வழிதவறிய சிந்தனைகளிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வோம்

மார் 18, 2021

ACJU/NGS/2021/026

2021.03.18
1442.08.04

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு

வழிதவறிய சிந்தனைகளிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வோம்

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம், பல நூற்றாண்டுகளாக அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தின் கொள்கையைப் பின்பற்றி, இந்நாட்டின் இறைமைக்கும் பாதுகாப்பிற்கும் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி, நாட்டின் சட்டங்களைப் பேணி, ஏனைய சமூகங்களுடன் சகவாழ்வைப் பேணி வாழ்ந்து வந்த சமூகமாகும்.

அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தின் கொள்கைக்கு மாற்றமான வழிதவறிய சிந்தனைகள் முஸ்லிம் சமூகத்தில் ஊடுருவும் போது அவை தொடர்பான விழிப்புணர்வை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டியது சன்மார்க்க அறிஞர்களின் கடமையாகும். அவ்வாறே பொது மக்களும் மார்க்க ரீதியான புதிய சிந்தனைகள் ஏதேனும் வரும்போது, அவை தொடர்பாக ஆலிம்களை அணுகி தெளிவுகளை பெற்றுக் கொள்வதும் அவர்களது பொறுப்பாகும்.

இதனடிப்படையில், சுபர் முஸ்லிம் சிந்தனை பல தெளிவான அல்-குர்ஆன் வசனங்களுக்கும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கும் மாற்றமானவையாக இருப்பதுடன், அல்-குர்ஆனிலும், அஸ்-ஸுன்னாவிலும் மறுமை நாளின் அடையாளங்கள் தொடர்பாக வந்துள்ள பல விடயங்கள் பற்றிய சன்மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்துக்களுக்கும் மாற்றமாக, பகுத்தறிவைப் பயன்படுத்தி சொந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் காணமுடிகின்றது. அண்மைக்காலமாக இச்சிந்தனை இலங்கையிலும் சிலரிடம் பரவி வருவதை காணக்கூடியதாக உள்ளது.

இது தொடர்பான மார்க்கத் தீர்ப்பினை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 2020.10.08 ஆம் திகதி வெளியிட்டுள்ளது. அதனைப் பின்வரும் இணையதள இணைப்பில் பார்க்க முடியும்.

https://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/2087-letter-on-2020-07-31

ஆகவே, வழிதவறிய இச்சிந்தனை தொடர்பான விடயங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வதையும், அவற்றை பிரசாரம் செய்வதையும் முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறு சகல முஸ்லிம்களையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது. அத்துடன், இச்சிந்தனையுடையவர்கள் இந்நாட்டு மக்களினதும் முஸ்லிம்களினதும் பிரதான நீரோட்டத்திலிருந்து விலகிச் செல்லும் நிலை காணப்படுவதால்,  இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் அச்சம் காணப்படுகின்றது. எனவே உரிய அரச அதிகாரிகளுக்கும் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூகப் பொறுப்புதாரிகள் இவ்வாறான கொள்கையில் உள்ளவர்களை நேரான வழியின் பக்கம் நளினமாகவும், அன்பாகவும் நெறிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.

எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா இவ்வாறான வழிதவறிய சிந்தனைகளிலிருந்து நம்அனைவரையும் பாதுகாப்பானாக.

அஷ்ஷேக் எம். அர்கம் நுராமித்,
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா.

Last modified onவியாழக் கிழமை, 18 மார்ச் 2021 09:18

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.