மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான ஜமஇய்யாவின் நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும் (மன்ஹஜ்) வெளியீட்டு நிகழ்வு

பிப் 01, 2022
நேற்று 30.01.2022 ஆம் திகதி, மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும் (மன்ஹஜ்), கொழும்பு ஸாஹிராக் கல்லூரி கபூர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. நிகழ்வின்போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பத்வா குழு உறுப்பினர்கள், இந்நாட்டின் மூத்த உலமாக்கள் என பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர். இது தொடர்பான விபரங்களை கீழே காணலாம்:
'மன்ஹஜ்'
மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும்
நோக்கம் :
இலங்கை வாழ் முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் தமக்கு மத்தியில் ஒற்றுமையுடனும் ஏனைய சமூகங்களுடன் சகவாழ்வைப் பேணியும் மார்க்க விவகாரங்களில் ஆலிம்களின் வழிகாட்டல்களுக்கு அமையவும் செயலாற்றி வந்துள்ளனர். அதன் தொடரில் சமூக ஒற்றுமையைப் பேணக்கூடிய, மார்க்க விவகாரங்களை ஆலிம்களின் வழிகாட்டல்களுக்கேற்ப நிதானமாகவும் நடுநிலையாகவும் அனுகக்கூடிய, மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய, மாற்று மத்தவர்களுடன் சகவாழ்வைப் பேணக்கூடிய, தேசப்;பற்றுடன் தேசத்திற்கு பங்களிப்புச் செய்யக்கூடிய ஒரு முன்மாதிரிமிக்க, கட்டுக்கோப்பான சமூகத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
உள்ளடக்கம் :
இவ்வழிகாட்டல் முஸ்லிம்களின் நம்பிக்கைக் கோட்பாடுகள் தொடர்பான விடயங்களையும்; இறுதி நபித்துவம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது குடும்பத்தார்கள் மற்றும் தோழர்கள் பற்றிய நிலைப்பாடுகளையும் இறைநேசர்கள், மத்ஹப்கள், தஸவ்வுப் (உளப் பரிசுத்தம்) பிற மதத்தவர்களுடனான உறவு, வழிதவறிய சிந்தனைகள் மற்றும் இஸ்லாமிய போதனைகளை முன்வைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவான வழிகாட்டல்களையும் உள்ளடிக்கியுள்ளது.
வேண்டுகோள் :
'மன்ஹஜ்' வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் ஏற்று கடைப்பிடிக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக்கொள்கிறது. மேலும், அனைத்து முஸ்லிம்களும் தமக்கு மத்தியிலும் ஏனைய சமூகங்களுடனும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து அன்பு, இரக்கம், நடுநிலை மற்றும் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்து ஒரு முன்மாதிரியான சமூகத்தை உருவாக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கின்றது.
மேற்குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலிம்கள், சமூகப் பிரதிநிதிகள், முக்கியஸ்தர்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், ஊர்த் தலைமைகள், கல்விமான்கள், துறைசார்ந்தவர்கள், சிவில் அமைப்புக்கள் என அனைவரும் ஓன்றிணைந்து தேவையான நடவடிக்கைகளை மெற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.
குறிப்பு : (மன்ஹஜ்) வழிகாட்டல் தொடர்பான விரிவான ஆவணத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இணையதலத்தில் பார்வையிடலாம்.
Last modified onசெவ்வாய்க்கிழமை, 01 பிப்ரவரி 2022 08:01

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.