துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்களும் இந்நாட்களில் செய்யப்பட வேண்டிய நல்லமல்களும்

ஜூலை 09, 2021

ACJU/NGS/2021/131 

2021.07.09 (1442.11.28)


துல்ஹஜ் மாதம் தியாகத்தை பறைசாட்டும் மாதமாகும். இம்மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிகவும் சிறப்பு பொருந்திய தினங்களாகும். இத்தினங்கள் மீது அல்லாஹ் அல்குர்ஆனில் சத்தியம் செய்து இவை சிறப்புப் பொருந்திய தினங்கள் என்பதை எமக்கு உணர்த்தியுள்ளான்.


"விடியக்காலையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக" (அல்பஜ்ர் 1-2)


இவ்வசனத்திற்கு இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களும், ஏனைய சன்மார்க்க அறிஞர்களும் இங்கு குறிப்பிடப்படும் இரவுகள் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து இரவுகள் என விளக்கமளித்துள்ளார்கள்.


'துல்ஹஜ் மாதத்தில் முதல் பத்து தினங்களிலும் புரியப்படும் நல்லமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களிலும் செய்யும் நல்லமல்கள் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதாக இல்லை.' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் : அபூதாவூத் 2438)


துல்ஹஜ் மாதத்தின் ஆரம்பப் பத்து நாட்களில் செய்யப்பட வேண்டிய நல்லமல்கள்


1. துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப ஒன்பது நாற்களில் நோன்பு நோற்றல்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துல்ஹஜ் மாதம் (முதல்) ஒன்பது நாட்களிலும், ஆஷூராவுடைய தினத்திலும், அய்யாமுல் பீழுடை மூன்று தினங்களிலும், மாதத்தின் முதல் திங்கள், வியாழன் தினங்களிலும் நோன்பு நோற்க கூடியவர்களாக இருந்தார்கள் என ஹுனைதா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: ஸுனனு அபீ தாவூத் : 2437)


2. அறபா நோன்பு நோற்றல்.
துல்ஹஜ் மாதத்தின் பிறை ஒன்பதாவது தினம் அறபா தினமாகும். அத்தினத்தில் நோன்பு நோற்பது ஸுன்னத்தாகும்.
அபூ கதாதா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். அறபா தின நோன்பு பற்றி நபியவர்களிடம் வினவப்பட்ட போது, 'முந்தைய ஓராண்டிற்கும் பிந்தைய ஓராண்டிற்கும் அது பாவப் பரிகாரமாக அமையும்' என கூறினார்கள். (நூல்: ஸஹீஹு முஸ்லிம் : 1162)
அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது) நாளில் நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, '


3. தக்பீர், தஸ்பீஹ், தஹ்லீல் கூறல்.
இப்னு உமர், அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் (துல்ஹஜ் மாத முதல்) பத்து நாட்களில் சந்தை பகுதிகளுக்கு செல்லும் போது தக்பீர் கூறுவார்கள். அவர்கள் இருவரும் தக்பீர் சொல்லும்போது மக்களும் அவர்களுடன் (சேர்ந்து) தக்பீர் சொல்வார்கள். (நூல்: ஸஹீஹுல் புஹாரி)
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் மேற்கோள்ளப்படும் அமல்களை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதும், மகத்தானதும் வேறேதும் இல்லை. எனவே, அந்நாட்களில் லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ் ஆகியவற்றை அதிமாகக் கூறுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத் : 5444)

 

4. உழ்ஹிய்யாஹ் நிறைவேற்றல்.
உழ்ஹிய்யாவை பெருநாள் தினத்தன்றும், அதனை அடுத்து வரும் மூன்று நாட்களிலும் நிறைவேற்ற முடியும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கொம்புள்ள, கறுப்பு வெள்ளை கலந்த இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தமது கரத்தால் அறுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் பெயர் ('பிஸ்மில்லாஹ்') கூறினார்கள். தக்பீரும் ('அல்லாஹு அக்பர்') சொன்னார்கள். மேலும், தமது காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக்கொண்டு அறுத்)தார்கள் என அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: ஸஹீஹு முஸ்லிம் : 1966)


துல்ஹஜ் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் நோன்பு நோற்பது, இரவு நேரங்களை நல்லமல்களைக் கொண்டு அலங்கரிப்பது, அதிகமாக அல்லாஹ்வை நினைவூட்டுவது போன்ற இபாதத்களில் ஈடுபடுவதின் மூலம் அவற்றின் நன்மைகளை பெற்றுக் கொள்வோம்.

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onவெள்ளிக்கிழமை, 09 ஜூலை 2021 08:12

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.