ACJU/FTW/2024/40/572/
2024.10.30 (1446.04.26)
கேள்வி: தவாபுல் இஃபாழா செய்வதற்கு முன்னர் ஸஈ செய்வதற்கு அனுமதி உள்ளதா?
பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும் ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
ஹஜ்ஜுடைய அமல்களில் 'ஸஃபா' மற்றும் 'மர்வா' ஆகிய இரு மலைகளுக்கும் மத்தியில் தொங்கோட்டம் ஓடுவதற்கு 'ஸஈ' என்று சொல்லப்படும். ஹஜ் மற்றும் உம்ராவின் கடமைகள் நிறைவேறுவதற்கு ஸஈ செய்வது கட்டாயமாகும்.
இது தொடர்பாக அல்-குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآٮِٕرِ اللّٰهِۚ فَمَنْ حَجَّ الْبَيْتَ اَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ اَنْ يَّطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِيْمٌ (البقرة: 158)
"நிச்சயமாக 'ஸஃபா', 'மர்வா' (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன. எனவே, எவர்கள் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்வார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் (ஸஈ செய்தல்) குற்றமல்ல. இன்னும், எவரொருவர் உபரியாக நற்கருமங்கள் செய்கிறாரோ, (அவருக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியுடையனாகவும் (கூலி வழங்குபவனாகவும்) (அவருடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்." (ஸூரா அல்-பகரா : 158)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'மக்களே! ஸஈ செய்யுங்கள். நிச்சயமாக ஸஈ உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது.' 1 (ஸுனன் அத்-தாரகுத்னீ : 2582)
ஸஈ நிறைவேறுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அந்நிபந்தனைகளில் ஹஜ், உம்ராவின் கடமையான தவாப் அல்லது தவாபுல் குதூமின்2 பின்னர் ஸஈ செய்வதும் ஒன்றாகும்.3 ஹஜ், உம்ராவின் கடமையான தவாப் மற்றும் தவாபுல் குதூமை விட ஸஈயை முற்படுத்திச் செய்வதன் மூலம் ஸஈ நிறைவேறமாட்டாது.4
துல்-ஹஜ் பத்தாம் நாளில், ஜம்ரத்துல் அகபாவுக்கு கல் எறிதல், ஹத்யு அல்லது உழ்ஹிய்யாவை நிறைவேற்றல், தலை முடியைச் சிரைத்தல் அல்லது குறைத்தல், கடமையான தவாபைச் (தவாபுல் இஃபாழா) செய்தல், ஸஈ செய்தல் ஆகிய கடமையான அமல்கள் நிறைவேற்றப்படும்.5
எனினும், ஸஈயை முற்படுத்திச் செய்ய ஒருவர் நாடினால் அதனை தவாபுல் குதூமுக்குப் பின்னர் செய்வதற்கு அனுமதியுள்ளது.
1. உம்ரா மற்றும் ஹஜ் கடமைகளில் ஸஈ செய்வது தொடர்பான தனியான விளக்கம் பின்வருமாறு:உம்ராவுடைய கடமையை நிறைவேற்றக் கூடியவர் இஹ்ராமுடைய நிய்யத் வைத்து தவாப், ஸஈ, தலை முடியைச் சிரைத்தல் அல்லது குறைத்தல் ஆகியவற்றை நிறைவேற்றுவார். உம்ராவை நிறைவேற்றக் கூடியவருக்கு தவாபை விட ஸஈயை முற்படுத்திச் செய்வதற்கு முடியாது.
2. ஹஜ்ஜை 'தமத்துஃ'6 முறையில் நிறைவேற்றக்கூடிய ஒருவர் மீக்காத்தில் உம்ராவுக்காக நிய்யத் வைத்து உம்ராவை முதலில் நிறைவேற்றி விட்டு ஹஜ்ஜுடைய அமல்களை ஆரம்பிக்கும் வரை இஹ்ராமைக் களைந்து கொள்வார். பின்னர் தான் இருக்கும் இடத்திலிருந்து ஹஜ்ஜுக்காக நிய்யத் வைத்து ஹஜ்ஜுடைய அமல்களான அரபாவில் தரித்தல், முஸ்தலிபாவில் இரவு தரித்தல், ஜம்ரத்துல் அகபா மற்றும் ஏனைய ஜம்ராக்களுக்கு கல் எறிதல், மினாவில் இரவு தரித்தல், ஹத்யு அல்லது உழ்ஹிய்யாவை நிறைவேற்றல், தலை முடியைச் சிரைத்தல் அல்லது குறைத்தல், கடமையான தவாபைச் (தவாபுல் இஃபாழா) செய்தல், ஸஈ செய்தல் ஆகியவற்றை நிறைவேற்றுவார்.
ஆகவே, குறித்த தமத்துஃ முறையில் ஹஜ்ஜை நிறைவேற்றுபவருக்கு தவாபுல் இஃபாழாவை விட ஸஈயை முற்படுத்திச் செய்வதற்கு முடியாது. உம்ராவை நிறைவேற்றும் போது அதன் கடமையான தவாபுக்குப் பின்னர் ஒரு ஸஈயும், ஹஜ்ஜை நிறைவேற்றும் போது தவாபுல் இபாழாவுக்குப் பின்னர் மற்றுமொரு ஸஈயும் செய்வது இவரின் மீது கட்டாயமாகும்.7
3. ஒருவர் ஹஜ்ஜை 'இப்ராத்'8 அல்லது 'கிரான்'9 ஆகிய முறைகளில் நிறைவேற்றும் போது மீக்காத்தில் இஹ்ராமுடைய நிய்யத் வைத்து மக்காவிற்கு நுழைந்ததும் தவாபுல் குதூம் செய்து விட்டு ஹஜ்ஜுடைய நாட்களில் அரபாவில் தரித்தல், முஸ்தலிபாவில் இரவு தரித்தல், ஜம்ரத்துல் அகபா மற்றும் ஏனைய ஜம்ராக்களுக்கு கல் எறிதல், மினாவில் இரவு தரித்தல், ஹத்யு அல்லது உழ்ஹிய்யாவை நிறைவேற்றல், தலை முடியைச் சிரைத்தல் அல்லது குறைத்தல், கடமையான தவாபைச் (தவாபுல் இஃபாழா) செய்தல், ஸஈ செய்தல் ஆகியவற்றை நிறைவேற்றுவார்.
குறித்த நபர் தவாபுல் இஃபாழாவை விட ஸஈயை முற்படுத்தி தவாபுல் குதூமுக்குப் பின்னர் செய்து கொள்வதற்கும் முடியும். எனினும், அதனை அரபாவில் தரிப்பதற்கு முன்னர் செய்தல் வேண்டும்.10 தவாபுல் குதூமுக்குப் பின்னர் ஸஈ செய்து விட்டால் தவாபுல் இஃபாழாவுக்குப் பின்னர் அதனை மீட்டுவது (மக்ரூஹ்) வெறுக்கத்தக்கதாகும்.11
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்!
அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
-----------------------
[1] عن صفية رضي الله عنها قالت: أخبرتني نسوة من بني عبد الدار اللائي أدركن رسول الله ﷺ،...... "يَا أَيُّهَا النَّاسُ اسْعَوْا فَإِنَّ السَّعْيَ قَدْ كُتِبَ عَلَيْكُمْ" (سنن الدارقطني: 2582)
[2] (தவாபுல் குதூம் என்பது ஹஜ், உம்ராவுடைய நிய்யத் இல்லாமல் அல்லது ஹஜ்ஜுடைய நிய்யத்தை வைத்து அரஃபாவில் தரிக்க முன்னர் மக்காவில் நுழையக்கூடிய ஒவ்வொருவரும் செய்யக்கூடிய ஸுன்னத்தான தவாபாகும்.)
[3] (وشرطه) ليقع عن الركن (أن يبدأ) في الأولى وما بعدها من الأوتار (بالصفا)،… (وأن يسعى بعد طواف ركن أو قدوم)؛ لأنه الوارد عنه ﷺ بل حكي فيه الإجماع فلا يجوز بعد طواف نفل كأن أحرم من بمكة بحج منها ثم تنفل بطواف وأراد السعي بعده كما في المجموع (تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي)
[4] لَوْ سَعَى قَبْلَ الطَّوَافِ لَمْ يَصِحَّ سَعْيُهُ عِنْدَنَا وَبِهِ قَالَ جُمْهُورُ الْعُلَمَاءِ وَقَدَّمْنَا عَنْ الْمَاوَرْدِيُّ أَنَّهُ نَقَلَ الْإِجْمَاعَ فِيهِ وَهُوَ مَذْهَبُ مَالِكٍ وَأَبِي حَنِيفَةَ وَأَحْمَدَ (المجموع شرح المهذب - ٨/٧٨ — النووي (ت ٦٧٦)
[5] (وَهَذَا) الَّذِي يُفْعَلُ يَوْمَ النَّحْرِ مِنْ أَعْمَالِ الْحَجِّ أَرْبَعَةٌ، وَهِيَ (الرَّمْيُ وَالذَّبْحُ وَالْحَلْقُ وَالطَّوَافُ يُسَنُّ تَرْتِيبُهَا كَمَا ذَكَرْنَا) وَلَا يَجِبُ (مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج)
(فَإِذَا حَلَقَ أَوْ قَصَّرَ دَخَلَ مَكَّةَ وَطَافَ طَوَافَ الرُّكْنِ)….(وَسَعَى) بَعْدَهُ (إنْ لَمْ يَكُنْ سَعَى) بَعْدَ طَوَافِ الْقُدُومِ كَمَا مَرَّ، وَهَذَا السَّعْيُ رُكْنٌ كَمَا سَيَأْتِي (ثُمَّ يَعُودُ) مِنْ مَكَّةَ (إلَى مِنًى) قَبْلَ صَلَاةِ الظُّهْرِ بِحَيْثُ يُصَلِّي الظُّهْرَ بِهَا لِلِاتِّبَاعِ رَوَاهُ مُسْلِمٌ عَنْ ابْنِ عُمَرَ (مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج)
[6] ஒருவர் மீக்காத்திலிருந்து உம்ராவை மட்டும் வைத்து செய்து உம்ரா செய்துவிட்டு இஹ்ராமைக் களைந்து கொள்வார். பின்னர் மக்காவிலேயே ஹஜ்ஜுக்காக நிய்யத் வைத்து இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜுடைய அமல்களை நிறைவேற்றுவார்.
[7] (الثَّالِثُ: التَّمَتُّعُ) وَيَحْصُلُ (بِأَنْ يُحْرِمَ بِالْعُمْرَةِ) فِي أَشْهُرِ الْحَجِّ (مِنْ مِيقَاتِ بَلَدِهِ) أَوْ غَيْرِهِ (وَيَفْرُغَ مِنْهَا ثُمَّ يُنْشِئَ حَجًّا مِنْ مَكَّةَ) أَوْ مِنْ الْمِيقَاتِ الَّذِي أَحْرَمَ بِالْعُمْرَةِ مِنْهُ أَوْ مِنْ مِثْلِ مَسَافَتِهِ أَوْ مِيقَاتٍ أَقْرَبَ مِنْهُ. (مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج)
[8] ஒருவர் மீக்காத்திலிருந்து ஹஜ்ஜை மட்டும் நிய்யத் வைப்பதற்கு இஃப்ராத் என்று சொல்லப்படும்.
[9] ஒருவர் மீக்காதிலிருந்து உம்ரா மற்றும் ஹஜ் இரண்டையும் சேர்த்து நிய்யத் வைப்பார். ஆனால், ஹஜ்ஜின் கிரியைகளை மட்டும் செய்வார். (ஹஜ்ஜின் அமல்களிலேயே உம்ராவும் நிகழ்ந்துவிடும்).
[10] وأن يسعى بعد طواف ركن أو قدوم بحيث لا يتخلل بينهما الوقوف بعرفة (منهاج الطالبين وعمدة المفتين في الفقه ١ஃ٨٧ — النووي (ت ٦٧٦)
[11] (وَمَنْ سَعَى بَعْدَ) طَوَافِ (قُدُومٍ وَلَمْ يُعِدْهُ) أَيْ لَمْ يُنْدَبْ لَهُ إعَادَتُهُ بَعْدَ طَوَافِ الْإِفَاضَةِ بَلْ يُكْرَهُ؛ «لِأَنَّهُ ﷺ وَأَصْحَابَهُ لَمْ يَسْعَوْا إلَّا بَعْدَ طَوَافِ الْقُدُومِ» رَوَاهُ مُسْلِمٌ (تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي ٤/١٠٠ — ابن حجر الهيتمي (ت ٩٧٤)