அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளினூடாக கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மேற்கொள்ளும் நிவாரண வேலைத்திட்டம்

ஜூன் 04, 2021


2021.06.04 (1442.10.22)ஏழை எளியோருக்கும், கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டு அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது சிரமப்படுவோருக்கும் உதவுவதன் மூலம் அல்லாஹ்வின் ரஹ்மத்தை அடைந்து கொள்வோமாக!
எமது நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான நிலை யாவரும் அறிந்ததே. சில பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டும் ஏனைய பகுதிகளில் பிரயாணத் தடை விதிக்கப்பட்டும் இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் நாளாந்தம் உழைக்கக்கூடியவர்கள், கூலி வேலை செய்யக் கூடியவர்கள் என பலரும் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.


எனவே, இத்தகைய சூழலில் அதிக தேவையுள்ளவர்களை இனங்கண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளினூடாக அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்வதற்கான ஒரு வேலைத் திட்டத்தை ஜம்இய்யத்துல் உலமா அறிமுகம் செய்துள்ளது. இதற்கா அங்குரார்ப்பண நிகழ்வு Zoom ஊடாக நேற்று (03.06.2021) மாலை 04.00 மணிக்கு நடைபெற்றது.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு மொத்தமாக 162 மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகள் காணப்படுகின்றன. அந்த ஒவ்வொரு கிளையிலும் நிவாரண ஒருங்கிணைப்பு மையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. அந்த ஒவ்வொரு மையத்திற்கும் உட்பட்ட பகுதிகளில் உணவின்றி தவிப்போர்களுக்கான உதவிகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்கள் ஜம்இய்யாவின் அனைத்து கிளைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.


மிக நெருக்கடியான நிலையில் உள்ளவர்கள் தங்களின் உணவுத் தேவையை, ஜம்இய்யாவின் கிளைகள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் துரித இலக்கத்தினூடாக அந்தந்த பிரதேசத்திலுள்ள ஒருங்கிணைப்பு நிவாரண மையத்திற்கு தெரிவித்தால் அதற்கான உதவிகள் மேற்கொள்ளப்படுவதற்கான முயற்சிகள் அதனூடாக செய்யப்படும். அத்துடன் உதவி வழங்கக்கூடியவர்களும் அப்பிரதேசங்களில் அமைக்கப்படும் நிவாரண மையங்களுக்கு அதன் துரித இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் தமது பங்களிப்புகளை வழங்க முடியும். மேலும் ஏலவே, எந்தெந்த மஸ்ஜித் சம்மேளனங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் இந்த உயர் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனரோ அவர்கள் தொடர்ந்தும் அப்பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளும் அதேநேரம் அவர்களுக்கு ஜம்இய்யா தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.


பசித்தவர்களின் பசியை போக்க முன்வருபவர்களுக்கு ஹதீஸ்களில் பல நன்மாராயங்களும் கூறப்பட்டுள்ளன. அவற்றை பெற்றுக் கொள்வதற்கு இந்த நெருக்கடியான சூழ்நிலையை ஒரு சந்தர்ப்பமாக ஆக்கிக் கொள்வோமாக. ஆமீன்.

 

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onசனிக்கிழமை, 05 ஜூன் 2021 04:07

Related items

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.