ACJU/FTW/2017/05-326
2017.05.18
ஸகாத்துல் பித்ரை பணமாகக் கொடுத்தல் சம்பந்தமான மார்க்கத் தீர்ப்பு
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
ஸகாத்துல் பித்ர் என்பது, ஷவ்வால் மாத தலைப் பிறை கண்டதும் வசதியுள்ளவர்கள் மீது கடமையாகும் ஓரு தர்மமாகும். இதற்கு ஸதகதுல் பித்;ர் என்றும் கூறப்படும்.
இதை நிறைவேற்றும் விடயத்தில் மார்க்க அறிஞர்களிடையே கருத்து வேற்றுமைகள் நிலவுகின்றன.
- இமாம் அபூஹனீபா றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸகாத்தல் பித்ரை நிறைவேற்றும் பொழுது அதன் பெறுமதியைக் கொடுக்கலாம் என்று கூறுகின்றார்கள்.
- இமாம் மாலிக், இமாம் ஷாபி, இமாம்; அஹ்மத் இப்னு ஹன்பல் போன்ற பெரும்பான்மையான மார்க்க அறிஞர்கள் பிரதான உணவாக உட்கொள்ளக்கூடிய தானிய வகையில் இருந்தே இது வழங்கப்பட வேண்டும் என்றும், இதற்கு மாற்றமாக அதன் பெறுமதியைக் கொடுப்பது கூடாது என்றும் கூறுகின்றனர்.
இதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கூறுகின்றனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஸாஃ அளவு பேரீச்சம் பழத்தை அல்லது ஒரு ஸாஃ அளவு வாற் கோதுமையை (Barley) ஸகாத்துல் பித்ராகக் கடமையாக்கினார்கள். என இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களது காலத்தில் தீனார், திர்ஹம் போன்ற நாணயங்கள் புழக்கத்தில் இருந்தும் கூட தானிய வகையில் இருந்தே ஸகாதுல் பித்ரைக் கடமையாக்கியுள்ளார்கள்.
மேலும், இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹிமஹுமுல்லாஹ் அவர்களிடம் ஸகாத்துல் பித்ரை திர்ஹமாகக் கொடுப்பது சம்பந்தமாகக் கேட்கப்பட்ட போது 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழி முறைக்கு மாற்றமாகக் கொடுத்தால் அது ஸகாத்துல் பித்ராக நிறைவேறமாட்டாதோ என்று நான் அஞ்சுகின்றேன்' என்று கூறினார்கள்.
இவ்வடிப்படையில், பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் கருத்தின்படி ஸகாத்துல் பித்ரை நிறைவேற்றும் போது பிரதான உணவாகக் கொள்ளப்படும் தானிய வகையில் இருந்து கொடுத்தல் வேண்டும். இதனை நிறைவேற்றும் போது ஒவ்வொருவரும் ஒரு ஸாஃ அளவு வீதம் கொடுத்தல் வேண்டும். ஒரு ஸாஃ என்பது 2.4 கிலோ கிராமாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)
தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் எம்.எல். எம். இல்யாஸ்
செயலாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாரக; (கபூரி)
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி
மேற்பார்வையாளர் - ஃபத்வாப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா