அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பற்றிய விமர்சனங்களும் அவற்றிற்கான தெளிவுகளும்

மே 28, 2022

ACJU/NGS/2022/141

28.05.2022 (26.10.1443)இலங்கை முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் மார்க்க அறிஞர்களினதும் துறைசார்ந்தவர்களினதும் வழிகாட்டல்களின் அடிப்படையிலேயே வாழ்ந்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் மார்க்க அறிஞர்கள் தமக்கு மத்தியில் ஒன்றுபட்டு இலங்கை முஸ்லிம் சமூகத்தை மார்க்க ரீதியாக வழிநடாத்தி வந்ததோடு, பின்னர் அதனை கட்டுக்கோப்புடன் மேற்கொள்வதற்கு 1924 ஆம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையை உருவாக்கினார்கள்.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, மார்க்க அறிஞர்களைக் கொண்டு சமூகத்திற்காகவும் நாட்டுக்காகவும் இயங்கிவரும் ஒரு சபையாகும். இது பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டுள்ளதோடு இலங்கையில் 25 மாவட்டங்களிலும் 164 கிளைகளுடன் 8125 உலமாக்களை உறுப்பினர்களாக் கொண்டு தற்போது செயற்பட்டு வருகின்றது. அண்மைக்காலமாக ஜம்இய்யாவின் பணிகள் பல பரிமாணங்களைப் பெற்று வியாபித்துள்ளது. அது இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் நலன் சார்ந்த விடயங்களோடு நாடு, நாட்டு மக்கள், சர்வதேசம் சார்ந்த விவகாரங்களிலும் ஈடுபாடு காட்டி வருகின்றது. இதனால் இன்று ஜம்இய்யாவின் முக்கியத்துவம் தேசத்திலும் சர்வதேசத்திலும் உணரப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அதன் யாப்பை அடிப்படையாகக் கொண்டு தனது கருமங்களை செய்து வருவதுடன் அதற்கான காரியாலயத்தையும் கொண்டுள்ளது. அத்துடன் ஜம்இய்யா கால மாற்றத்திற்கு ஏற்ப தனது சட்டயாப்பில் தேவையான திருத்தங்களையும் மாற்றங்களையும் செய்து வந்துள்ளது. ஜம்இய்யாவின் மாவட்ட பிரதிநிதிகளின் பங்கேட்புடன் நடைபெறும் கூட்டங்களின் போதே திருத்தப் பிரேரணைகள் சமர்பிக்கப்பட்டு சபையோரின் அங்கீகாரத்துடன் அவை நிறைவேற்றப்படும்.


முஸ்லிம் சமூகத்தின் எல்லா தரப்பினரையும் இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் ஆன்மீக ரீதியாக வழிகாட்டுவதற்காகவும் உலமாக்களினதும் இஸ்லாமியக் கல்வியினதும் மேம்பாட்டிற்காகவும் சமூகத்தினதும் நாட்டினதும் கல்வி, சமூக, பொருளாதார, கலாச்சார வளர்ச்சிக்காகவும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காகவும் பல செயற்திட்டங்களை துறைசார்ந்தவர்களின் ஆலோசனையுடனும் உதவியுடனும் ஜம்இய்யா திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றது.


ஆக்கப்பூர்;வமான விமர்சனங்கள் ஒழுங்கு முறைகளைப் பேணி முன்வைக்கப்படும் போது அவற்றை ஜம்இய்யா எப்போதும் வரவேற்கும். எனினும் தீய நிகழ்ச்சி நிரல்களை அடிப்படையாகக் கொண்டு, ஜம்இய்யாவின் செயற்பாடுகளை சீர்குலைத்து, அதனை ஸ்தம்பிக்கச் செய்யும் நோக்கில் முன்வைக்கப்படும் போலிக் குற்றச்சாட்டுகளையும் தீய முயற்சிகளையும் ஜம்இய்யா ஒருபோதும் அங்கீகரிக்காது.


வரலாறு நெடுகிலும் உலகில் மாற்றுக் கருத்துக்கள் காணப்பட்டு வந்துள்ளன. அந்தவகையில் இமாம்கள், மார்க்க அறிஞர்கள், துறைசார்ந்தவர்கள் தீன் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் கருத்து மோதல்களும் விமர்சனங்களும் இருந்தே வந்துள்ளன. எனினும், கீழ்க் குறிப்பிடும் இரண்டு அல்குர்ஆன் வசனங்களின் அடிப்படையில் அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் உரியவர்களிடம் சென்று அதற்கான தெளிவுகளைப் பெற்று தம் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டார்கள்.


فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ (16:43)


'நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (அதைப்பற்றி) அறிவுள்ளவர்களிடம் வினவிக்கொள்ளுங்கள்' (16:43)


يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ ۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا ۢ بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ‏ (49:06)


முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆகுவீர்கள். (49:06)


ஜம்இய்யாவின் செயற்பாடுகள் மற்றும் அதன் நடவடிக்கைகள் தொடர்பில் சில காலமாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களும் விமர்சனங்களும் ஒரு சிலரால் முன்வைக்கப்பட்டு வருவதை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அவ்விடயங்கள் தொடர்பாக ஜம்இய்யாவிடம் தீர விசாரித்து தெளிவு பெற்றுக் கொள்வதே நம் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.


அந்தவகையில் மேற்படி விடயங்களை ஜம்இய்யாவுடன் நேரடியாக கலந்துரையாடி தெளிவுபெற விரும்புபவர்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் ஜம்இய்யாவின் பின்வரும் துரித இலக்கத்துடன் அல்லது மின்னஞ்சலுடன் தொடர்பு கொண்டு தங்களுக்கான நேரத்தையும் திகதியையும் ஒதுக்கிக்கொண்டு, வழங்கப்படும் குறித்த தினத்தில் தமது விமர்சனங்களுக்கான உரிய அடிப்படைகள் மற்றும் ஆதாரங்களுடன் ஜம்இய்யாவுக்கு நேரடியாக வருகைதந்து தெளிவுபெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.


துரித இலக்கம் : 0117-490490 (வார நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை)
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.