ACJU/FTW/2025/07-589/ORG – 02
2025.03.20 - 1446.09.19
2025.03.202025
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு
கேள்வி: மரணித்த முஸ்லிம் ஒருவரின் உடல் பாகங்கள் அல்லது எரிந்து சாம்பலாக பெறப்பட்டதை அடக்கம் செய்வது கட்டாயமாகுமா? அல்லது அவற்றை எந்த முறையில் அனுக வேண்டும் என்ற தெளிவை ஆதார பூர்வமாக எழுத்து மூலம் தந்துதவுமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்.
பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
மனிதன் உயிருடன் இருக்கும் போது கண்ணியமானவன் போன்றே, மரணித்த பின்பும் அவன் கண்ணியப்படுத்தப்பட வேண்டியவனாவான்.
அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் 'நாம் மனிதர்களைக் கண்ணியப்படுத்தியுள்ளோம்' என்று கூறுகின்றான்.
(அல்-இஸ்ரா : 70)1
'மரணித்தவரின் எலும்பை முறிப்பது, உயிருடன் இருப்பவரின் எலும்பை முறிப்பது போன்றாகும்.' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (ஸுனனு அபீ தாவூத்: 3207)2
அந்த அடிப்படையில், முஸ்லிமான ஒருவர் மரணித்து விட்டால் அவரது உடலைக் குளிப்பாட்டி, கபன் செய்து, தொழுகை நடாத்தி, முஸ்லிம்களது மையவாடியில் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்வது பர்ளு கிபாயாவாகும். இக்கடமைகளை முஸ்லிம்களில் ஒரு சிலர் நிறைவேற்றி விட்டாலும் போதுமானதாகும். நிர்ப்பந்த நிலைகளிலே தவிர இக்கடமைகளில் ஏதேனுமொன்று விடப்படுமேயானால் முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ்விடத்தில் குற்றவாளிகளாக ஆகிவிடுவார்கள்.3
மரணித்தவரை பூமியில் நல்லடக்கம் செய்வதே அடிப்படையாகும். இதற்கு பின்வரும் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் ஆதாரங்களாகும்.
مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً (سورة طه: 55 )
'இப்பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம் அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம், இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளியாக்குவோம்' என்று கூறுகிறான். (ஸூரா தாஹா: 55)
இவ்வசனத்தில் 'நீங்கள் மரணித்ததும் நாம் உங்களை பூமியினுள்ளே மீட்டுவோம்' என்று அல்லாஹ் கூறுவதன் மூலம், மரணித்த அனைவரும் பூமியின் பக்கம் மீட்டப்பட வேண்டும் என்ற கருத்தை அல்லாஹு தஆலா குறிப்பிடுகின்றான்.4
فَبَعَثَ اللَّهُ غُرَابًا يَبْحَثُ فِي الْأرْضِ لِيُرِيَهُ كَيْفَ يُوَارِي سَوْأَةَ أَخِيهِ (سورة المائدة: 31 )
பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். (ஸூரா அல்-மாஇதா: 31)
இந்த வசனத்தில் அல்லாஹு தஆலா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஒரு மகனுக்கு தனது சகோதரனை பூமியில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற முறையை ஒரு காகத்தை அனுப்பி கற்றுக் கொடுத்துள்ளான்.
மரணித்தவரை நல்லடக்கம் செய்வது மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்து என இமாம் இப்னுல் முன்திர், இமாம் அந்நவவி றஹிமஹுமுல்லாஹ் உள்ளிட்ட அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.5
அவ்வாறே, மரணித்தவரின் உடற்பாகங்கள், எலும்புகள் மற்றும் எச்சங்கள் ஏதும் பெற்றுக்கொள்ளப்பட்டால் அதனை அடக்கம் செய்வதும் அவசியமாகும் என மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதனை பின்வரும் நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன.
உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள், ஷாம் பிரதேசத்தில் முஸ்லிம்களது சில எலும்புகள் கிடைக்கப்பெற்ற பொழுது அவற்றுக்கு தொழுகை நடாத்தி அடக்கம் செய்துள்ளார்கள். அவ்வாறே, அபூ உபைதா றழியல்லாஹு அன்ஹு அவர்கள், ஷஹீதாக்கப்பட்டவர்களின் சில தலைகள் மாத்திரம் கிடைக்கப்பெற்ற போது அவற்றை அடக்கம் செய்தார்கள். மேலும், அப்துர் ரஹ்மான் இப்னு அத்தாப் றழியல்லாஹு அன்ஹு அவர்களது கை மாத்திரம் கிடைக்கப்பெற்ற பொழுது, ஸஹாபாக்களில் சிலர் அதனை அடக்கம் செய்தார்கள். இந்த நிகழ்வுகள் அனைத்தும் வரலாற்று நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.6
அவ்வகையில், விபத்து, தீ விபத்து போன்றவற்றினால் மரணித்த ஒருவரின் உடற்பாகங்கள் ஏதும் பெற்றுக்கொள்ளப்பட்டாலோ அல்லது எரிக்கப்பட்ட ஜனாஸாவின் பாகங்கள் ஏதும் கிடைக்கப் பெற்றாலோ அவற்றை அடக்கம் செய்வது கட்டாயமாகும்.7
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
அஷ்ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் - ஃபத்வாக் குழு பொதுச்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
-------------------------------------------------------------------------------------------------------------------------------
[1]وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ. (سورة الإسراء : 70)
[2] عَنْ عَائِشَةَ رضي الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ 'كَسْرُ عَظْمِ الْمَيتِ كَكَسْرِهِ حَيًّا"(سنن أبي داود : 3207)
[3] وَغُسْلُه أَيْ الْمَيتِ وَتَكْفِينُه وَالصَّلَاة عَلَيْهِ وَحَمْلُه (وَدَفْنُه فُرُوضُ كِفَايَة) لِلْإجْمَاع عَلَى مَا حَكَاه فِي أَصْلِ الرَّوْضَةِ وَلِلْأمَرِ بِهِ فِي الْخْبَارِ الصَّحِيحَة. (مغني المحتاج)
[4] وفِى تفسير الرازي ما نصه : أَمَّا قَوْلُهُ تَعَالَى: "وَفِيها نُعِيدُكُمْ " فَلَا شُبْهَةَ فِي أَنَّ الْمُرَادَ الْإِعَادَة إِلَى الْقُبُورِ حَتَّى تَكُونَ الْأرضُ مَكَانًا وَظَرْفًا لكل مَنْ مَاتَ إِلّا مَنْ رَفَعَهُ اللَّه إِلَى السَّمَاءِ،
[5] قال النووي رحمه الله: دفن الميت فرض كفاية بالإجماع. ((المجموع)) (5/282). وقال : (واعلم أن غسل الميت، وتكفينه، والصلاة عليه، ودفنه – فروض كفاية بلا خلاف). (المجموع) (5/128)
[6] (وان وجد بعض الميت غسل وصلي عليه لان عمر رضي الله عنه صلى علي عظام بالشام وصلي أبو عبيدة علي رؤس وصلت الصحابة رضي الله عنهم على يد عبد الرحمن بن عتاب بن أسيد القاها طائر بمكة من وقعة الجمل) (الشَّرْحُ) أَبُو عُبَيْدَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ هَذَا هُوَ أَحَدُ الْعَشَرَةِ الْمَشْهُودِ لَهُمْ بِالْجَنَّةِ وَاسْمُهُ عامر ابن عَبْدِ اللَّهِ بْنِ الْجَرَّاحِ وَعَتَّابُ بِفَتْحِ الْعَيْنِ الْمُهْمَلَةِ وَأَسِيدُ بِفَتْحِ الْهَمْزَةِ وَهَذِهِ الْحِكَايَةُ عَنْ يَدِ عَبْدِ الرَّحْمَنِ رَوَيْنَاهَا فِي كِتَابِ الْأَنْسَابِ للزبير بن بكر قَالَ وَكَانَ الطَّائِرُ نِسْرًا وَكَانَتْ وَقْعَةُ الْجَمَلِ فِي جُمَادَى سَنَةِ سِتٍّ وَثَلَاثِينَ وَاتَّفَقَتْ نُصُوصُ الشَّافِعِيِّ رَحِمَهُ اللَّهُ وَالْأَصْحَابُ عَلَى أَنَّهُ إذَا وُجِدَ بَعْضُ مَنْ تَيَقَّنَّا مَوْتَهُ غُسِّلَ وَصُلِّيَ عَلَيْهِ وَبِهِ قَالَ أَحْمَدُ وَقَالَ أَبُو حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ لَا يُصَلَّى عَلَيْهِ إلَّا إذَا وُجِدَ أَكْثَرُ مِنْ نِصْفِهِ وَعِنْدَنَا لَا فَرْقَ بَيْنَ الْقَلِيلِ وَالْكَثِيرِ (المجموع شرح المهذب)
[7] وَلَو وجد عُضْو مُسلم علم مَوته بِغَيْر شَهَادَة وَلَو كَانَ هَذَا الْجُزْء ظفرا أَو شعرًا صلى عَلَيْهِ أى الْجُزْء وجوبا بعد غسله مواراته بِخرقَة بنية الصَّلَاة على جملَته إِن كَانَت الْبَقِيَّة غسلت وَلم يصل عَلَيْهَا والا نوى الصَّلَاة على الْعُضْو فَقَط فان شكّ فِي غسل الْبَقِيَّة لم تجز نِيَّتهَا إِلَّا اذا علق وَيجب دفن هَذَا الْعُضْو أَيْضا وَمحل وجوب الصَّلَاة على الْعُضْو إِذا لم يصل على الْمَيِّت مَعَ هَذَا الْجُزْء والا فَلَا تجب وعَلى هَذَا فَمَا يُوجد الْآن فِي المدافن من أَجزَاء الْمَوْتَى الَّذين علمت الصَّلَاة عَلَيْهِم وغسلهم لَا يجب فِي تِلْكَ الْأَجْزَاء غير المواراة والدفن. (السراج الوهاج)