கலாநிதி தைக்கா ஷுஐப் ஆலிம் அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி

ஜூன் 15, 2021

ACJU/NGS/2021/096

2021.06.15 (1442.11.04)


தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தைக்கா ஷுஐப் ஆலிம் அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞரும், ஆய்வாளரும், பன்னூhல் ஆசிரியரும், பன்மொழித்துறை நிபுணரும், அரூஸியதுல் காதிரிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவருமான கலாநிதி தைக்கா ஷுஐப் ஆலிம் அவர்கள் தனது 90 வயதில் நேற்றிரவு இந்தியாவின் கேரளா மாநிலத்தில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னார், தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் வசிக்கும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் அரபு, அரபுத் தமிழ், பாரசீகம், உருது ஆகிய மொழிகளுக்கு வழங்கிய பங்களிப்புகள் என்ற தலைப்பில் 30 வருட ஆய்வை மேற்கொண்டு 880 பக்கங்களைக் கொண்ட ஒரு ஆய்வுநூலை வெளியிட்டதன் மூலம் தமிழ் பேசும் முஸ்லிம்களின் வரலாற்றுப் பங்களிப்பை ஆவணப்படுத்த மாபெரும் பங்களிப்பைச் செய்தவராவார்.
சிறந்த அரபு அறிஞருக்கான 'இந்தியாவின் தேசிய விருதை' 02 தடவைகள் வென்ற தைக்கா ஷுஐப் ஆலிம் அவர்கள், உலகின் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்களின் பட்டியலிலும் இடம் பிடித்தவர்களாவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


அன்னார் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன முஸ்லிம் சேவைக்கு மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பங்களிப்பு செய்துள்ளார்கள். இலங்கையில் 300க்கும் அதிகமான மஸ்ஜித்களை உருவாக்கியதன் மூலமும், இலங்கையில் பழம்பெரும் அரபுக் கல்லூரிகளில் ஒன்றாகிய தென்னிலங்கையில் உள்ள மத்ரஸதுல் பாரி அரபுக் கல்லூரியை ஸ்தாபித்து வழங்கியதன் மூலமும், அரபுத் தமிழில் பல கிரந்தங்களை எழுதியதன் மூலமும் அன்னாரும், அவர்களின் மூதாதையர்களும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும், இந்நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்திற்கும் பாரிய பங்களிப்புக்களைச் செய்துள்ளார்கள் என்பது ஈன்று குறிப்பிடத்தக்கதாகும்.


இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் ஆன்மீக வழிகாட்டலினால் பிரயோசனம் பெற்றவர்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அனைத்து உலமாக்கள் சார்பிலும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றது.


எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, தவறுகளை மன்னித்து, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.

 

 
அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onசெவ்வாய்க்கிழமை, 15 ஜூன் 2021 10:38

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.