புனித ரபியுல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு விழா

ஏப் 13, 2021

கடந்த 2019 (ஹிஜ்ரி 1440) புனித ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தேசிய மட்டத்தில் இரண்டு கட்டுரைப் போட்டிகளை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடாத்த தீர்மானித்து, அதற்கான அறிவித்தலை வெளியிட்டது. அதில் 2020.01.31 ஆம் திகதிக்கு முன்னர் போட்டியாளர்களின் கட்டுரைகள் யாவும் பதிவுத் தபால் மூலம் தலைமையகத்திற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் எனவும் நிபந்தனையிடப்பட்டிருந்தது.

அதற்கமைய தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் 4500 - 5000 இடைப்பட்ட சொற்களைக் கொண்ட 81 ஆய்வுக் கட்டுரைகளும் 1500 - 2000 இடைப்பட்ட சொற்களைக் கொண்ட கட்டுரைப் போட்டிக்கு சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் 390 கட்டுரைகளும் கிடைக்கப் பெற்றன.

கட்டுரைகள் யாவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவையா என ஏற்பாட்டுக் குழுவினால் சரிபார்க்கப்பட்டதன் பின்னர் அதில் தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள் இக்குழுவால் நியமிக்கப்பட்ட திருத்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழா சென்ற 2021.04.12 ஆம் திகதி காலை 10.00 மணி முதல் கொழும்பு 10 யில் அமைந்துள்ள இஸ்லாமிக் சென்டர் மண்பத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயளாலர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அஷ்ஷைக் எம். மின்ஹாஜ் அவர்களுடைய கிராஅத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப பொருளாளர் கலாநிதி அஷ்-ஷைக் ஏ. அஹ்மத் அஸ்வர் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பற்றிய அறிமுகமொன்று (PPT) அஷ்-ஷைக் அர்ஷத் அதாஉர் ரஹ்மான் அவர்களால் நடாத்தப்பட்டது. அதில் ஜம்இய்யாவின் சேவைகள் மற்றும் பணிகள் பற்றி மிக சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டது.
அதனையடுத்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. அதில் எழுத்தாளர்களால் செய்யப்பட்ட சாதனைகள் பற்றியும், எழுத்தாளர்களின் எழுத்துக்களின் தாக்கம் பற்றியும் குறிப்பிட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து, சான்றிதழ் வழங்கும் வைபவம் இடம்பெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழுடன் காசோலையும், ஆறுதல் பரிசுக்குரியவர்களுக்கான சான்றிதழுடன் காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இப்போட்டி பற்றிய பின்னூட்டல் கருத்துக்கள் போட்டியில் கலந்து கொண்டவர்களினால் முன்வைக்கப்பட்டது.
இறுதியாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும், கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவருமான அஷ்ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் கப்பாரத்துல் மஜ்லிசுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

 

                        

Last modified onவெள்ளிக்கிழமை, 07 மே 2021 11:45

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.