உள்ளூராட்சித் தேர்தலில் மாவட்ட அல்லது பிரதேசக் கிளைகளின் பதவிதாங்குனர்கள் வேட்பாளர்களாகப் போட்டியிடல் தொடர்பாக

ஏப் 10, 2025

ACJU/NGS/2025/055
2025.04.10 (1446.10.11)

மேற்படி தேர்தலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மாவட்ட அல்லது பிரதேசக் கிளைகளின் பதவிதாங்குனர்கள் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றமை தொடர்பில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தொடர்ந்து தெளிவுகள் கோரப்பட்ட வண்ணமுள்ளதால் அது பற்றி கலந்தாலோசனை செய்வதற்காக கடந்த 2025.04.08 ஆம் தேதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை நிறைவேற்றுக் குழுவின் அவசரக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

அதில் உள்ளூராட்சித் தேர்தலில் ஜம்இய்யத்துல் உலமா சபையின் மாவட்ட அல்லது பிரதேசக் கிளைகளின் பதவிதாங்குனர்கள் வேட்பாளர்களாகக் களமிறங்கி உள்ளமை பற்றிப் பல்வேறு கேள்விகள் தலைமையகத்துக்கு தினமும் வந்து கொண்டிருக்கின்றமை பற்றி ஆராயப்பட்டது.

அத்துடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கடந்த 100 வருடங்களாக பக்கசார்போ அல்லது கட்சி அரசியல் சார்போ இன்றி இலங்கை முஸ்லிம்களுக்கு மார்க்க ரீதியிலான வழிகாட்டல்களைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது என்ற அடிப்படையில், மாவட்ட அல்லது பிரதேசக் கிளைகளின் பதவிதாங்குனர்கள் நேரடியாக கட்சி அரசியலில் ஈடுபட்டு வேட்பாளர்களாக செயல்படுகின்றமை ஜம்இய்யாவின் இலக்குகளை அடைந்து கொள்வதற்கும் அதன் கூட்டுப் பணிகளுக்கும் பாதகமாக அமையும் என்று அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எனவே, மேற்படி தேர்தலில் வேட்பாளர்களாக இருக்கும் பதவிதாங்குனர்கள் தாங்களாகவே தமது பதவியில் இருந்து விலகிக்கொள்ளல் வேண்டும் எனவும் அவ்வாறு விலகிக்கொள்ளாத பட்சத்தில் யாப்பின்,

'8 - 08 (இ) ஜம்இய்யாவின் நோக்கங்களை அடைவதற்குத் தடையாகவிருத்தல்' அல்லது

'9 - 25 (ஃ) பொதுவாக ஜம்இய்யாவின் குறிக்கோள்களை எய்துவதற்கு தேவையானதும் அல்லது இடைநேர்விளைவானதுமான வேறு எல்லாச் செயல்களையும் கருமங்களையும் செய்தல்'

'10 - 04 (ஈ) தனது கடமையைப் புரிய முடியாமை அல்லது மத்திய சபையின் கூட்டுப் பொறுப்மை மீறல்' அல்லது

'11-18 (ஈ) மாவட்டக் கிளையின் கூட்டுப் பொறுப்பை மீறல்' அல்லது

'11-33 (ஈ) தனது கடமையைப் புரிய முடியாமை அல்லது பிரதேசக் கிளையின் காரியக் குழுவின் கூட்டுப் பொறுப்பை மீறல்' அல்லது

'11-37 (ஐ) காலத்துக்குக் காலம் பிரதேசக் கிளையின் காரியக் குழுவால் தீர்மானிக்கப்படும் ஜம்இய்யாவின் குறிக்கோள்களுக்கு மாறுபடாத அனைத்துக் கடமைகளையும் அவர் செய்தல் வெண்டும்' அல்லது

'14 - ஜம்இய்யாவின் நோக்கத்தை அடைவதற்குத் தடையாகவிருத்தல்' என்ற யாப்பு விதிகளின் அடிப்படையிலும்

2000ஆம் ஆண்டின் – 51ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இலங்கை சனநாயக சோசலிஸக் குடியரசின் பாராளுமன்றத்தினால் கூட்டிணைக்கப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் எந்தப் பதவிதாங்குனர்களும் நேரடி அரசியலில் இது கால வரையில் ஈடுபடவில்லை என்பதுடன், இவ்வாறு அரசியலில் வேட்பாளர்களாக இருப்பது ஜம்இய்யாவின் இலக்குகளை அடைந்துகொள்வதற்கும் அதன் கூட்டுப் பணிகளுக்கு பாதகமாக அமையும் என்பதாலும் இவ்வாறு அரசியலில் ஈடுபடும் ஜம்இய்யாவின் மாவட்ட அல்லது பிரதேசக் கிளைகளின் பதவிதாங்குனர்கள் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது என்பதை இத்தால் உங்களுக்கு அன்புடன் அறியத் தருகின்றோம்.

 

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி

தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

Last modified onதிங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025 02:44

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.