நெருக்கடியான சூழலில் தர்மத்தின் மூலம் அல்லாஹ்வின் ரஹ்மத்தை அடைவோம்

மே 29, 2021

ACJU/NGS/2021/087

2021.05.28 (1442.10.15)


உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் நம் நாட்டிலுள்ள பலரும் பாதிக்கப்பட்டுள்ளதை யாவரும் அறிவோம். பாதிக்கப்பட்ட அனைவரும் அவசரமாக இந்நோயிலிருந்து குணமடைய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.


இவ்வைரஸின் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டில் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக நாளாந்தம் உழைத்து தமது தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தம்மாலான முடிந்த உதவிகளை செய்ய முன் வரவேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் கேட்டுக் கொள்கின்றது.


உணவளிப்பது என்பது இஸ்லாத்தில் பெரும் நன்மையை ஈட்டித் தரும் செயலாகும். 'அயலவன் பசித்திருக்க தான் மாத்திரம் வயிறு நிரம்ப புசிப்பவன் உண்மை விசுவாசியல்ல' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (நூல்: பைஹகி). அதேபோன்று 'சதகாக்கள் மோசமான முடிவுகளை விட்டும் பாதுகாக்கும்' என்பதும் நபி மொழியாகும் (நூல்: திர்மிதீ). எனவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் ஒவ்வொருவரும் அதிகமாக சதகாக்களை வழங்குவதில் ஈடுபட வேண்டும்.


ஒவ்வொரு தனி நபரும் தம்மால் முடியுமான ஒரு ஏழை மிஸ்கீனை பொறுப்பெடுத்து உதவுவதன் மூலம் பல ஏழைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் (மாவட்ட மற்றும் பிரதேசக்) கிளைகள், தமது பிரதேசத்திலுள்ள மஸ்ஜித் சம்மேளனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து தத்தமது பிரதேசங்களில் வாழும் பாதிக்கப்பட்ட மக்களை இனங்கண்டு இன, மத பேதமின்றி மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்வதோடு, பக்கத்து மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தங்கள் உதவிக் கரங்களை நீட்டுமாறு ஜம்இய்யா மிக அன்பாக வேண்டிக் கொள்கின்றது. அத்துடன் இவ்வாறான நிவாரண ஏற்பாடுகளை செய்பவர்கள் உரிய அனுமதிகளைப் பெற்றுக் கொண்டு, அரசாங்கத்தின் சட்டங்களை மதித்து அவற்றை முன்னெடுக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.


எல்லாம் வல்ல அல்லாஹ் இக்கொடிய நோயின் பாதிப்பிலிருந்து அனைவரையும் பாதுகாகப்பானாக.

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onசனிக்கிழமை, 29 மே 2021 01:38

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.