்திற்குப்) பன்னிரண்டு மாதங்களாகும். (அத்தியாயம்: அத்தவ்பா, வசனம்: 36)

 

இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் ஒரு மாதம் 29 நாட்களாக இருக்கும் அல்லது 30 நாட்களாக இருக்கும். அவ்வகையில், ஓர் ஆண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டிருக்கும். இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் ஒரு வருடத்தின் நாட்களின் எண்ணிக்கை கிரிகோரியன் சூரிய நாட்காட்டியின் நாட்களின் எண்ணிக்கையிலிருந்து பத்து அல்லது பதினொரு நாட்கள் குறைந்து காணப்படும். சுருக்கமாக, இஸ்லாமிய நாட்காட்டி என்பது நான்கு புனித மாதங்களைக் கொண்ட பன்னிரண்டு மாத சந்திர நாட்காட்டி மட்டுமல்ல, அது முஸ்லிம்களின் அடையாளமாகவும் காணப்படுகின்றது.

 

புதிய ஹிஜ்ரி ஆண்டின் தொடக்கம் எமக்கு ஹிஜ்ரத் எனும் மதீனாவை நோக்கிய ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இடம்பெயர்வை ஞாபகப்படுத்துவதோடு அதன்போது உலகத்திற்கே முன்மாதிரியாக நிறுவப்பட்ட மதீனா சாசனத்தையும் அது நினைவுபடுத்துகின்றது. அதன் ஒவ்வொரு விடயமும் சகவாழ்வு, நல்லெண்ணம், நீதி, நியாயம், தேசப்பற்று போன்றவற்றை எமக்குள் ஏற்படுத்தும் அதேவேளை நம் தாய் நாடான இலங்கைக்கு மற்றுமன்றி முழு உலக இயக்கத்திற்கும் பொருத்தமான, அவசியமான விடயங்களை முன்வைக்கும் யாப்பாகவும் அது திகழ்கிறது.


எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா மலர்ந்திருக்கும் இந்த ஹிஜ்ரி புத்தாண்டில் நம் நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் சமாதானமும் ஐக்கியமும் மலர துணைபுரிய வேண்டும் என்றும், கொவிட்-19 பரவலின் தீங்கிலிருந்து அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா