கொவிட்-19 தொற்றிற்கு மத்தியில் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடுவது தொடர்பான வழிகாட்டல்கள்

ஜூலை 20, 2021

ACJU/NGS/2021/153

2021.07.19 (1442.12.08)2021 ஜூலை மாதம் 21 ஆம் திகதி ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை நாம் கொண்டாட இருக்கின்றோம். அல்லாஹு தஆலா இப்பெருநாள் தினத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆக்குவானாக. கடந்த ஈதுல் அழ்ஹாவை நாம் கொவிட்-19 தொற்றின் நெருக்கடியில் சந்தித்தது போன்று இவ்வருடமும் அவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே சந்திக்க இருக்கின்றோம். சுகாதார அமைச்சு, வக்ப் சபை மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்களை மதித்து விட்டுக்கொடுப்புடனும், தியாகத்துடனும் கடந்த பெருநாளுடைய தினத்தை கொண்டாடியது போல் இவ்வருடமும் நம்மையும் சமூகத்தையும் இவ்வைரஸிலிருந்து பாதுகாக்க மிகவும் பொறுப்புடன் செயற்படுவோமாக!


கடந்த இரு ஈதுல் ஃபித்ர் மற்றும் ஈதுல் அழ்ஹா ஆகிய சந்தர்ப்பத்தில் விட்டுக்கொடுப்புடனும், தூரநோக்குடனும் வழிகாட்டல்களை மதித்து நிதானத்துடன் செயற்பட்டதை போன்று இவ்வாண்டு ஹஜ் பெருநாளையும் அவ்வாறே நடப்பீர்கள் என்று எதிர்ப்பார்க்கின்றோம். தொடர்ந்தும் கொவிட் உடைய தாக்கம் கடுமையான சோதனையாக இருப்பதினால் மத நடவடிக்கைகள் மூலம் எழும் அபாயத்தைக் குறைக்க இது ஏதுவாக அமைவதுடன் இவ்வாண்டு ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை நாம் கொண்டாடுகையில், நம்முடைய அன்புக்குரியவர்கள், சமூகம் மற்றும் குறிப்பாக, தேசத்தை பாதுகாப்பாக வைத்திருக்க இதுபோன்ற பொறுப்பை நாங்கள் தொடர்ந்து நிலைநிறுத்துவது முக்கியமாகும்.


01. கொவிட் 19 வைரஸின் தாக்கம் தொடர்ந்தும் இருப்பதனால், பொருநாள் தொழுகை விடயத்தில் சுகாதார அமைச்சு மற்றும் வக்பு சபையினால் வழங்கப்படுகின்ற அனைத்து வழிகாட்டல்களையும் உரிய முறையில் பேணி நடந்துக் கொள்வதுடன், பெருநாள் தின காலையில், மஸ்ஜிதில் ஒரு தடவைக்கு அதிகபட்சம் 100 நபர்களைக் கொண்டு பாதுகாப்பான முறையில் சுகாதார நடவடிக்கைகளுடன் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுதல்.


02. பள்ளிவாயலில் தொழுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் குடும்பத்தினருடன் வீட்டில் பெருநாள் தொழுகையை ஜமாஅத்தாக தொழுதுகொள்வதோடு, அது பற்றிய வழிகாட்டல்களை கீழுள்ள இணைப்பினூடாக பெற்றுக்கொள்ள முடியும். https://acju.lk/news-ta/acju-news-ta/item/2218-guidance-on-eid-prayer-kuthbah 


03. நோயாளிகள் மற்றும் சிறுவர்கள் பெருநாள் தொழுகை நடாத்தப்படும் இடத்திற்கு வருகைத் தருவதைத் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.


04. இத்தினங்களில் முஸாபஹா, முஆனகா போன்ற செயல்களை தவிர்ந்து ஸலாம் கூறுவதுடன் போதுமாக்கிக் கொள்ளவேண்டும்.


05. பெருநாள் தினங்களில் ஏழை எளியவர்கள் மீது கருணை காட்டுவதுதோடு, அவர்களுக்கு தம்மாலான உதவிகளை செய்ய வேண்டும்.


06. தற்போதைய சூழ் நிலையில் சுற்றுலாக்கள், பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.


07. உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் போது, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கியுள்ள வழிகாட்டல்களை பின்பற்றுவதுடன் அதனை கீழுள்ள இணைப்பின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். https://acju.lk/en/news/acju-news/item/2215-uldhiyya-guidelines-2021-english


08. துல் ஹிஜ்ஜஹ் மாதம் பிறை ஒன்பது ஸுப்ஹுத் தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் உடைய மூன்றாவது நாள் பிறை 13 (24.07.2021 சனிக்கிழமை) அஸ்ர் வரை ஒவ்வொரு பர்ளான தொழுகைக்குப் பிறகும் தக்பீர் சொல்வது சுன்னத்தாகும்.


இப்புனித தினங்களில் கொவிட்-19 காரணமாக உலகளாவிய ரீதியிலும் எமது நாட்டிலும் ஏற்பட்டுள்ள அனைத்து நெருக்கடிகளும் நீங்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். எம் சமூகத்தின் பொறுமை மற்றும் ஒத்துழைப்புக்கு நாங்கள் நன்றி கூறுவதோடு, இலங்கையை பாதுகாப்பாக வைத்திருக்க தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும், கடந்த இரண்டு ஆண்டுகளில் சமூகம் செய்த பெரும் தியாகங்களை நாங்கள் முழுமையாக உணர்ந்ததோடு, மேலும் நிலைமை மேம்படும் பட்சத்தில், அதிகமான மத மற்றும் சமூக நடவடிக்கைகளை மீண்டும் பாதுகாப்பாக தொடங்க முடியும் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்.


வஸ்ஸலாம்.


அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onசெவ்வாய்க்கிழமை, 20 ஜூலை 2021 11:50

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.