அண்மையில் தாய்லாந்து, மியன்மார் ஆகிய நாடுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட பூகம்ப அனர்த்தத்தினால் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக 2025.04.04ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் மற்றும் ஊடகக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் ரிபாஹ் ஹஸன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தூதரக ஆலோசகர் கௌரவ ஆர்தித் பிரசார்ட்குல் அவர்களுடன் கலந்துரையாடிய ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அவர்கள் 'இத்துயர நிகழ்வு குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் இலங்கை முஸ்லிம் சமூகம் சார்பில் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டதுடன் தாய்லாந்து அரசாங்கத்திற்காகவும், மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த தூதரக ஆலோசகர் அவர்கள், வருகை தந்திருந்த ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கு முதலில் தனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்ததுடன் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை முஸ்லிம் சமூகம் காட்டும் அக்கறையை வெகுவாகப் பாராட்டினார்.
இதில், இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வலுவான வரலாற்று ரீதியான உறவுகள் குறித்தும் நினைவுகூரப்பட்டது.
- ACJU Media -