உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான வேண்டுகோளுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆதரவை தெரிவிக்கின்றது

மார் 05, 2021

Ref: ACJU/MED/2021/002

04.03.2021

 

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி அப்பாவி வழிபாட்டாளர்கள் மற்றும் பலர் மீது உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை அடையாளம் காட்டி, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு முன்வைக்கப்படும் பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் ஆதரிக்கின்றது. இந்த மோசமான தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சகல மதங்களைச் சேர்ந்த சகோதர சகோதரிகளின் வருத்தத்திலும் வேதனையிலும் நாமும் பங்கு கொள்கின்றோம்.

இந்த தாக்குதல்களின் விளைவாக நம் நாட்டில் வாழும் எல்லா இன, மத மக்களுடன் சமாதானமாகவும் இணக்கமாகவும் வாழ்ந்து வந்த இலங்கை முஸ்லிம்களாகிய நாம் மிகவும் பாதிக்கப்பட்டதோடு, அன்னியப்படுத்தப்பட்டவர்களாகவும் பார்க்கப்பட்டோம். இதன் விளைவாக முஸ்லிம்களது அடையாளங்களும் உரிமைகளும் கேள்விற்கு உற்படுத்தப்பட்டு பல இழப்புகளையும் முஸ்லிம் சமூகம் சந்தித்தது.

உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதற்காகவும், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதற்காகவும் நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கின்றோம். ஆகவே, பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோளை நேர்த்தியாக சிந்திக்கக்கூடிய மக்கள் அனைவரும் முழு மனதுடன் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

2019 ஜூலை 21 ஆம் திகதியன்று கட்டுவபிட்டிய புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்கள் இத்தாக்குதல் வழிதவறிய வாலிபர்களை பயன்படுத்தி சர்வதேச சக்திகளின் தேவைகளை நிறைவேற்றிகொள்ள மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்ட வார்த்தைகளை நினைவுகூர்கிறோம்.

பாதிக்கப்பட்டவர்களின் இவ்வுணர்வுகளுடன் நாங்கள் முழு மனதுடன் இணைந்துகொள்வதோடு, குற்றவாளிகளை வெளிப்படுத்துமாறு மேற்கொள்ளப்படும் இவ்வேண்டுகோளில் அனைத்து இலங்கையர்களும் ஒன்றுபடுமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் உரிய பரிகாரம் வழங்குவதன் மூலம் அவர்களுக்கு தேவையான ஆறுதலையும் வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related items

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.