முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடனான சந்திப்பு

அக் 11, 2018

 

2018.10.10 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமைக் காரியாலயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்-ஷைக் அகார் முஹம்மத் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்த கலந்துரையாடலின் வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலளர் அஷ்-ஷைக் முபாறக் அவர்கள் நிகழ்த்தினார்கள். பொதுப்பணிகளில் தம்மை ஈடுபடுத்த சந்தர்ப்பம் கிடைத்திருப்பது அல்லாஹ்வின் அருள் எனவும், எமது பாதுகாப்புக்களை இஸ்லாம் கூறுகின்ற துஆக்களை ஒதுவதின் மூலமாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டு வருகை தந்தவர்களை வரவேற்றுக் கொண்டார்.

தொடர்ந்தும் தலைமை உரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்-ஷைக் அகார் முஹம்மத் அவர்கள் வழங்கினார்கள். அவர் தனதுரையில் இந்நாட்டு முஸ்லிம்கள் பல  உரிமைகளையும் சலுகைகளையும் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.இவற்றைப் பெற்றுத்தந்த நமது முன்னோருக்கும் நாட்டுக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பான விவகாரம் ஷரீஆ துறை அறிஞர் மட்டத்திலும் துறை சார்ந்தோர் மட்டத்திலும் பேசப்பட்டு தீர்வுகள் பெறப்பட வேண்டிய  ஒன்று இது பற்றி பொது வெளியில் அலச வேண்டிய அவசியம் இல்லை என்பதே எமது நிலைப்பாடாக  இருந்து வந்தது.

சட்டத் திருத்தம் தொடர்பில் மிகப் பெரும்பாலான விடயங்களில் அனைவர் மத்தியிலும் உடன்பாடே காணப்படுகின்றது. காலத்துக்கு தேவையான நடைமுறைக் கேற்ற பல சீர்திருத்தங்களிலும் கருத்தொற்றமை நிலவுகின்றது. சில விடயங்களில் நிலவும் கருத்து வேறுபாடுகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் அமர்ந்து தீர்த்துக் கொள்ள முடியும் என நாம் நம்புகின்றோம். அந்த வகையில் தொடர்ந்து கலந்துரையாடல்களை நடாத்தி வருகின்றோம்.

 ஷரீஆவை அணுக ஒரு மன்ஹஜ்-வழிமுறை இன்றியமையாததாகும்.இல்லாத போது பெரும் குழப்ப நிலையே உருவாகும்.இந்த வகையில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஷரீஆ, பிக்ஹு சார்ந்த விவகாரங்களுக்கான மன்ஹஜாக ஷாபிஈ மத்ஹப் அமைவதே  ஏற்புடையதும்  நடைமுறை சாத்தியமானதுமாகும்.முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்ட  ஒரு மத்ஹபின் அடிப்படையிலேயே முஸ்லிம் தனியார் சட்டம் அமைந்திருப்பதை காணமுடியும்.

இறுதி நபித்துவத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சக்திகள் விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் கரிசனை கொள்ள வேண்டும்  என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் முஸ்லிம் விவாக விவாகரத்து சம்பந்தமான தெளிவு ஒன்றை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிச் செயலாளர் அஷ்-ஷைக் முர்ஷித் அவர்கள் வழங்கினார்கள். அவர் தனதுரையில் பின்வரும் நான்கு விடயங்கள் கட்டாயமாக இந்த திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

  • காழி நீதி மன்றங்களினதும் காழி நீதிபதிகளினதும் தரம் அதிகரிக்கப்பட வேண்டும்.
  • காழி நீதி மன்ற மேல் சபைகளில் பெண்களின் பிரதி நிதித்துவம் இடம் பெற வேண்டும்.
  • மதா கொடுப்பனவு சட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும்.
  • பெண்களின் திருமண வயது 12 இலிருந்து 16 ஆகவும், ஆண்களின் திருமண வயது 12 இலிருந்து 18 ஆகவும் அதிகரிக்கப்பட வேண்டும்.

அதே போன்று பின்வரும் விடயங்களின் மார்க்க தெளிவுகளையும் முன்வைத்தார்.

  • காழிக்கு முன்னால் தலாக் கூறுவது.
  • பதியப்படாத நிகாஹ்கள் செல்லுபடியற்றவை .
  • திருமண வயதெல்லை.
  • பஸ்கு விவாகரத்திற்கு மதா கொடுப்பனவு கொடுத்தல்.
  • வலியின் அவசியம்.

அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது கருத்துக்களை  தெரிவிக்க நேரம் வழங்கப்பட்டது. தன் போது பலரும் தமது சந்தேகங்களை கேட்டறிந்து கொண்டதோடு உரிய முறையில் இந்த சட்ட திருத்தம் இடம் பெற வேண்டுமெனவும் குறிப்பிட்டனர்.

இறுதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஹாஷிம் ஷூரி அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

 

Last modified onசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018 11:57

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.