பலஸ்தீன பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் அப்பகுதியில் அமைதியும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் ஜம்இய்யா பிரார்த்திக்கின்றது

மே 21, 2021

Ref: ACJU/NGS/2021/070

2021.05.21

 

இரண்டு வாரங்களுக்கு அதிகமாக அப்பாவி பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமைந்துள்ள போர்நிறுத்த உடன்பாட்டை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வரவேற்கும் அதேநேரம் எகிப்து அரசாங்கம் உட்பட இதற்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் ஜம்இய்யா தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.


புனித ரமழான் மாதத்தின் இறுதி நாட்களில், முஸ்லிம்களின் 3 வது புனித ஸ்தலமான மஸ்ஜித் அல் அக்ஸாவில், மார்க்க வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் இவ்வன்முறை ஆரம்பித்துள்ளது. 1947 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை அப்பாவி மக்கள் மீது நடாத்தப்படும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நாம் கடுமையாக கண்டிக்கும் அதேநேரம் இந்த அட்டூழியங்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் குரல் கொடுக்க வேண்டுமென்றும் அழைப்பு விடுக்கின்றோம்.


பலஸ்தீன் மக்களின் பாதுகாப்பும், சுதந்திரமும் சர்வதேச அமைதிக்கு, குறிப்பாக மத்திய கிழக்கின் அமைதிக்கு வழிவகுக்கும் என்பது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். சர்வதேச சமூகம் தமக்கிடையிலுள்ள வேறுபாடுகளை களைந்து பல வருட காலமாக இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு வழங்க மனிதாபிமான அடிப்படையில் முன்வர வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை இவ்விடயத்தில் தலையிட்டு இதற்கு நிரந்தர தீர்வொன்றை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றோம்.


நம் நாட்டு பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பலஸ்தீனர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் கரிசனையுடன் நீண்ட காலமாக பலஸ்தீன ஒத்துழைப்பு இலங்கை அமைப்பின் ஸ்தாபக தலைவராக செயற்படுவதற்கும் பலஸ்தீன மக்களின் நாட்டுக்கான சட்டரீதியான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் அறிக்கை வெளியிட்டதற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களுக்கும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.


மஸ்ஜித் அல்-அக்ஸா மற்றும் அனைத்து வழிபாட்டு தலங்களின் பாதுகாப்பிற்காகவும், உலகில் நீதி, சுதந்திரம் மற்றும் அமைதி நிலைநாட்டப்படவும் நாம் பிரார்த்திக்கின்றோம்.


எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் துன்பங்களை நீக்கி, அவர்களுக்கு நிம்மதியையும் அமைதியையும் வழங்கி அருள்வானாக. ஆமீன்.

 


அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.