முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிக்கை

நவ 09, 2016

இலங்கையில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களால் பின்பற்றப்பட்டு, பேணப்பட்டுவந்த சட்டமாக முஸ்லிம் தனியார் சட்டம் காணப்படுகின்றது. அன்று தொட்டு இன்று வரை நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த இந்த சட்டத்தைத் தொடர்ந்தும் பேணிப்பாதுகாப்பது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

சர்வதேச அழுத்தம் காரணமாக அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் தீய சக்திகளின் தூண்டுதல்கள் காரணமாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதை  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஷரீஆவிற்கு முரணில்லாத வகையில் தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. இதன் ஒரு கட்டமாகவே 2009 ஆம் ஆண்டு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஸலீம் மர்ஸுப் அவர்களின் தலைமையில் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கான திருத்தங்களை முன்மொழிவதற்கான ஒரு உப குழு நியமிக்கப்பட்டு, அதன் இறுதி அறிக்;கை தற்போது வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் சில சர்வதேச அழுத்தங்கள் காரணமாக முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்திற்கான புதியதொரு குழு நியமிக்கப்படுவது எவ்வகையிலும் பொருத்தமானதாக அமையாது என்பதை அரசாங்கத்திற்கு மிகவும் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தங்கள் இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக மேற்கொள்ளப்படாமலிருக்க உலமாக்கள், துறைசார்ந்தவர்கள் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விழிப்புடன் செயற்படவேண்டும். இவ்விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் உரிய தரப்பினருடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.

இஸ்லாம் சமூக நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை வலியுறுத்தும் மார்க்கமாகும். தீமையைச் சுட்டிக் காட்டும் போது மென்மையை கடைபிடிக்குமாறு இஸ்லாம் எமக்குப் போதிக்கின்றது. முஸ்லிம் சமூகம் தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள முன்னெடுக்கும் செயற்பாடுகள் இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டதாகவும் நிதானமானதாகவும் அமைய வேண்டும்.

இஸ்லாம் எமக்குக் கற்றுத்தந்துள்ள பேச்சு ஒழுங்குகளையும், உயரிய பண்பாடுகளையும் நிலைநிறுத்தாது நாம் செயற்பட்டால் அல்லது சமூக வலைத்தளங்களில் எழுதினால் இஸ்லாம் பற்றிய பிழையான புரிதலை மாற்றுமத சகோதரர்களிடையே ஏற்படுத்திய குற்றத்திற்கு நாம் ஆளாகிவிடுவோம். இவ்வாறான பிழையான நடவடிக்கைகளை ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் இவை இஸ்லாத்திற்கு எதிராக செயற்படும் கடும்போக்குவாதிகளுடைய தீய திட்டங்களை செயற்படுத்துவதற்கு வழியமைத்துக்கொடுப்பதாகவே அமையும் என்பதையும் ஜம்இய்யா கூறிக்கொள்ள விரும்புகின்றது.

அதேபோன்று ஒருசிலரின் இவ்வாறான தீவிர செயற்பாடுகள் மொத்த முஸ்லிம் சமூகத்தின் நடவடிக்கையாக ஒருபோதும் பார்க்கப்படக்கூடாது என்பதை ஜம்இய்யா வலியுறுத்தி கூறிக்கொள்கினறது. அத்துடன் பல்லாண்டு காலமாக இந்நாட்டில் முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் காணப்பட்டு வரும் ஒற்றுமையும் சகவாழ்வும் தொடர்ந்தும் பேணப்பட அரசாங்கம் உட்பட சகல தரப்பினரும் முனைப்புடன் செயற்படவேண்டும் என ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்   
பொதுச் செயலாளர்   
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onவியாழக் கிழமை, 10 நவம்பர் 2016 10:43

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.