ACJU/FTW/2016/17/243
2016.08.06
கேள்வி: திருமண வைபவங்களை உணவகங்களில் நடாத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?
பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
திருமணம் என்பது முக்கியமான ஸுன்னத்துக்களில் ஒன்றாகும். இதன்மூலம் மார்க்கத்தில் அரைப்பகுதி பூர்த்தியாகின்றது. ஒரு மனிதன் தன்னை ஹராமை விட்டும் பாதுகாத்துக் கொள்வது, ஸாலிஹான குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது போன்ற நல்ல நிய்யத்துடன் திருமணம் செய்தால் அது ஒரு வணக்கமாகக் கணிக்கப்படும்.
எங்களது அனைத்துக் காரியங்களுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையில் அழகிய முன்மாதிரிகள் உள்ளன. திருமண விடயத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகான வழிகாட்டல்களைக் கூறியுள்ளதோடு வாழ்ந்தும் காட்டியுள்ளார்கள்.
ஒரு ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'நிச்சயமாக செலவு குறைந்த திருமணமே பரக்கத் நிறைந்து' என்று கூறியுள்ளார்கள். (அறிவிப்பாளர் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்னத் அஹ்மத்)
எனவே, திருமண வைபவங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல்களுக்கமைய சாதாரணமாகவும் வீண்விரயம் இன்றியும் அமைத்துக் கொள்வதே ஈருலக வாழ்விற்கும் வெற்றியாக அமையும்.
பொதுவாக நிகாஹ் வைபவங்களை ஷரீஆவிற்கு உட்பட்டதாக பொருத்தமான எந்த இடத்திலும் நடத்தலாம். என்றாலும், மஸ்ஜித்களில் நடாத்துவது ஸுன்னத் என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள். இதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொள்கின்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். 'திருமணத்தை பகிரங்கப்படுத்துங்கள். அதை மஸ்ஜித்களில் நடாத்துங்கள். மேலும் (மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகமாக (دف ஒரு பக்கம் திறந்த ரபான்களைத் தட்டுங்கள்'. (நூல் : திர்மிதி : 1089)
இந்த ஹதீஸை சில மார்க்க அறிஞர்கள் பலவீனமானது என்று கூறியிருந்தாலும், இன்னும் சிலர் குறிப்பாக இமாம் அல்-திர்மிதி ரஹிமஹுல்லாஹ் தனது கிரந்தத்தில் இந்த ஹதீஸ் 'ஹஸன்' உடைய அந்தஸ்தில் உள்ளது என்று கூறியுள்ளார்கள்.
திருமணம் மற்றும் வலீமா வைபவங்களை மதுபானம், பன்றி இறைச்சி போன்ற இஸ்லாம் தடைசெய்துள்ளவை பரிமாறப்படும் உணவகங்களில் நடாத்துவது முஸ்லிம்களுக்கு பொருத்தாமான ஒன்றல்ல. ஏனென்றால் எமது வைபவங்களில் ஹராமாக்கப்பட்ட இசை, மதுபானம், ஆண் பெண் கலப்பு இல்லாவிட்டாலும் அவ்வுணவகங்கள் பொதுவாக மேற்குறிப்பிடப்பட்ட பாவமான காரியங்கள் நடக்கக்கூடிய இடங்கள் என்பதால் அங்கு முஸ்லிம்கள் அத்தியாவசியத் தேவை மற்றும் நிர்ப்பந்த நிலைகளில் அன்றி சமுகமளிப்பது கூடாது.
அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:
"அல்லாஹ்வின் அடியார்கள் பாவமான காரியங்கள் நடைபெறும் இடத்திற்கு செல்லமாட்டார்கள், அவர்கள் வீணான காரியம் நடக்கும் இடத்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்." (அல்-குர்ஆன்)
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'மதுபானம் பரிமாறப்படும் இடங்களில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசிப்பவர்கள் உட்காரவேண்டாம்' என்றும் கூறியுள்ளார்கள்.
எனவே, திருமணம் மற்றும் வலீமா வைபவங்களை மதுபானம், பன்றி இறைச்சி போன்றவை பரிமாறப்படும் உணவகங்களில் நடத்துவதைத் தவிர்ப்பதுடன், அத்தியவசியத் தேவை அல்லது நிர்ப்பந்த நிலைகளில் அன்றி, அங்கு செல்வதையும் தவிர்த்துக் கொள்வது முஃமின்களைப் பொறுத்தவரையில் மிகவும் சிறந்த விடயமாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
- ACJU Fatwa Division -