துல் கஃதஹ் மாதம்

ஜூன் 01, 2022

துல் கஃதஹ் மாதம் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் பதினோராம் மாதமாகும். இது ஷவ்வால் மாதத்தை அடுத்து வரக்கூடியதாகும்.

துல் கஃதஹ் மாதம் பற்றி

துல் கஃதஹ் மாதம் அல் குர்ஆனில் புனிதப்படுத்தப்பட்ட மாதங்கள் (அல்-அஷ்ஹுருல் ஹுரும்) என குறிப்பிடப்பட்டுள்ள நான்கு மாதங்களில் ஒன்றாகும்.


'நிச்சயமாக அல்லாஹு தஆலாவிடத்தில் அவனுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை''
(அத்-தவ்பா: 36)


அபூ பக்ரஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நிச்சயமாக காலம் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த நாளில் இருந்த அதன் (பழைய) நிலைக்கு சுற்றிவந்து சேர்ந்திருக்கிறது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை: துல்கஅதஹ், துல் ஹிஜ்ஜஹ் மற்றும் முஹர்ரம் ஆகியவையாகும். (மற்றொன்று) ஜுமாதல் ஆகிராவுக்கும் ஷஃபான் மாதத்திற்கும் இடையேயுள்ள 'முளர்' குலத்தாரின் ரஜப் மாதமாகும்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(நூல்: ஸஹீஹு முஸ்லிம் - 1679)

 

மேலும், துல் கஃதஹ் மாதம் என்பது 'அஷ்ஹுருல் ஹஜ்' (ஹஜ் மாதங்கள்) என பெயரிடப்பட்ட மூன்று மாதங்களில் இரண்டாவது மாதமாகும்.

 

ஹஜ்(ஜுக்கான காலம்) குறிப்பிட்ட சில மாதங்களாகும். அந்த மாதங்களில் ஒருவர் (தம்மீது) ஹஜ்ஜைக் கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின்போது தாம்பத்திய உறவு கொள்வதோ, குற்றம் புரிவதோ, தர்க்கம் செய்வதோ கூடாது.
(அத்தியாயம்: அல் பகரஹ், வசனம்: 197)

 

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: 'ஷவ்வால், துல் கஃதஹ் மற்றும் துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் (ஆரம்ப) பத்து நாட்கள் ஆகியவை ஹஜ்ஜுடைய மாதங்களாகும்'
(நூல்: தப்ஸீர் இப்னு கதீர், பாகம்: 01)

 

துல் கஃதஹ் மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்:

 

01. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகள் ஸைனப் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தமை. - ஹிஜ்ரி 02 ஆம் ஆண்டு
(நூல்: அல்பிதாயஹ் வன்நிஹாயஹ், பாகம்: 03)


02. 'ஸுல்ஹுல் ஹுதைபிய்யா' ஹுதைபிய்யா சமாதான ஒப்பந்தம் நிகழ்ந்தமை. - ஹிஜ்ரி 06 ஆம் ஆண்டு
(நூல்: அல்பிதாயஹ் வன்நிஹாயஹ், பாகம்: 04)

 

03. 'பைஅத்துர் ரிழ்வான்' உறுதிப் பிரமாணம் நிகழ்ந்தமை. - ஹிஜ்ரி 06 ஆம் ஆண்டு
(நூல்: அல்பிதாயஹ் வன்நிஹாயஹ், பாகம்: 04)

 

04. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிறைவேற்றிய நான்கு உம்ராக்களில் மூன்று உம்ராக்கள் இம்மாதத்தில் நிகழ்ந்தமை.
(நூல்: ஸஹீஹுல் புகாரீ - 4148)


05. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்முல் முஃமினீன் மைமூனஹ் ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்துகொண்டமை. - ஹிஜ்ரி 07 ஆம் ஆண்டு
(நூல்: அல்பிதாயஹ் வன்நிஹாயஹ், பாகம்: 08)

 

06. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜதுல் வதாவுக்காக வெளியாகிச் சென்றமை - ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு
(நூல்: ஸஹீஹுல் புகாரீ - 1709)

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.