அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து வெளியிடும் முக்கிய அறிவித்தல்

ஜூன் 04, 2021

2021.06.04

 

01. ஆன்மீக ரீதியான வழிகாட்டல்கள்:


 அல்லாஹ்வின் அன்பையும், அருளையும், நெருக்கத்தையும் பெற்றுத்தரக் கூடிய வணக்க வழிபாடுகளிலும், நற்காரியங்களிலும் அதிகமாக ஈடுபடுவதோடு, எமது கஷ்டங்களையும் துன்பங்களையும் அல்லாஹ்விடம் பொறுப்புச்சாட்டி அவன் மீது பூரண நம்பிக்கை வைத்தல்.


 இச்சோதனைகள் நீங்குவதற்காக ஏலவே அறிவுறுத்தியது போல குனூத் அந்-நாஸிலாவை ஐவேளைத் தொழுகைகளில் ஓதுவதோடு, பாவமான காரியங்களிலிருந்து விலகி, துஆ, திக்ர், குர்ஆன் திலாவத், இஸ்திஃபார், நோன்பு மற்றும் சதகா போன்ற நல்லமல்களில் ஈடுபடல்.


 ஆண்கள், பெண்கள், வாலிபர்கள், வயோதிபர்கள் அனைவரும் தத்தமது வீடுகளில் இருந்தவாறு இச்சோதனை நீங்க அல்லாஹ்விடம் மன்றாடிப் பிரார்த்திக்கும் வழமையை உருவாக்கிக் கொள்வதோடு, காலை, மாலை துஆக்களையும் இந்நோயிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான துஆக்களையும் தவறாது ஓதி வருதல்.


 ஐவேளைத் தொழுகைகளை வீட்டில் உள்ளவர்களுடன் மாத்திரம் சேர்ந்து உரிய நேரத்தில் ஜமாஅத்தாக நிறைவேற்றிக் கொள்ளல்.

 

02. தொற்று நோய்கள் தொடர்பில் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களது வழிகாட்டல்கள்:

 

 தனிமைப்படுத்தல் நபியவர்களின் அறிவுரையாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள் 'சிங்கத்தைக் கண்டால் விரண்டோடுவது போன்று நீ தொழு நோயாளியிடமிருந்து விரண்டோடு'. (புகாரி - 5707)


 பௌதீக இடைவெளியைப் (Physical Distancing) பேணுதல்; நபியவர்களின் கட்டளையாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் 'தொழுநோய் உள்ளவர்கள் ஆரோக்கியமானவர்களிடமிருந்து விலகியிருத்தல் வேண்டும்'. (புகாரி 5771, முஸ்லிம் 2221)


 பயணத்தடை நபியவர்களின் வழிகாட்டலாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள் 'தொற்று நோயிருக்கும் ஊருக்குள் நுழையவேண்டாம். அந்த நோய் ஏற்பட்ட ஊரிலிருந்து வெளியேறவும் வேண்டாம்'. (புகாரி 5729/5730/6973, முஸ்லிம் 2219)


 உங்களுக்கு நோய் அறிகுறிகள் இருந்தால் பிறரை ஆபத்துக்குள்ளாக்க வேண்டாம் என்பது நபியவர்களது போதனையாகும். 'தான் ஆபத்தில் சிக்கிக்கொள்வதுமில்லை, பிறரை ஆபத்தில் சிக்க வைப்பதுமில்லை'. (சுனன் இப்னு மாஜா 2340)


 இது போன்ற சந்தர்ப்பங்களில் வீட்டிலிருத்தல் மிகவும் முக்கியமான அம்சமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'தனக்கு தீங்கு விளைவிப்பதும் கூடாது, பிறருக்கு தீங்கு விளைவிப்பதும் கூடாது. எவர் மற்றவர்களுக்கு தீங்கு செய்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் தீங்கு செய்வான், யார் மற்றவர்களுக்கு கஷ்டங்களை ஏற்படுத்துகிறானோ, அவனுக்கு அல்லாஹ் கஷ்டங்களை ஏற்படுத்துவான்'. ஹாக்கிம் (2345), பைஹகி (11384)


எனவே மேற்படி நபிமொழிகளை பின்பற்றி இந்நோய் பரவாமல் இருக்க நாம் ஒவ்;வொருவரும் முயற்சி செய்ய வேண்டும்.


03. சுகாதார ரீதியான வழிகாட்டல்கள்:

 பயணத்தடை அமுலிலிருக்கும் போது வீட்டைவிட்டு வெளியில் செல்வதை முற்றுமுழுதாகத் தவிர்ந்துக் கொள்ளல். அத்தியவசிய பொருட்களை வீட்டுக்கு விநியோகம் செய்யும் முறையினூடாகப் (Home Delivery) பெற்றுக் கொள்ளல்.


 கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் எம்மனைவரதும் நலனுக்காகவே பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளங்கி பொறுப்புணர்வுடன் அதனை முழுமையாக பின்பற்றி நடத்தல்.


 பயணத்தடை இல்லாத சந்தர்ப்பங்களில் வெளியில் செல்பவர்கள் உரிய முறையில் முகக்கவசம் அணிதல், 1 மீற்றர் அல்லது 3 அடி பௌதீக இடைவெளியை பேணி நிற்றல், சன நெரிசலான இடங்களை தவிர்ந்துக் கொள்ளல், கைகளை அடிக்கடி நன்றாக கழுவிக் கொள்ளல் போன்ற சுகாதார வழிகாட்டல்களைப் பேணி நடந்துக் கொள்ளல். அத்துடன் வீடு திரும்பியவுடன் கைகளை கழுவி நன்றாக சுத்தம் செய்த பின் அல்லது குளித்து ஆடையை மாற்றிய பின் குடும்ப அங்கத்தவர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ளல்.


 கொவிட்-19 இலிருந்து பாதுகாப்பதற்காக தடுப்பூசி ஏற்றிக் கொள்வது பற்றிய மார்க்க வழிகாட்டலை ஜம்இய்யா ஏற்கனவே வழங்கியுள்ளது. எனவே வைத்தியர்களின் ஆலோசனையுடன் உங்களது பகுதியிலுள்ள தடுப்பூசி வழங்கும் இடங்களுக்குச் சென்று அதனை ஏற்றிக் கொள்ளல்.


 கொவிட்-19 தொற்று உங்களுக்கு உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அதுபற்றி உங்கள் பிரதேச பொது சுகாதார அதிகாரிக்கு அறிவித்து, உரிய வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ளல்.


 சுகாதார அதிகாரிகளினால் வெளியிடப்படும் அனைத்து வழிகாட்டல்களையும் சரியாகப் பின்பற்றி நடந்து, இவ்வைரஸின் பரவலைத் தடுக்க அனைவரும் பங்களிப்பு செய்தல்.


 பயணத்தடை மற்றும் தனிமைப்படுத்தல் அறிவுறுத்தல்களுக்கு முரணாக செயற்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறான தருணங்களில் சுகாதார வழிகாட்டல்களையும் பயணக் கட்டுப்பாடுகளையும் பின்பற்றுவதுதே மார்க்கமாகும். மேற்படி வழிகாட்டல்களையும் கட்டுப்பாடுகளையும் புறக்கணிப்பதன் மூலம் நாம் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி உயிராபத்து ஏற்பட்டால் நமக்கு நாமே அழிவை ஏற்படுத்தியதாக அமைந்து விடும் என்பதை நாம் ஒவ்வொருவரும் விளங்கி செயற்பட வேண்டும். மேலும் ஒருவரின் பொடுபோக்கின் காரணமாக இத்தொற்று பிறருக்கு பரவி மரணம் ஏற்பட்டால், பிறர் இந்நோயினால் மரணமானதற்கு அவர் ஒரு காரணமாக ஆகிவிடலாம். இவற்றை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. ஏனெனில் இஸ்லாம் தனக்குத் தானே அழிவை அல்லது தீங்கை ஏற்படுத்திக் கொள்வதை தடுத்துள்ள அதேநேரம் பிறருக்கு அழிவை அல்லது தீங்கை ஏற்படுத்துவதையும் தடுத்திருக்கின்றது.

 

குறிப்பு:


 மஸ்ஜித்கள் விடயமாக சுகாதார அமைச்சு, வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கியுள்ள வழிகாட்டல்களை பின்பற்றி நடத்தல்.
 நிவாரணப் பணிகளை மேற்கொள்பவர்கள் சுகாதார விதிமுறைகளைப் பேணி அதற்கான அனுமதியை குறித்த பிரதேசத்தின் பொலிஸ் நிலையத்தில் பெற்றுக் கொள்ளல்.

Last modified onசனிக்கிழமை, 05 ஜூன் 2021 04:09

Related items

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.