இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளும் அடையாளங்களும் கௌரவமும் பாதுகாக்கப்படல் வேண்டும்

பிப் 21, 2021

Ref: ACJU/PRE/2021/001

2021.02.21 (1442.07.08)

 

ஆயிரமாண்டு கால வரலாற்றைக் கொண்ட இலங்கை முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் எல்லாக் காலங்களிலும் தனது கடமைகளை நிறைவாக நிறைவேற்றி வந்துள்ள, தனக்குரிய உரிமைகளைப் பெற்று அனுபவித்து வந்துள்ள ஒரு சமூகமாகும் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.


வரலாறு நெடுகிலும் நாட்டின் இறைமையை மதித்து, சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு தனது செயற்பாடுகளை அமைத்துக்கொண்ட ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகம் இருந்து வந்துள்ளது என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது.


பல்லின மக்களும் பல்சமயத்தவர்களும் வாழும் இந்நாட்டில் முஸ்லிம்கள் தமது சமய, கலாசார தனித்துவத்தைப் பேணிய நிலையில் பிற சமூகங்களோடு நல்லிணக்கத்துடன் கலந்து, இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர்.


இந்நாட்டில் இருக்கின்ற மஸ்ஜித்கள், அரபு மத்ரஸாக்கள், மக்தப்-குர்ஆன் மத்ரஸாக்கள், அஹதிய்யா பாடசாலைகள், முஸ்லிம் தனியார் சட்டம், ஹலால் உணவு முறைமை, முதலான நிறுவனங்களும் ஒழுங்குகளும் முஸ்லிம்கள் தமது சமய, கலாசார தனித்துவத்தைப் பேணி நல்ல முஸ்லிம்களாகவும் நற்பிரஜைகளாகவும் வாழ துணைபுரிபவையாகும். இவ்வமைப்புக்களால் நாட்டின் பாதுகாப்புக்கோ, சமூக நல்லிணக்கத்திற்கோ எத்தகைய அச்சுறுத்தலும் ஏற்பட்டதில்லை என்பதை இவை பற்றி தெரிந்தவர்கள் நன்கு அறிவர்.


ஆயினும், 2019.04.21 அன்று முஸ்லிம் பெயர் தாங்கிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட, ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தாலும் வன்மையாகக் கண்டிக்கப்பட்ட மிலேச்சத்தனமான, பயங்கரவாத தாக்குதலையடுத்து முஸ்லிம் சமூகமும் அது சார்ந்த நிறுவனங்களும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டதோடு முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலையும் உருவாக்கப்பட்டுள்ளமை துரதிர்ஷ்டவசமானதாகும். தீவிரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். எனினும் அப்பாவி முஸ்லிம் மக்களும் மேற்குறிப்பிடப்பட்ட முஸ்லிம்களின் நிறுவனங்களும் பலியாடுகளாக்கப்படக் கூடாது.


இத்தகைய ஒரு கவலைக்கிடமான சூழ்நிலையில் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் பின்வரும் வேண்டுகோள்களை முன்வைக்க விரும்புகின்றோம்.


இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கும் மத்ரஸா, முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் ஜனாஸாக்களை அடக்கம் செய்தல் போன்ற முஸ்லிம்களது உரிமைகளுக்கும், அடையாளங்களுக்கும் எதிராக தொடர்ந்தேர்ச்சியாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களையும், அவற்றை அடிப்படையாக வைத்து முஸ்லிம்கள் பற்றிய எதிர்ப்புணர்வை அப்பாவி மக்கள் மனதில் விதைப்பதையும், அவற்றை வைத்து அரசியல் செய்ய முற்படுவதையும் சகல அரசியல் வாதிகளும் கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம். இனவாதத்தை அடிப்படையாக வைத்து அரசியலில் ஈடுபடும் எவரும் இந்நாட்டை சுபீட்சத்தின் பக்கம் ஒருபோதும் இட்டுச் செல்ல முடியாது.


முஸ்லிம்களினதும் இந்நாட்டுப் பிரஜைகளினதும் உரிமைகளையும் அடையாளங்களையும் வைத்து அரசியல் செய்யும் இவ்வாறானவர்களின் இழிவான செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்தையும் இந்நாட்டுப் பிரஜைகளையும் பாரியளவு பாதித்துள்ளதோடு இந்நாட்டில் காலாகாலமாக இனங்களுக்கு மத்தியில் நிலவிவரும் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் கேள்விக்குறியாக்கியுள்ளன என்பதை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது.


ஊடகங்கள், முஸ்லிம்கள் பற்றிய எதிர்ப்புணர்வை ஊட்டும் சிலரது சதித்திட்டங்களுக்கு தீனிபோடும் வகையில் ஒருபோதும் செயற்படக் கூடாது என்பதை இங்கு வலியுறுத்துவதோடு இத்தகைய செயற்பாடுகள் இந்நாட்டில் இனங்களுக்கு மத்தியில் காணப்படும் ஐக்கியத்தை இல்லாமலாக்குவதற்கு காரணமாக அமையுமென்பதையும் ஞாபகமூட்ட விரும்புகின்றோம்.


முஸ்லிம் சமூகம்சார்ந்த மேற்குறிப்பிட்ட நிறுவனங்களைப் பற்றியோ ஏனைய அதன் செயற்பாடுகள் பற்றியோ தெளிவுகள் தேவைப்படுபவர்கள் அவைபற்றி ஜம்இய்யா வெளியிட்டுள்ள வெளியீடுகளை பார்க்குமாறு வேண்டிக் கொள்ளும் அதேநேரம் மேலதிக விளக்கங்கள் தேவைப்படும் போது எம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.


மேலும், இலங்கை முஸ்லிம் சமூகம் ஆட்சிக்கு வரும் எல்லா அரசாங்கங்களுடனும் ஒத்துழைப்புடனேயே செயற்பட்டு வந்துள்ளது. எனவே, தற்போதைய அரசாங்கம் மற்றும் உரிய அதிகாரிகள் முஸ்லிம்களுடைய உரிமைகள் மற்றும் அடையாளங்கள் விடயத்தில் எவ்வித அநீதியும் நடக்காமல் இருப்பதை உத்தரவாதப்படுத்துமாறும் அதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டிக் கொள்வதோடு, ஈஸ்டர் தின தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் குற்றவாளிகளை உலகிற்கு தெரியப்படுத்தி அவர்களுக்குரிய தண்டனையை வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கின்றோம்.


எல்லாம் வல்ல அல்லாஹ் நம் தாய்நாட்டில் அமைதி, சுபீட்சம் மற்றும் அபிவிருத்தியை ஏற்படுத்தி அனைத்து விதமான தீங்குகளை விட்டும் நம்மனைவரையும் பாதுகாப்பானாக.


வஸ்ஸலாம்.


அஷ்ஷைக் எம்.ஜே. அப்துல் ஹாலிக்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.