மக்கள் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் செய்தி

மே 22, 2022

ACJU/NGS/2022/130

2022.05.21இலங்கைத் திருநாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை பல அரசாங்கங்கள் இந்நாட்டை ஆண்டு வந்தமை நாம் அனைவரும் அறிந்ததே. இவ்வரசாங்கங்கள் பொதுவாக மக்களுடைய தேவையை விட தத்தமது சொந்த தேவைகளுக்கு முன்னுரிமையளித்து, அவற்றை முற்படுத்தி செயற்பட்டதன் காரணத்தினால் தற்போது நாடு பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகவும் ஒரு கஷ்டமான, நெருக்கடியான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.


இதனால் மக்கள் அவர்களது பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் விடயத்தில் நம்பிக்கையிழந்துள்ள இந்நிலையில், மக்களுடைய பிரச்சினைகளையும் கருத்துக்களையும் உணர்வுகளையும் அரசாங்கத்திற்கும் உரிய அதிகாரிகளுக்கும் முன்வைப்பதற்காகவும், அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்காகவும் மக்கள் பேரவை என்று ஒன்று உருவாக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும். அது இன, மத, பேதமின்றி அனைத்து மதத் தலைவர்களுடைய ஆசிர்வாதத்துடனும், வழிகாட்டலுடனும் பொது மக்களையும், துறைச் சார்ந்தவர்களையும் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டிருப்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வரவேற்கின்றது.


தற்போது இந்நாட்டு மக்கள் முகம் கொடுத்திருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மக்களின் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும், உரிய அதிகாரிகள் ஊடாகவும் பெற்றுக் கொடுப்பதற்கு இந்த மக்கள் பேரவை உழைக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.


மேலும், நெருக்கடியான இத்தருணத்தில் மக்களால் முன்வைக்கப்படக் கூடிய கருத்துக்களையும், அவர்களது உணர்வுகளையும் மதித்து மக்கள் பேரவையின் ஆலோசனைகளை உள்வாங்கி சிறந்த மக்கள் பிரதிநிதிகளாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் செயற்பட வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எதிர்பார்க்கின்றது.


இன, மத பேதமின்றி அனைத்து மக்களுக்குமான பாதுகாப்பையும், இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையையும், பொருளாதார ரீதியான முன்னேற்றத்தையும் நாட்டு பிரஜைகளுக்கு சுபீட்சமான எதிர்காலத்தையும் உண்டாக்கக்கூடிய சிறந்த முறையொன்றை இந்நாடு பெற வேண்டுமென ஜம்இய்யா பிரார்த்திக்கின்றது.


இப்படிக்கு,

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.